புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் உள்ள கொப்பம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ஆண்டியப்ப ஐயனார் திருக்கோயில் பிரசித்தி பெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டம் நடைபெற்றது. அதன்பிறகு நீண்ட வருடங்கள் தேர்த் திருவிழாவானது நடைபெறவில்லை. இந்த நிலையில்தான், ஊர் மக்கள் சார்பில் கூட்டம் போடப்பட்டு மீண்டும், இங்கு தேர்த் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புதிதாகத் தேர் வடிவமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளோட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது, இந்தக் கோயிலில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு நடைபெறும் தேரோட்டம் என்பதால், பிரமாண்டத்தைக் காட்ட முடிவு செய்த மக்கள், தேர் வலம் வரும் போது, ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவ முடிவு செய்தனர். அதன்படி, பெங்களூருவிலிருந்து ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து வரப்பட்டு அதில் பூக்கள் நிரப்பப்பட்டு தேர் வலம் வரும் போது தேர் மீதும், தேரோட்ட வீதிகளிலும் பூக்கள் தூவப்பட்டன. இதனால் தேரானது பூ மழையில் நனைந்தது.
இந்த நிகழ்வினை பக்தர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்ததோடு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
