நேற்று விஜயதசமியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கூத்தனூரில் அமைந்துள்ள சரஸ்வதி அம்மன் திருக்கோயிலில் வித்யாரம்பம் என்ற சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இங்கு வருகை புரிந்து சரஸ்வதி அம்மனை வழிபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள கூத்தனூரில் சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது. பழங்காலத் தமிழ்ப்புலவர் ஓட்டக்கூத்தர், இங்குள்ள சரஸ்வதி அம்மனை வழிபட்டதால் புலமை அடைந்ததாகப் புராண நூல்கள் பறைசாற்றுகின்றன. இதனாலேயே இந்த ஊருக்குக் கூத்தனூர் என அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதி அம்மனை வழிபட்டால், கல்வி அறிவும் கலைஞானமும் பெருக்கெடுக்கும் என நம்பப்படுவதால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெற்றோர்கள் பலர், தங்களது குழந்தைகளை இங்கு அழைத்து வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறும் நாள்களில் ஏராளமான மாணவர்கள் இக்கோயிலுக்கு வருகை புரிந்து சரஸ்வதி அம்மனை வழிபடுவதுண்டு. குறிப்பாக, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் சமயங்களில் இங்கு மாணவர்களின் கூட்டம் அலைமோதும்.

ஆண்டுதோறும் இத்திருக்கோயிலில், விஜயதசமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் விஜயதசமி விழாவை முன்னிட்டு, சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பாததரிசன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான மக்கள் பக்திப் பரவசத்தோடு கலந்துகொண்டு சரஸ்வதியை வழிபட்டார்கள். புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இங்கு வருகை புரிந்து சரஸ்வதி அம்மனை வழிபட்டனர்.
நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், சிலேட் ஆகியவற்றை சரஸ்வதி அம்மனின் திருவடியில் வைத்து பூஜை செய்து எடுத்துச் சென்றார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை, சரஸ்வதி அம்மனை வழிபட செய்து, நெல் மற்றும் சிலேட்டில் தமிழ் எழுத்துகளை எழுத வைத்து வித்யாரம்பம் செய்தனர். பள்ளி மற்றும் கல்லூரிகளை நடத்துபவர்களும் இங்கு வந்து வழிபாடு செய்தனர்.