Published:Updated:

மதுரை ஆதீனம்: செய்தியாளர் முதல் மடாதிபதி வரை - ஆன்மிகத்தில் புரட்சி செய்த அருணகிரிநாதர்!

சமய நல்லிணக்கத்துக்காக இயங்கியவர் என மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்குப் பலதரப்பினரும் அஞ்சலி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நேற்று இரவு 77 வயதில் காலமான மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் போல் பிரபலமான, பரபரப்பான மடாதிபதி தமிழகத்தில் யாரும் இல்லையென்று சொல்லலாம்.

அந்தளவுக்கு உலகத் தமிழர்களின் மொழி சார்ந்த நலன் சார்ந்த பிரச்னைகளில் துணிச்சலாகக் கருத்துகளைத் தெரிவித்து அரசியல் சார்ந்தும் இயங்கி வந்தவர் மதுரை ஆதீனம் என்றழைக்கப்பட்ட ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாசார்ய சுவாமிகள்.

மடாதிபதிகளின் பணி இறைவனுக்கு சேவை செய்வது மட்டுமில்லை. பாதிக்கப்படும் மக்களுக்காகக் களத்தில் இறங்கி சேவை செய்வதுதான் உண்மையான சேவை என்ற புதிய பாதயை வகுத்தவர்.

தஞ்சை மாவட்டம் சீர்காழியில் துறு துறு இளைஞனாக வலம் வந்த அருணகிரி, திராவிட இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவர். அதனால்தான் பள்ளி படிப்புடன் அரசியல், இலக்கியம், வரலாறு, சமய நூல்களை அதிகம் பயில்கின்ற வாய்ப்பு அவருக்கு அமைந்தது.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்

உலக விஷயங்களை கண நேரத்தில் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தவர், ஆங்கிலம் உட்படப் பிற மொழிகளில் நன்கு பேசும் திறமையுடையவர்.

இதழியல் ஆர்வத்தால் இளம் வயதிலயே மாலை நாளிதழில் நிருபராக சென்னையில் சில காலம் க்ரைம் பீல்டில் சிறப்பாகப் பணி செய்தார். அது மட்டுமில்லாமல் புல்லட் பிரியர். ஆன்மிக பணிக்கு வருவதற்கு முன் புல்லட்டில் பயணிப்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறார். அவர் பயன்படுத்திய புல்லட் இப்போதும் மதுரை மடத்தில் உள்ளது. அருண்கிரிநாதரின் அடுத்த இலக்கு அரசியலாகத்தான் இருந்திருக்கிறது.

இந்நிலையில் சைவ மடாதிபதிகளை வணங்கி சைவ நெறியை பின்பற்றும் இவரது தந்தை இராம குருசாமி, மகன் அருணகிரியை சைவ நெறியில் சிறந்து விளங்க வேண்டும் என்று முடிவு செய்து திருவாவடுதுறை ஆதின மடத்தில் சேர்ந்து சைவ சமயக் கல்வியை கற்க அனுப்பி வைத்தார்.

அப்போதே சைவ மத தத்துவத்தை நன்கு கற்றதோடு மட்டுமல்லாமல் பிற மத தத்துவங்கள், கடவுள் மறுப்பு தத்துவங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

இறுதி அஞ்சலி
இறுதி அஞ்சலி

தஞ்சை மாவட்டத்தில் சைவ சமயக் கல்வியை முடித்ததும் திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற மதுரை ஆதீன மடத்தில் அடியாராக சேர்க்கப்பட்டு அவரின் நெறி தவறா இறை பணியால் இளைய ஆதீனமாக 27.5.1975-ல் நியமிக்கப்பட்டார்.

மதுரை ஆதீன மடத்தின் 291வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் மரணம் அடைந்த பிறகு, 14.3.1980-ல் போட்டியின்றி மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார் அருணகிரிநாதர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்று முதல் அருணகிரிநாதர் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாசார்ய சுவாமிகள் என்று அழைக்கபட்டார்.

அதுவரை பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட மதுரை ஆதீனம், ஆட்சியாளர்களும் மக்களும் கவனிக்கும் முக்கிய மடமாக ஆனது.

இலங்கையில் இனப்படுகொலை தொடங்கிய 80 களில் சிங்கள அரசுக்கு எதிராகவும், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் பல்வேறு தமிழ் தேசிய, பெரியாரிய இயக்கங்களுடன் இணைந்து தமிழகமெங்கும் பரப்புரை செய்தார்.

மதுரை ஆதினம்
மதுரை ஆதினம்

அது மட்டுமில்லாமல் ஆதீன மடத்தை அனைத்து சாதியினரும் வந்துபோகும் வகையில் சமய புரட்சி செய்தார். மீலாது விழா, கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சமய நல்லிணக்க உரையாற்றினார்.

தமிழகம் மட்டுமில்லாமல் மொரிஷியஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சைவ நெறி பரப்பினார். பல கோயில்களில் தமிழில் குடமுழுக்க நிகழ்ச்சிகளை நடத்தினார்.

ஆன்மிகப் பணி; சைவ நெறி; மதுரை ஆதீனத்தின் 292-வது மடாதிபதி - அருணகிரிநாதர் காலமானார்!

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, கி.வீரமணி, பழ.நெடுமாறன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள், திரைத்துறைப் பிரபலங்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார்.

நித்யானந்தவை இளைய ஆதீனமாக அறிவித்ததுதான் அவர் மீது விமர்சனம் ஏற்படக் காரணமானது. அதை உணர்ந்து கொண்டு, நித்யானந்தா அறிவிப்பை ரத்து செய்தார்.

அதுபோல் சில நெருக்கடிகள் ஏற்பட்டதால், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அ.தி.மு.க-வுக்கு தேர்தல்களில் பிரசாரம் செய்ததும் அவர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதை உணர்ந்து கொண்டவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் பிரசாரம் செய்யவில்லை.

மதுரை ஆதினம்
மதுரை ஆதினம்

சில நிர்ப்பந்தங்களால் அவர் நியமித்த இளைய ஆதீனங்கள் குறித்த முடிவுகள் அனைத்தும் சர்ச்சைக்குள்ளானது. அதைத் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் ஆலோசித்து கடைசியாக திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரானை இளைய ஆதீனமாக நியமித்தபின் சர்ச்சைகள் முடிவுக்கு வந்தன.

நீண்ட காலமாக அவருக்கு இருந்து வந்த மூச்சுத்திணறல் பிரச்னையால் அவர் தற்போது இயற்கையோடு கலந்துவிட்டார். ஆனால், சர்ச்சைகளைக் கடந்த ஆதீனத்தின் தமிழ் பற்று, மத நல்லிணக்க முயற்சிகள் அவர் புகழை என்றும் பேசிக்கொண்டிருக்கும்.

அதை உறுதிப்படுத்துவது போல் அவருக்கு அஞ்சலி செலுத்த பல சமயத்தினரும், பல்வேறு சமூக அமைப்பினரும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இறுதி சடங்கு

மதுரை ஆதீன மடத்திலிருந்து மாசி வீதியில் பூப்பல்லக்கில் ஆதீனம் அருணகிரிநாதரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தற்போது முனிச்சாலை சந்திப்பில் உள்ள தினமணி தியேட்டர் இருந்த வளாகத்தில் அடக்கம் செய்யும் சடங்கு நடந்து வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு