Published:Updated:

பல்லவர் கால அய்யனார் சிற்பம் வடநெற்குணத்தில் கண்டுபிடிப்பு... சிறப்புகள் என்னென்ன?

அய்யனார்
அய்யனார்

அய்யனார் தலையொட்டி சாமரமும் குடையும் காட்டப்பட்டுள்ளன. அய்யனாரின் இடப்புறம் அழகிய குதிரையும் பீடத்தின் அருகில் நாய்களும் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத்தின் கலைநயத்தை நோக்கும்போது இது பல்லவர் காலத்தியதாகக் கருதலாம்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் வடநெற்குணம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

திண்டிவனம் – மரக்காணம் சாலையில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் வடநெற்குணம் உள்ளது. இவ்வூரில் தொன்மையான சிற்பம் இருப்பதை அன்னம்பாக்கம் கு.தனபால் அளித்த தகவலின்படி உ.வே.சாமிநாதையர் நூல்நிலையக் காப்பாட்சியர் கோ.உத்திராடம் தொல்லியல் ஆய்வாளர் ப.பூபாலன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அய்யனார்
அய்யனார்

இதுகுறித்து ஆய்வாளர் கோ. உத்திராடத்திடம் கேட்டோம்.

"இவ்வூர் தென்மேற்குப்பகுதியில் மாசியப்பன் கோயில் உள்ளது. இங்கு ஒரு பலகைகல்லில் புடைப்பு சிற்பமாக அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் நான்கு அடி உயரமுள்ள பலகைகல்லில் அய்யனார் அமர்ந்தகோலத்தில் காட்சியளிக்கின்றார். ஒரு பீடத்தின்மீது அமர்ந்தபடி வலக்கால் பீடத்தின்மேல் குத்திட்டவாறும் இடக்கால் மடித்தும் காணப்படுகின்றார். தலையில் சடாமுடி சூடியுள்ளதைக் காணலாம். காதுகள் நீண்டு தோள்பட்டைமீது படும்படி அமைக்கப்பட்டுள்ளது. காதுகளில் கனமான குண்டலம் அணிந்துள்ளார். வலதுகரம் செண்டினைப் பிடித்தநிலையிலும் இடக்கரம் தொடைமீது வைத்தநிலையிலும் அமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் அணிகலன், மார்பில் முப்புரிநூல், மேற்கையில் தோள்வளை, மணிக்கட்டில் காப்பு இடையில் இடைகச்சை ஆகியன அய்யனாரை அழகு செய்கின்றன.

அய்யனார் தலையொட்டி சாமரமும் குடையும் காட்டப்பட்டுள்ளன. அய்யனாரின் இடப்புறம் அழகிய குதிரையும் பீடத்தின் அருகில் நாய்களும் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத்தின் கலைநயத்தை நோக்கும்போது இதைப் பல்லவர் காலத்தியதாகக் கருதலாம்.

கோ. உத்திராடம்
கோ. உத்திராடம்

விழுப்புரம் மாவட்டத்தில் பல்லவர் கால அய்யனார் சிற்பங்கள் ஆலகிராமம், கிளியனூர், நெற்குணம், செண்டியம்பாக்கம், தென்பேர், பிடாகம், கொண்டங்கி, ஒருகோடி, சித்தேரிக்கரை ஆகிய ஊர்களில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வடநெற்குணத்தில் கண்டறியப்பட்டுள்ள அய்யனார் சிற்பம் பல்லவர் காலத்தைச் சார்ந்தவையாகும். இவ்வூரில் சோழர்கால கொற்றவை, விஷ்ணு ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன" என்று கோ. உத்திராடம் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு