திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம், ராமநவமி, யுகாதி, ஜன்மாஷ்டமி, தெப்போத்சவம், அனுமத் ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற பல உற்சவங்கள் சிறப்புடன் நடைபெறும். அவற்றில் குறிப்பிடத்தக்க ஓர் உற்சவம் பரிணயோத்சவம். பத்மாவதி பரிணயோத்சவம் எனப்படும் இந்த விழா மூன்று நாள்கள் திருமலையில் நாராயணகிரி வனத்தில் நடைபெறும்.
பரிணயோத்சவம் என்றால் கல்யாண உற்சவம் என்றுதான் பொருள். நாள்தோறும் திருமலையில் திருகல்யாண வைபவ உற்சவம் நடைபெற்றபோதும் இந்த உற்சவம் பத்மாவதி திருக்கல்யாணம் என்னும் பெயரில் சிறப்புடன் நடந்துவருகிறது.
பெருமாள் ஶ்ரீநிவாசனாக அவதரித்து ஆகாசராஜனின் புதல்வியான பத்மாவதியைத் திருமணம் செய்துகொண்ட வைபவத்தை கொண்டாடும் விதமாக இந்த மூன்று நாள் கல்யாண உற்சவம் நடத்தப்ப்டுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த உற்சவம் நடந்தப்படாமல் இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டிருப்பதால் நேற்று (மே - 10 ) இந்த வைபவம் தொடங்கியது. இந்த வைபவம் வரும் 12 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிகழ்வுக்காக நாராயணகிரி வனத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலர் அலங்காரங்களால் அந்த மண்டபமே எழில் கொஞ்சக் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மலையப்ப சுவாமி திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொள்ள சின்ன யானை வாகனத்தில் புறப்பட்டார். தாயார் இருவரும் தனிப் பல்லக்கில் புறப்பட்டு திருக்கல்யாணம் நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கே எதிர்கொலு எனப்படும் எதிர்கொண்டழைக்கும் வைபவம், வாரணம் ஆயிரம் ஆகிய வைபவங்கள் நடைபெற்றன. பிறகு சுவாமியையும் தாயாரையும் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளச்செய்தனர்.

பிறகு நான்கு வேதங்களும் பாராயணம் செய்யப்பட்டன. வசந்தா, கல்யாணி, பூபாளம், ஆனந்த பைரவி, காந்தாரி, மத்யமாவதி, நீலாம்பரி ஆகிய ராகங்கள் இசைக்கப்பட்டன. பின்பு அன்னமாச்சார்யரின் கீர்த்தனங்கள் இசைக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்த வைபவத்தை தரிசனம் செய்தால் திருமணத் தடை உள்ளவர்களுக்கு தடைகள் நீங்கும் விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதிகம்.
இன்று மலையப்ப சுவாமி குதிரை வாகனத்திலும் நாளை கருட வாகனத்திலும் எழுந்தருள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உற்சவம் நடைபெறுகிற மூன்று நாள்களும் ஆர்ஜித சேவை மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.