Published:Updated:

`8.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்; தங்கும் அறைகளுக்கு ஆன்லைன் புக்கிங்!' - களைகட்டும் சபரிமலை சீசன்

சபரிமலையில் தங்கும் அறைகளை இணையதளம் மூலமாக புக் செய்துகொள்ள முடியும். புதிதாக 104 அறைகள் பக்தர்கள் பயன்பாட்டுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.

சபரிமலை
சபரிமலை

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை, நவம்பர் 16 -ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை தொடங்கியதிலிருந்து நேற்றுவரை 8.5 லட்சம் பக்தர்கள் சபரிமலை வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்களுக்கான அன்னதானம் மற்றும் தங்கும் அறைகள் வசதியை திருவாங்கூர் தேவஸம் போர்டு விரிவாகச் செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன்

சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் மகரவிளக்கு பூஜைவரை சுவாமி சந்நிதி திறந்திருக்கும். இந்த நாள்களில் பக்தர்கள் விரதமிருந்து இருமுடிகட்டி சபரிமலைக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்வர். இதையொட்டி பக்தர்கள் பூஜை மற்றும் தங்கும் அறைகள் ஆகியனவற்றை இணையத்திலேயே புக் செய்துகொள்ளும் வசதியைக் கடந்த சில ஆண்டுகளாக டிடிபி (TDB) வழங்கிவருகிறது. இந்த ஆண்டு அதற்கான அறிக்கையை தேவஸம் போர்டு நேற்று வெளியிட்டது. இதில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சபரிமலையில் உள்ள விடுதி அறைகளை https://www.onlinetdb.com/tdbweb/dist/login என்ற இணையதளத்தில் புக் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

குருசாமியைக் கேளுங்கள்... சபரிமலை விரத மகிமைகளும் பக்தர்களின் கேள்விக்கான பதிலும்!

புதிதாக 104 அறைகள் பக்தர்கள் பயன்பாட்டுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அறைகளின் வாடகை ரூ.350 ல் இருந்து 2,200 வரை உள்ளது. இந்தக் கட்டணத்தை நேரடியாக சபரிமலையில் இருக்கும் தங்கும் விடுதி மையத்திலேயே செலுத்தலாம்.

சபரிமலை
சபரிமலை

ஓர் அறையில் 4 பேர்வரை தங்கலாம். அதற்குமேல் கூடுதலான எண்ணிக்கையில் பக்தர்கள் தங்கினால் அதற்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டும். 12 முதல் 16 மணி நேரம் வரை அறையில் புக் செய்துகொள்ள முடியும். அனைத்து அறைகளிலும் படுக்கை மற்றும் குளியலறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

`டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம்'- திருப்பதி, சபரிமலை கோயில்களில் நடைசாத்தப்படும் நேர விவரம்!

சின்முத்ரா, சஹ்யாத்ரி, பிரவணம், ஶ்ரீமாதா, ஶ்ரீ மணிகண்டா உள்ளிட்ட 11 கட்டடங்களில் உள்ள மொத்தம் 446 அறைகளை நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் பக்தர்கள் புக் செய்துகொள்ளலாம். 15 நாள்கள் முன்னதாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

சபரிமலை
சபரிமலை

மேலும் புகார்கள் மற்றும் தகவல்களுக்கு support@onlinetdb.com என்ற இ மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது.