Published:Updated:

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழா! - முதல்முறையாக மக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம்

கொடியேற்றம்
கொடியேற்றம்

உலகப் பிரசித்திபெற்ற, தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 438 வது திருவிழா கொடியேற்றம், வரலாற்றில் முதன்முறையாக மக்கள் பங்கேற்பின்றி தொடங்கியது.

தமிழகத்தின் பல கிறிஸ்துவ தேவாலயங்களில் மறையுரை என்பது காலையில் மட்டும்தான் நடக்கும். உலகிலேயே மதியம் மறையுரை நடக்கக்கூடிய ஒரே ஆலயம், இந்தப் பனியமய மாதா அன்னை ஆலயம் மட்டும்தான், அதேபோல மற்ற ஆலயங்களில் தினமும் ஒரே திருப்பலி மட்டும்தான் நடக்கும். ஆனால், ஆசியாவிலேயே இங்கு மட்டும்தான் தினமும் 8 திருப்பலிகள் நடக்கிறது. கிறிஸ்துவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், பர்தா அணிந்த முஸ்லீம் மக்களும் பிராத்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்கள் பிராத்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்தி ஜெபிப்பது கூடுதல் சிறப்பாகும்.

கடந்த ஆண்டு கொடியேற்ற நிகழ்வு
கடந்த ஆண்டு கொடியேற்ற நிகழ்வு

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் நடைபெறும். திருவிழாவின் 10-ம் நாள் விழாவில் நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ தேர்ப்பவனி நடைபெறும்.

Vikatan

உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாதாவை தரிசிக்க தூத்துக்குடிக்கு வருவார்கள். இந்த ஆண்டு, கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் எனவும், வீடுகளில் இருந்தே பிராத்தனை செய்யும்படியும் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அறிவித்திருந்தார். அதன்படி, வரலாற்றில் முதன்முறையாக மக்கள் பங்கேற்பின்றி தொடங்கியது கொடியேற்ற நிகழ்ச்சி. இன்று காலை திருப்பலி, கூட்டுத்திருப்பலிக்குப் பிறகு ஆலயத்தின் முன்உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.

இந்த ஆண்டு கொடியேற்றம்
இந்த ஆண்டு கொடியேற்றம்

தொடர்ந்து, பனியம அன்னையின் திருவுருவச்சிலைக்கு தங்கக்கிரீடம் அணிவிக்கப்பட்டது. இத்திருவிழா, இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சி முதல் 10 நாள் திருவிழாவில் நடைபெறவுள்ள அனைத்து திருப்பலிகளையும் மக்கள் வீடுகளில் இருந்தே பார்ப்பதற்கு வசதியாக உள்ளூர் தொலைக்காட்சிகள், சமூக வளைதளங்கள் மூலம் நேரலை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

``தூத்துக்குடியின் அடையாளங்களில் ஒன்றுதான் இந்த பனிமய அன்னை ஆலயம். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் வந்துவிட்டாலே மாதாக்கோயில் திருவிழாதான் நினைவுக்கு வரும். வெளியூர்களில் வசிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் திருவிழாவிற்காக குடும்பத்துடன் வந்துவிடுவார்கள். இந்த 10 நாளும் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். வேண்டிய வரம் தருவதால் ஆண்டுக்கு ஆண்டு மாதாவை தரிசனம் செய்ய குவியும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும். சாலையின் இருபுறமும் வழிநெடுகிலும் பலகாரக்கடைகள். பேன்சி கடைகள், விளையாட்டுச் சாமான்கடைகள் கடைகளாகத்தான் இருக்கும். பொழுதுபோக்கிறாக பொருள்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

மக்கள் கூட்டம் இல்லாத ஆலய வளாகம்
மக்கள் கூட்டம் இல்லாத ஆலய வளாகம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி 10-ம் நாள் நடக்கும். அதையொட்டி உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டும். கொடியேற்ற நாளில் மக்கள் ஒவ்வொருவரும் வாழைப் பழங்களையும், குடங்களில் பாலையும் எடுத்துவந்து கொடிமரத்தின் முன்பு வைத்து ஜெபிப்பர். பின்னர், கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்தபிறகு வந்திருப்பவர்களுக்கு ஒரு டம்ளர் பாலும், ஒரு பழத்தையும் கொடுப்பார்கள். மாதாவே அதை வழங்குவதாக நினைப்பார்கள். ஆனால், வரலாற்றிலேயே முதல்முறையாக மக்கள் இல்லாமல் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்திருக்கு. கொரோனாவும் ஒழிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்” என்றனர் ஊர்மக்கள் சிலர்.

அடுத்த கட்டுரைக்கு