Published:Updated:

புத்தம் புது காலை : ஶ்ரீரங்கம் துலுக்க நாச்சியார் கோயிலும், ஈகைத் திருநாள் தியாகமும்!

ஈகை - பக்ரீத் பெருநாள்
ஈகை - பக்ரீத் பெருநாள்

டெல்லி அரசவையில் அனைவருக்கும் முன்னால், பாண்டிய நாட்டிலிருந்து தான் கொண்டு வந்த அளவற்ற செல்வத்தை சுல்தானுக்குப் பரிசளிக்கிறான் மாலிக் காஃபூர்.

கடலுக்குள் பிரிவும் இல்லை.. கடவுளில் பேதமும் இல்லை... எல்லோரும் கொண்டாடுவோம்!
கவிஞர் கண்ணதாசன்

ஸ்ரீரங்கம் செல்லும் போதெல்லாம், கட்டாயமாக தரிசனம் செய்தே ஆக வேண்டும் என்று அம்மா எங்களை அழைத்துச் செல்லும் இடம் ‘துலுக்க நாச்சியார் கோயில்’. ‘’ஏன் இங்கே?’’ எனக் கேட்டால், "துலுக்க நாச்சியார் கோயிலுக்கு வந்துட்டுப் போனா, குழந்தைங்களுக்கு சளி, காய்ச்சல், வேற எந்த ஏடு குணமும் வராது" என்று தீர்க்கமாகச் சொல்லுவார் அம்மா.

அது என்ன நாம் கும்பிடும் கோயிலில் ‘துலுக்க நாச்சியார்?’ என்றுகூட சிறுவயதில் தோன்றும். இன்று காலையில் "ஏகாதசின்னு பெருமாள் கோயிலுக்குப் போயிட்டு வந்தேன்" என்று ஒரு நர்ஸ் பிரசாதத்தைக் கொண்டுவந்து கொடுக்க, "இன்னிக்கு பக்ரீத் மேடம். சீக்கிரமே போகணும்" என்று இரவுப்பணி முடிந்த

இன்னொரு நர்ஸ் அனுமதி கேட்க, இந்த இருவருமாக சேர்ந்து எனக்கு துலுக்க நாச்சியாரை மீண்டும் நினைவுப்படுத்தினர்.

திருவரங்கத்தில் தர்மவர்மனால் ஏற்கெனவே எழுப்பப்பட்ட திருவரங்கனின் முதல் கோயில், காவிரி வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டதால், பின்னர் கிள்ளிவளவனால் புதுப்பிக்கப்பட்டதுதான் இப்போது இருக்கும் திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம்.

ஜடவர்ம சுந்தர பாண்டியனின் மறைவுக்குப் பின், தமிழர் ஆட்சி பல கைகளுக்கு மாறிட, இறுதியாக முகலாயர்களின் படையெடுப்பு 1310-ம் ஆண்டு நிகழ்ந்திருக்கிறது. டெல்லி சுல்தானின் தலைமைத் தளபதியான மாலிக் கஃபூரின் முரட்டுத்தனமான தாக்குதலில் பாண்டியர்கள் வீழ்ந்து விட, திருவரங்க கோயிலின் கருவூலத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஆபரணங்களைக் கைப்பற்றிய மாலிக் காஃபூர், தனது வெற்றியின் நினைவாக ஆலய உற்சவ மூர்த்தியின் ஐம்பொன் சிலையையும் டெல்லிக்குக் கொண்டு செல்கிறான்.

Srirangam
Srirangam

டெல்லி அரசவையில் அனைவருக்கும் முன்னால், பாண்டிய நாட்டிலிருந்து தான் கொண்டு வந்த அளவற்ற செல்வத்தை சுல்தானுக்குப் பரிசளிக்கிறான் மாலிக் காஃபூர். அப்போது மாலிக் காஃபூர் கொண்டுவந்த அரங்கன் சிலையும், அதன் முகத்தில் இருந்த வசீகரமான பொலிவும் சுல்தானின் செல்லமகள் சுரதானியை ஈர்க்க, அவள் "வாப்பா... இந்த அழகிய சிலையை நான் வைத்துக் கொள்கிறேன்!" என்று தந்தையிடம் கேட்கிறாள்.

தந்தையும் அதற்கு சம்மதிக்க, அரங்கனின் சிலையை எடுத்துக்கொண்ட சுரதானி, அதைத் தன்னுடனேயே தனது அறையில் வைத்துக் கொள்கிறாள். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல அரங்கனை சிலையாக இல்லாமல் உயிருள்ளதாகவே கருதுகிறாள் சுரதானி. அத்துடன் அரங்கனின் சிலையை நாளும் குளிப்பாட்டி, ஆடையுடுத்தி, மலர்களால் அலங்கரித்து, உணவு சமர்ப்பித்து என ஒவ்வொரு நாளும் விழித்தது முதல் உறங்கும்வரை கிடைக்கும்போது எல்லாம் அரங்கனுடன் நேரம் செலவிட ஆரம்பிக்கிறாள். மெல்ல, தன்னையறியாமல் அரங்கன் மீது காதலும் கொள்கிறாள்.

அதேசமயம், திருவரங்கத்திலிருந்து அரங்கனை மீட்க வேண்டி, தலைமை பட்டருடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற நாட்டியப் பெண்ணின் இசை நாட்டிய குழு டெல்லியை அடைகிறது. தங்களது இசையாலும், நடனத்தாலும் அவர்கள் சுல்தானை மகிழ்விக்க, அவர்கள் வேண்டிய பரிசுகளை வழங்க முன்வருகிறார் சுல்தான்.

ஆனால், தங்களுக்கு பொன்னும் பொருளும் வேண்டாம் என்று மறுத்த அவர்கள், அன்று ஏகாதசி என்பதால் தங்களுக்குப் பிடித்தமான அரங்கனின் சிலையைத் தந்தால் மகிழ்வோம் என்று சொல்ல, சுல்தானும் தனது வாக்குத் தவறாமல் இருக்க அதற்கு ஒப்புக்கொள்கிறார். தான் ஒப்புக்கொண்டாலும் எக்காரணம் கொண்டும் சிலையைக் கொடுக்க சுரதானி ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பதால், இளவரசி உறங்கியபின், அவளுக்குத் தெரியாமல் அவர் அரங்கனை எடுத்துக்கொடுக்க, திருவரங்கத்திற்குத் திரும்புகிறது தலைமை பட்டருடன் பயணித்த இசைக்குழு.

ரங்கநாதர்
ரங்கநாதர்

காலையில் கண்விழித்த இளவரசி சுரதானி அரங்கன் சிலையைக் காணவில்லை என பதறியழுகிறாள். சிலையை மீட்டுத்தருமாறு தந்தை சுல்தானைக் கேட்கிறாள். ஆனால் சுல்தான் அதை மறுத்துவிட மனமொடிந்த சுரதானி, உண்ணாமல், உறங்காமல், நோய்வாய்ப்பட.. வேறு வழியின்றி அவளையே தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி, திருவரங்கத்திலிருந்து அரங்கனைத் திரும்பவும் எடுத்துவரப் பணிக்கிறார் சுல்தான்!

அதேநேரம், இவர்கள் வரும் தகவலை முன்கூட்டியே அறிந்த திருவரங்கத்தின் தலைமை பட்டர், ஆலயத்திலேயே ஒரு வில்வமரத்தடியில் பத்மாவதித் தாயார் சிலையைப் புதைத்துவிட்டு, அரங்கனோடு தலைமறைவாகி விடுகிறார்.

குதிரையில் பயணித்து திருவரங்கம் வந்துசேர்ந்த சுரதானி, அரங்கன் கோயிலில் உற்சவர் சிலை இல்லாமல் கோயில் மூடியிருப்பதைக் கண்டு, அங்கேயே மயக்கமடைந்து விழுகிறாள். அவள் உடலிலிருந்து ஓர் ஒளி எழுந்து, அரங்கனுடன் சேர்ந்ததைக் கண்டதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

தங்களது பிரிய இளவரசி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபம் கொண்ட மாலிக் காஃபூர், கோயிலைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அங்கேயே கொன்றுவிடும்படி உத்தரவிட யுத்தம் அங்கு நடக்கிறது.

ஆனால், உண்மையை உணர்ந்த சுல்தானோ, தனது படையை டெல்லிக்குத் திரும்புமாறு உத்தரவிடுகிறார். மேலும் தனது மகளின் அரங்கன் மீதான அன்பை உணர்ந்த அந்த சுல்தான், அவள் இறந்த அந்த திருவரங்கக் கோயிலுக்கு ஏராளமான செல்வத்தை எழுதியும் வைக்கிறார்.

ஒருநாள், தலைமை பட்டரின் கனவில் தோன்றிய அரங்கன், சுரதானியை தனது மனைவியருள் ஒருவராக ஏற்றுக் கொண்டதை அறிவிக்க, அன்றிலிருந்து அரங்கனின் நாச்சியார்களில் ஒருவராக, 'துலுக்க நாச்சியாராக' பக்தர்களால் சுரதானி ஏற்றுக்கொள்ளப்படுகிறார்.

முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாது என்பதால் சிலையாய் வைக்காமல், அரங்கன் சந்நிதியிலேயே, அர்ச்சுன மண்டபத்திற்கு எதிராக சுரதானி என்ற துலுக்க நாச்சியாரை, சித்திரமாக வரைந்து சந்நிதியில் வைத்து இப்போதும் வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

மதம் கடந்த இந்த பக்தியின் அங்கீகாரமாக, இன்றும் மார்கழி மாத ஏகாதசியை ஒட்டி அனுசரிக்கப்படும் பகல்-பத்து திருநாள்களில், அரங்கனுக்குக் காலையில் இஸ்லாமியர் போல லுங்கி வஸ்திரமாக அணிவிக்கப்படுகிறது. அத்துடன் முகலாயர்களின் உணவுகளின் சைவமான ரொட்டியும், வெண்ணையும் முதலில் துலுக்க நாச்சியாருக்கு படைக்கப்பட்டு, பின்பு அரங்கனுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

இதேபோல கர்நாடகாவின் மேல்கோட்டை திருநாராயணபுரத்தில், செல்வநாராயணப் பெருமாளுடன் துலுக்க நாச்சியார் இரண்டறக் கலந்த வரலாறும் காணக் கிடைக்கிறது. இது கற்பனைக் கதையோ, உண்மையோ தெரியவில்லை. ஆனால், "ஏழைகளுக்கிரங்கும் பெருமாள், ஆபரணங்களுக்கு அழகுசேர்க்கும் பெருமாள், துலுக்க நாச்சியாரோடு பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்" என்று திருவரங்கனைத் தமிழில் துதிக்கும்போதே "கடலுக்குள் பிரிவும் இல்லை… கடவுளில் பேதமும் இல்லை" என்று கண்ணதாசன் சொன்னது சரித்திரம் முழுவதும் உண்மையாகக் காணக் கிடைக்கிறது.

பக்ரீத் பெருநாள்
பக்ரீத் பெருநாள்
freepik

"மைசூரில் திப்புவின் மானியமில்லா கோயிலும் இல்லை... நாயக்கர் படியில்லா பள்ளிவாசலும் இல்லை... இதுதான் நம்ம நாடு" என்ற அம்மா அடிக்கடி கூறுவார்.

அதேபோல நாமும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றுதான் வாழ்ந்து வந்திருக்கிறோம். இதோ… இறைவனின் தூதரான இப்ராஹிம் நபி, தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த தியாகத்தை நினைவுகூறும் இன்றைய 'ஈத் அல் அதா' (Eid ul Adha) எனும் பக்ரீத் தியாகத் திருநாளை இஸ்லாமிய சகோதரர்கள் கொண்டாடுகிறார்கள். இன்று அவர்கள் அனைவரும் சிறப்புத் தொழுகைகளை மேற்கொண்டு, குர்பானி கொடுத்து, சமைத்த உணவை நமக்கும் பகிர்ந்து, மத நல்லிணக்கத்தைப் போற்றி வருகின்றனர். அவர்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகளை சொல்வதோடு, நாமும் இன்றைய நாளை அவர்களோடு சேர்ந்து கொண்டாடுவோம்.

இன்றைய ஈத் அல் அதா நாளில், தியாகம் என்ற அடிப்படை மனித சாராம்சத்தைப் பின்பற்றி வாழ்வோம். தன்னலம் மறப்பதும் பிறர்நலம் பேணுவதும் மனித இயல்பென்று உணர்வோம்.

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு