Published:Updated:

கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்

ஹஜ் பயணம்
ஹஜ் பயணம் ( மாதிரி புகைப்படம் )

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அந்நாட்டு அரசு.

இஸ்லாமியர்கள், தங்கள் வாழ்நாளில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் ஹஜ் புனிதப் பயணமும் ஒன்றாகக் கூறப்படுகிறது. அதன்படி இஸ்லாமிய நாள்காட்டியின் கடைசி மாதமாக துல்ஹஜ் மாதத்தில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும். இந்த மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்தும் சுமார் 20 லட்சம் பேர் சவுதியின் மெக்கா நகரில் இணைந்திருப்பார்கள். இந்த ஆண்டு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்த வருடம் வெளிநாட்டுப் பயணிகள் ஹஜ் வருவதற்குத் தடை விதித்துள்ளது சவுதி அரேபிய அரசு.

ஹஜ் பயணிகள்
ஹஜ் பயணிகள்
மாதிரி புகைப்படம்

மேலும் சவுதியில் உள்ளவர்கள் மற்றும் அங்கிருந்தும் வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த வருடம் 1,000 பேர் மட்டுமே ஹஜ் செல்ல வேண்டும் அப்போதுதான் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது சுலபமாக இருக்கும் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹஜ் பயணம் தொடர்பாக இன்னும் பல கடுமையான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை. பயணம் மேற்கொள்ள உள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு முடிவுகள் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

Vikatan

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹஜ் சென்று திரும்பும் அனைவரும் கட்டாயம் 14 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். தனிமனித இடைவெளி மிக மிக அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன சவுதி அரசின் வரலாற்றில் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ள வெளிநாட்டினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் தொற்றுநோய் காரணமாக இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹஜ்
ஹஜ்

சவுதி அரேபியா முழுவதும் இதுவரை சுமார் 2,53,349 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,523 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,03,259-ஆகவும் உள்ளது. தற்போது அங்கு 47,567 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு