Published:Updated:

பழநியில் பஞ்சாமிர்த தட்டுப்பாடு; ஏமாற்றத்துடன் திரும்பும் பக்தர்கள்! காரணம் என்ன?

பழநி
News
பழநி

பழநி என்றாலே அனைவரும் நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம்தான். போகரால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திடீர் பஞ்சாமிர்த தட்டுப்பாடு ஏன்?

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா மிகவும் முக்கியமானது. மொத்தம் பத்து நாள்கள் நடக்கும் திருவிழாவின் போது தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கு முன்னதாகவே கார்த்திகை, மார்கழியில் விரதமிருந்து பொங்கல் பண்டிகைக்கு முன்பே பாதயாத்திரையாக வந்து செல்லும் பக்தர்களும் அதிகம்.

இந்நிலையில், கொரோனா பரவல் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது.

பழநியில் கூட்ட நெருக்கடி
பழநியில் கூட்ட நெருக்கடி
இதனால் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தைப்பூசத்துக்கு முன்பாகவே பக்தர்கள் வரத்தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் பழநியில் பெரும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இத்தகையைச் சூழலில், இன்று அதிகாலை தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது.

திருவிழாவின் 6 ஆம் நாளான ஜனவரி 17 ஆம் தேதி திருக்கல்யாணமும், 7 ஆம் நாளான ஜனவரி 18 ஆம் தேதி தைப்பூச தோரோட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகளும் நடக்கும்.

ஆனால், தைப்பூசத் திருவிழா நடைபெறும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையம்
பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையம்

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பழநியில் கடந்த 3 நாள்களில் மட்டும் 10 லட்சம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். திடீரென பக்தர்கள் கூட்டம் அதிகமானதால், தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மட்டுமல்லாது, பழநி அடிவாரத்தில் தனியார் கடைகளிலும் பஞ்சாமிர்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் பஞ்சாமிர்தம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

பழநி என்றாலே அனைவரும் நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம்தான். போகரால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பஞ்சாமிர்த் தட்டுப்பாடு குறித்து அங்கு வந்திருந்த வத்தலகுண்டுவைச் சேர்ந்த பக்தர் கோபால் என்பவரிடம் பேசினோம். "பழநி முருகனுக்கு முதல் முறையாக மாலை போட்டு விரதம் இருந்து பாதயாத்திரையாக நடந்து சென்று வழிபாடு செய்தேன். எங்கள் ஊரில் கிறிஸ்தவ நண்பர்கள் அதிகம். அவர்களுக்கும் எங்கள் உறவினர்களுக்கும் மொத்தம் 25 டப்பா பஞ்சாமிர்தம் வாங்கி வரும்படி கேட்டிருந்தார்கள். ஆனால், பழநியில் ஒரு டப்பா கூட வாங்க முடியாமல் திரும்புவது வருத்தமளிக்கிறது'' என்றார்.

பழநி பஞ்சாமிர்தம்
பழநி பஞ்சாமிர்தம்

இதுகுறித்து பழநியில் பாரம்பரியமாக பஞ்சாமிர்த விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆண்டவர் ஸ்டோர் உரிமையாளர் சுப்பிரமணியிடம் பேசினோம். "எந்த நோக்கத்திற்காக கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டதோ அது நடக்காமல் போய்விட்டது. லாக்டௌன் அறிவிப்பாலும், தைப்பூசத்துக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பாலும் திடீரென பக்தர்கள் அதிகமாக வரத் தொடங்கிவிட்டனர். இதனால் தினந்தோறும் தயாராகி வரும் பஞ்சாமிர்தம் விற்பனைக்கு போதவில்லை. பழநி அடிவாரக்கடைகள் தயாரிக்கும் பஞ்சாமிர்தம், தேவஸ்தானம் தயாரிக்கும் பஞ்சாமிர்தம் எதுவும் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் வருத்தத்துடன் திரும்பிச் செல்வது இதுவே முதல் முறை" என்றார்.