Published:Updated:

வள்ளலாருக்காக வாழ்ந்து மறைந்த மகான்; ஊரன் அடிகளுக்கு முதல்வர் முதல் ஆதீனங்கள் வரை அஞ்சலி!

ஊரன் அடிகள்

அந்தக் காலத்தில் நிதி அளிப்பவர்களும் பிற சமயங்களுக்கு நிதி அளித்தார்களே தவிர சன்மார்க்க சமயத்துக்கு நிதி அளிக்க முன்வரவில்லை. அப்போது ஊரன் அடிகள் பெரும்பாடுபட்டு நிதி சேர்த்து வடலூரில் தொடர்ந்து அன்னதானம் நடத்தப் பாடுபட்டார்.

வள்ளலாருக்காக வாழ்ந்து மறைந்த மகான்; ஊரன் அடிகளுக்கு முதல்வர் முதல் ஆதீனங்கள் வரை அஞ்சலி!

அந்தக் காலத்தில் நிதி அளிப்பவர்களும் பிற சமயங்களுக்கு நிதி அளித்தார்களே தவிர சன்மார்க்க சமயத்துக்கு நிதி அளிக்க முன்வரவில்லை. அப்போது ஊரன் அடிகள் பெரும்பாடுபட்டு நிதி சேர்த்து வடலூரில் தொடர்ந்து அன்னதானம் நடத்தப் பாடுபட்டார்.

Published:Updated:
ஊரன் அடிகள்
1858... வள்ளல் பெருமான் சென்னையிலிருந்து வடலூருக்குப் பயணம் செய்கிறார். பாண்டிச்சேரி, கடலூர் வழியாக அவர் பயணம் தொடர்கிறது.

வழியில் கருங்குழி என்னும் ஊர். அந்த ஊரில் வள்ளல் பெருமானின் பெருமையை அறிந்த பக்தர் வேங்கட ரெட்டியார் என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் வள்ளலாரைத் தம் வீட்டில் தங்கியிருந்து செல்லுமாறு உபசரித்தார். முதலில் இரண்டு நாள்கள் தங்கியிருக்கும்படி கேட்டார். அதன்பின் அங்கிருந்து செல்லவே கூடாது என்று தன் பாசத்தால் தடுத்தார். வள்ளல்பெருமான் கருங்குழியில் ரெட்டியார் இல்லத்தில் தங்க நேர்ந்தது. 1858 முதல் 1867 வரை வள்ளல் பெருமான் அந்த வீட்டில் தங்கியிருந்தார்.

ஊரன் அடிகள்
ஊரன் அடிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்கு தங்கியிருந்தபோது அவர் நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம். தண்ணீரில் விளக்கெரிந்த அற்புதம் நிகழ்ந்தது அந்த வீட்டில்தான். இவையெல்லாம்விட அந்த வீட்டுக்கு இன்னொரு முக்கியமான பெருமை உண்டு. திருவருட்பாவின் நான்கு திருமுறைகளை வள்ளல் பெருமான் வெளியிட்ட இடமும் ஆறாம் திருமுறை எழுதப்பட்ட இடமும் அந்த வீடுதான். வடலூர் சபைக்கு நிகராகப் போற்றப்பட வேண்டிய இடமாக அந்த வீடு மாறியது. ஆனால் காலத்தின் கோலத்தில் அந்த வீடு பாழ்பட்டது. வள்ளலார் நினைவைப் போற்றும் விதமாக அதைப் பராமரிக்க எவரும் இல்லை. அப்போது அந்த ஊருக்கு வந்த அடிகள் ஒருவர் அந்த வீட்டைத் தன் சொந்தப் பணத்தில் வாங்கி சீர்திருத்தி இந்த நாட்டுக்கு அர்ப்பணித்தார். அவர் வேறு யாருமல்ல ஊரன் அடிகளேயாவார். இன்று கருங்குழியில் அறநிலையத்துறை வசம் இருக்கும் அந்த நினைவிடத்தை, வாங்கிப் புதுப்பித்து அர்ப்பணித்தவர் ஊரன் அடிகள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊரன் அடிகள் என்ற பெயரைக் கேட்டவுடன் வள்ளலாரின் நினைவு வரும். காரணம் ஊரனடிகளின் தோற்றமும் ஏறக்குறைய வள்ளலாரைப் போன்றே வெள்ளை ஆடை உடுத்தி நெற்றி நிறையத் திருநீறு பூசி இருப்பார். 1933-ம் ஆண்டு மே 22-ம் தேதி மரபான சைவக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் குப்புசாமி. சிறு வயதுமுதலே சைவ சமயத்தின்பால் பெரும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். 1955 முதல் 12 ஆண்டுகள் நகராட்சி ஆய்வாளராகப் பணியாற்றியவர் தன் பணிக்காலத்தில் செல்லும் இடங்களிலெல்லாம் இருக்கும் ஆலயங்களை வழிபட்டு அதுகுறித்த செய்திகளையும் சேகரித்து வந்தார். திருமுறைத் திரட்டுகளைப் படிக்க ஆரம்பித்தார். அது அவரை வள்ளலாரின் சன்மார்க்க சபை நோக்கி இழுத்தது.

வள்ளலார்
வள்ளலார்

இவரின் சமய அறிவைக் கண்ட புகழ்பெற்ற சில ஆதீனங்கள் இவரை ஆதீனமாகித் தலைமை ஏற்கும்படி வரவேற்றன. ஆனால் அவ்வாறு ஒரு மடத்துக்குத் தலைமை ஏற்றுவிட்டால் வள்ளல் பெருமானின் புகழை உலகெங்கும் பரப்ப முடியாது என்ற சிந்தனையில் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார். 1968-ம் ஆண்டு முதல் வடலூரையே தன் சொந்த ஊராக மாற்றிக்கொண்டவர். 1970-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் சமரச சன்மார்க்க சபையின் அறங்காவலராக இருந்தவர். இன்றைக்கு சபைக்கு ஏராளமான சொத்து இருக்கலாம். செல்வம் சேரலாம். ஆனால் அந்தக் காலத்தில் சபையில் வருமானம் குறைவாக இருந்தது.

அந்தக் காலத்தில் நிதி அளிப்பவர்களும் பிற சமயங்களுக்கு நிதி அளித்தார்களே தவிர சன்மார்க்க சமயத்துக்கு நிதி அளிக்க முன்வரவில்லை. அப்போது ஊரன் அடிகள் பெரும்பாடுபட்டு நிதி சேர்த்து வடலூரில் தொடர்ந்து அன்னதானம் நடத்தப் பாடுபட்டார். சந்தா முறையை உருவாக்கி ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை நிர்ணயித்து அடியவர்கள் விரும்பும் நாளில் அவர்கள் சார்பாக அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக சபையின் நிதி நிலையைச் சரிசெய்தார்.

ஊரன் அடிகள் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது அவர் எழுதிய, தொகுத்த பல்வேறு நூல்கள் தாம். இதில் முக்கியமானது அவர் வெளியிட்ட திருவருட்பா திரட்டு. வள்ளலார் எழுதிய அருட்பாக்களை முறையாகத் தொகுத்து அவற்றை ஆறு திரட்டுகளாக வெளியிட்டார். இன்றுவரை அந்தப் பணி மிகவும் சிறப்பான ஒன்றாகப் போற்றப்படுகிறது. தமிழ் அறிஞர்களில் பலர் அவர் பதம் பிரித்து இவர் வெளியிட்ட முறையைப் போற்றினார்கள்.

இதுகுறித்து அருட்பா பதிப்பகத்தின் எம்.ஏ. வெங்கட், “திருவருட்பா பதிப்பில் ஊரன் அடிகள் செய்த பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. வள்ளலாரின் ஆறாயிரம் பாடல்களையும் முறைப்படுத்தி எண் வரிசையிட்டு அதாவது ஒன்று முதல் 5897 பாடல்கள் வரை முறைப்படுத்தி வெளியிட்டார். அந்த நேர்த்தி ஒரு அரசாங்கம் பெரும் மொழி ஆய்வு நிறுவனம் கொண்டு செய்ய வேண்டிய பணி. அதைத் தனி ஒருவராகச் செய்தார். இதை வெளியிடத் தன் சொத்தின் பெரும்பங்கைச் செலவு செய்தார். அவருக்குப் பொள்ளாச்சி மகாலிங்கம் உள்ளிட சில செல்வந்தர்கள் உதவி செய்தனர். வள்ளலாருக்கு என்று தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் அவர். வள்ளலாரின் கையெழுத்துப் பிரதிகள் இன்று வடலூரில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறதே அது ஊரன் அடிகளாரின் முயற்சியால் நிறைவேறியது. அப்படிப்பட்டவரின் மறைவு சன்மார்க்கத்துக்குப் பேரிழப்பு” என்று கூறினார்.

வள்ளலாருக்காக வாழ்ந்து  மறைந்த மகான்; ஊரன் அடிகளுக்கு முதல்வர் முதல் ஆதீனங்கள் வரை அஞ்சலி!

இவரது சாதியும் மதமும், சேக்கிழாரும் வள்ளலாரும், வீரசைவ ஆதீனங்கள் போன்ற நூல்கள் தகவல் களஞ்சியங்களாக விளங்குபவை. இவர் வீட்டில் இருக்கும் நூலகத்தில் பல அரிய நூல்கள் உள்ளன. நூல்களுக்கு இடையே உள்ள சின்ன இடத்தில்தான் அவர் வாசம் செய்தார்.

இவரின் சமதர்மக் கொள்கை அரசியல் தலைவர்கள் முதல் ஆதீன கர்த்தர்கள் வரை அனைவரையும் இவர் மேல் மரியாதைகொள்ளச் செய்தது. சாதி வேறுபாடுகளைக் கடிந்து பேசும் இவரின் பேச்சைக் கலைஞர் கருணாநிதி மிகவும் ரசித்துக் கேட்பாராம். இன்று ஊரன் அடிகளின் மறைவுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்துத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஊரன் அடிகளின் மறைவுக்கு அஞ்சலிச் செய்தி வெளியிட்ட தவத்திரு குன்றக்குடி பென்னம்பல அடிகளார்,

“தவத்திரு ஊரன் அடிகள் மறைந்துவிட்டார் என்ற செய்தி பேரிடியாய் நம்மைத் தாக்குகிறது. சன்மார்க்க உலகத்திற்கு சமய உலகத்திற்குத் தகை சான்ற தமிழ்ப் பேரறிஞராக சன்மார்க்கப் பேரறிஞராகத் தமிழ் கூறு நல்லுலகத்தின் தனிப்பெரும் புலவராக விளங்கிய தவத்திரு ஊரன் அடிகள் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். குறிப்பாக, அவர் இளமைக் காலத்தில் பூர்வாசிரமத்தில் நிர்வாகத் துறையில் பணியாற்றினாலும் முத்திரை பதிக்கத்தக்க வகையில் சமய உலகத்திற்கு அற்புதமான படைப்புகளைத் தந்தவர். குறிப்பாக சைவ சமய ஆதீனங்களின் வரலாறு, வீர சைவ ஆதீனங்களின் வரலாறு அவர் தந்த மிகப்பெரிய கொடைகளாகும். அதற்காகத் தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களும் அவருக்கு நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன. தான் ஏற்றுக்கொண்ட பணியை துறவறப்பணியை வள்ளலார் தடத்தில் ஆழங்காற்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்த அந்தப் பெருந்துறவி மறைந்து விட்டார்; ஆன்மிக உள்ளங்களில் நிறைந்துவிட்டார். ஈடுசெய்ய முடியாத அந்தப் பேரிழப்பில் துயருறும் அனைவருக்கும் ஆறுதல் கூறி, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். நம்முடைய தவத்திரு ஊரன் அடிகளின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இன்ப அமைதி பெறப் பிரார்த்திக்கிறோம்” என்று கூறியுள்ளார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

ஊரன் அடிகளுக்கு விழா எடுக்க வேண்டும் என்று பலரும் கேட்கும்பொழுதெல்லாம்,

“2023 - ம் ஆண்டு வள்ளலாரின் 200-ம் ஆண்டு. பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் 100வது ஆண்டு. எனக்கு 90-ம் ஆண்டு நிறைவு. அந்த ஆண்டை இந்த மூன்றும் சேர்ந்த பெருவிழாவாகக் கொண்டாடலாம்” என்று சொல்லிவந்தார் ஊரன் அடிகள். ஆனால் இன்று அவர் இல்லை. தமிழக அரசு அவரின் விருப்பத்தை நிறைவேற்றி அவர் விரும்பிய அந்த விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பது அடியார்களின் கோரிக்கை.