Published:Updated:

`பொன்னியின் செல்வன்' வந்தியத்தேவன் வழியில்...! - வரலாற்றுப் பயணம்- 2 #Day 3

சோழப் பேரரசன் ராஜராஜன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தில், பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பயணித்த வழியில் வாசர்களுடனான வரலாற்றுப் பயணம்...

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

பிற்காலச் சோழ மரபின் வரலாற்றைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்கு அமரர் கல்கியின் `பொன்னியின் செல்வன்’ புதினத்துக்கு உண்டு.

வரலாற்றுப் பயணம்
வரலாற்றுப் பயணம்

சரித்திரச் சம்பவங்கள் நடைபெற்ற வீராணம், கடம்பூர் மாளிகை, திருப்புறம்பியம், பழையாறை, தஞ்சை, கோடியக்கரை என்று பல பகுதிகளுக்கும் தம் எழுத்து மூலம் நூற்றாண்டுகள் கடந்து அழைத்துச் சென்றிருப்பார், கல்கி.

அப்படியானதோர் உன்னதமான அனுபவத்தை விகடன் வாசகர்களுக்கும் அளிக்கும் முயற்சிதான் விகடனின் `பொன்னியின் செல்வன்’ - வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு முதல் பயணம் பிரமாண்டமாக நடந்தேறியது. அடுத்து ராஜராஜ சோழனின் ஐப்பசி சதயத்தை முன்னிட்டு இரண்டாவது யாத்திரை இன்று இனிதே தொடங்கியிருக்கிறது. நவம்பர் 6, 7, 8 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகிறது இந்த யாத்திரை.

வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம்!

முதல் நாள்

வரலாற்றுப் பயணத்தில் முதல் நாள், வீராணம் ஏரி, காட்டுமன்னார் கோயில் அனந்தீஸ்வரர் ஆலயம், கடம்பூர் கரக்கோயில் ஆகியவற்றை வாசகர்கள் பார்வையிட்டனர்.

கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் கோமகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாசகர்களுக்கு மரபுச் சின்னங்கள் குறித்தும் கல்வெட்டுகள் குறித்தும் விளக்கமளித்தார். இத்துடன் வாசகர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். இந்த வரலாற்றுப் பயணத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட வாசகர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

வீராணம் ஏரி

சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது வீராணம் எனப்படும் வீர நாராயணன் ஏரி. ராஜாதித்ய சோழன் தன் தந்தை முதலாம் பராந்தக சோழனின் நினைவாக வெட்டப்பட்ட ஏரி இது. பராந்தக சோழரின் இயற்பெயர் வீரநாரயணன் ஆகும். இப்பெயரே வீரநாரயணன் ஏரி என அழைக்கப்பட்டது.

வீராணம் ஏரி
வீராணம் ஏரி

கடல் போலக் காட்சியளிக்கிறது வீராணம் ஏரி. பொன்னியின் செல்வன் புதினத்தில் வந்தியத்தேவனின் பயணம் ஆடிப்பெருக்கென்று வீராணம் ஏரிக்கரையிலிருந்துதான் தொடங்கும். வந்தியத்தேவன் புரவியில் பயணித்த அதே இடத்தில் பரவசத்துடன் வீராணம் ஏரியைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களுடன் கண்டுகளித்தார்கள்.

பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம் 2 --- வீர நாராயணன் ஏரி என்று அழைக்கப்படும் வீராணம்...

Posted by Sakthi Vikatan on Wednesday, November 6, 2019

மேலக் கடம்பூர்

மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலைப் பார்வையிட்டனர் வாசகர்கள். தேர் போன்ற அமைப்பில் எழுப்பப்பட்ட கரக்கோயில் இது. கல்வெட்டுகளும் சிற்பங்களும் நிறைந்த தலமும்கூட. இங்குள்ள தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி ராஜேந்திரனின் வடபுல படையெடுப்பில் வங்கத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. அமிர்தகடேஸ்வரர் கோயிலோடு இணைந்த கடம்பூரின் வரலாறு, தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தியின் சிறப்பு ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொண்டார்கள் வாசகர்கள்...

மேலக் கடம்பூர்
மேலக் கடம்பூர்

கீழக் கடம்பூர்

கடம்பூர் மாளிகை அமைந்திருந்த பகுதியில் எழுப்பப்பட்ட சிவாலயம் இது என்கிறார்கள் ஆய்வாளர்கள். வியக்க வைக்கும் சிற்பங்கள் நிறைந்த கோயில். இந்தத் தலத்தில் அமைந்திருக்கும் சிற்பங்களைத் தட்டினால் வெண்கல ஓசை வெளிப்படுகிறது. கோயில் கருவறையில் சுரங்க தரிசனம் மேற்கொண்டனர் விகடன் வாசகர்கள்.

கீழக் கடம்பூர்
கீழக் கடம்பூர்

அனந்தீஸ்வரர் ஆலயம்

காட்டுமன்னார் கோயிலில் உள்ளது அனந்தீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில்தான் ஆதித்த கரிகாலன் கொலை தொடர்பான கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு மேற்கே உள்ள கோஷ்டத்தில் கீழ்ப்புறமாக கல்வெட்டு உள்ளது.

`பொன்னியின் செல்வன்' வந்தியத்தேவன் வழியில்...! -  வரலாற்றுப் பயணம்- 2 #Day 3

ராஜராஜனின் தமையனான ஆதித்த கரிகாலனின் கொலைக்குக் காரணமானவர்கள், அவர்கள் தண்டிக்கப்பட்ட முறை ஆகிய செய்திகளைக் கொண்டிருக்கும் கல்வெட்டுகளைப் படித்து, அவற்றின் பின்னணி வாசகர்களுக்கு விளக்கப்பட்டது. வாசகர்கள் எழுப்பிய வரலாற்றுச் சந்தேகங்களுக்குப் பதிலளித்தார் கோமகன்.

இரண்டாம் நாள்

கயிலாசநாதர் கோயில்

ராஜராஜனின் பள்ளிப்படை அமைந்திருப்பதாகக் கருதப்படும் உடையாளூர் கிராமத்தில் உள்ள கயிலாசநாதர் கோயிலில் விகடன் வாசகர்கள். கயிலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள், ராஜராஜனின் பள்ளிப்படை தொடர்பாக கல்வெட்டுகளில் உள்ள தகவல்களை ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் கோ.ஜெயபாலன் வாசகர்களுக்கு விளக்கினார்.

கயிலாசநாதர் கோயில்
கயிலாசநாதர் கோயில்

மேலும் கயிலாசநாதர் தலத்தில் உள்ள குலோத்துங்கச் சோழனின் சிலையை வாசகர்கள் கண்டு வழிபட்டனர்.

ராஜராஜன் பள்ளிப்படை

உடையாளூர் பால்குலத்தம்மன் கோயில் தூணில் உள்ள குலோத்துங்கனின் கல்வெட்டில் ராஜராஜன் பற்றிய தகவல்கள் மற்றும் ராஜராஜனின் பள்ளிப் படைக் கோயிலாகக் கருதப்படும் சமாதியில் வாசகர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

பள்ளிப்படை
பள்ளிப்படை

நந்திபுர விண்ணகரம்

திருநந்திபுர விண்ணகரத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் கோயில். திவ்ய தேசங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் தலத்தை விகடன் வாசகர்கள் தரிசித்தபோது, பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவனின் புரவியை `குருதையா அல்லது கழுதையா’ என்று பழுவேட்டரையரின் வீரர்கள் வம்பிழுத்தது இந்த விண்ணகரக் கோயிலுக்கு முன்புதான் என்பது தெரிவிக்கப்பட்டது.

நந்திபுர விண்ணகரம்
நந்திபுர விண்ணகரம்

பழையாறை

சோழர்களின் தலைநகராக விளங்கிய பெருமையுடையது பழையாறை. பழையாறை சோமநாதர் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாசகர்களுக்கு பழையாறையின் பெருமை, வரலாற்றுத் தகவல்கள், பொன்னியின் செல்வன் நாவலில் பழையாறையில் நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவை விளக்கப்பட்டன.

பழையாறை
பழையாறை

பஞ்சவன் மாதேஸ்வரம்

பழுவேட்டரையர்கள் குலத்தில் பிறந்தவர் பஞ்சவன் மாதேவியார். இவர் ராஜராஜ சோழனின் மனைவிகளுள் ஒருவர். ராஜேந்திர சோழனின் சிற்றன்னை ஆவார். ராஜேந்திர சோழன் தனது தாய்க்குக் கூட பள்ளிப்படைக் கோயில் எழுப்பவில்லை.

பஞ்சவன் மாதேவியார்
பஞ்சவன் மாதேவியார்

ஆனால், தனது சிற்றன்னை பஞ்சவன் மாதேவியாருக்கு பள்ளிப்படைக் கோயில் எழுப்பி சிறப்பு செய்திருக்கிறார். அந்த அளவுக்கு சோழ வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றவர் பஞ்சவன் மாதேவியார். வாழைத் தோப்புகள் சூழ அமைந்திருக்கும் பஞ்சவன் மாதேஸ்வரத்தை விகடன் வாசகர்கள் பார்வையிட்டனர்.

தென்னகத்தின் வரலாற்றைத் திருப்பிப்போட்ட போர் திருப்புறம்பியத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் நடைபெற்ற போராகும். இந்தப் போரே பிற்காலச் சோழர்கள் எழுச்சிக்குக் காரணமானது. திருப்புறம்பியத்தில் போர் நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விஜயாலயன் பள்ளிப்படையில் விகடன் வாசகர்களுக்காக நடைபெற்ற கலை நிகழ்ச்சி...

தென்னகத்தின் வரலாற்றைத் திருப்பிப்போட்ட போர் திருப்புரம்பியத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் நடைபெற்ற போராகும்....

Posted by Sakthi Vikatan on Thursday, November 7, 2019

மூன்றாவது நாள்

தஞ்சைப் பெரிய கோயில்

முதல் இரண்டு நாள்கள் வீராணம் ஏரி, உடையாளூர், பழையாறை ஆகியவற்றைக் கண்டுகளித்த விகடன் வாசகர்கள் மூன்றாவது நாளாகத் தஞ்சையை அடைந்திருக்கிறார்கள்.

கோடியக்கரை

பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம் - 2 நிகழ்வில் விகடன் வாசகர்களுக்கு கோடியக்கரை குழவர் கோயிலில் நடைபெற்ற களரிப் பயிற்சி.களரியின் அடிப்படை, அதன் நன்மைகள் குறித்தும் எப்படிக் கற்றுக்கொள்ளத் தொடங்குவது என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம் - 2 நிகழ்வில் விகடன் வாசகர்களுக்கு கோடியக்கரை குழவர் கோயிலில்...

Posted by Sakthi Vikatan on Friday, November 8, 2019