Published:Updated:

QR கோடு மூலம் உண்டியல் காணிக்கை செலுத்தும் வசதி - ஹைடெக்காக மாறும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்!

QR கோடு வசதி

QR கோடை பயன்படுத்தி பக்தர்கள் ஆன்லைன் மூலம் உண்டியல் காணிக்கை செலுத்தும் வசதி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் செய்யப்பட்டுள்ளது.

QR கோடு மூலம் உண்டியல் காணிக்கை செலுத்தும் வசதி - ஹைடெக்காக மாறும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்!

QR கோடை பயன்படுத்தி பக்தர்கள் ஆன்லைன் மூலம் உண்டியல் காணிக்கை செலுத்தும் வசதி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
QR கோடு வசதி

நாமக்கல் நகரில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோயில், தமிழகம் அளவில் பிரசித்திபெற்ற கோயிலாகும். இந்தக் கோயிலுக்குத் தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்கள். இங்கு வருகைதரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, இந்த கோயில் வளாகத்தில் ஆறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. பெரிய மால்கள் தொடங்கி சாதாரண பெட்டிக்கடை வரை UPI பணப்பரிவர்த்தனைக்கு மாறிவரும் சூழலில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகமும் ஹைடெக்குக்கு மாறியுள்ளது.

நாமக்கல் ஆஞ்சநேயர்
நாமக்கல் ஆஞ்சநேயர்

அதாவது, இங்கு வரும் பக்தர்கள் நேரடியாகக் கோயில் நிர்வாக வங்கிக் கணக்கிற்குக் காணிக்கையைச் செலுத்தும் வகையில், கோயில் வளாகத்தில் உள்ள இரண்டு உண்டியல்களில் 'QR' கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. இதைப் பக்தர்கள் ஸ்கேன் செய்து நேரடியாக வங்கி பரிவர்த்தனை மூலம் காணிக்கையைக் கோயிலுக்குச் செலுத்த முடியும். இதற்கான ஏற்பாட்டைக் கோயில் நிர்வாகம் மற்றும் நாமக்கல் தனியார் வங்கியினர் சேர்ந்து செய்துள்ளனர். இதன்மூலம், பணப்பரிவர்த்தனையை எளிமையாக்க முடியும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதோடு, QR கோடு மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் தொடக்க நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடந்தது. உதவி ஆணையர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குக் கண்காணிப்பாளர் மணிமாலா முன்னிலை வகித்தார். தனியார் வங்கியின் சேலம் மண்டல மேலாளர் ஜனார்த்தன், நாமக்கல் கிளை மேலாளர் கோபிநாத் மற்றும் வங்கி அதிகாரிகள் QR கோடு ஸ்டிக்கர்களை கோயில் அதிகாரிகளிடம் வழங்கினர். பின்னர், அந்த ஸ்டிக்கர்கள் அங்குள்ள இரண்டு உண்டியல்களில் ஒட்டப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது.

QR கோடு வசதி
QR கோடு வசதி

இதுகுறித்து பேசிய உதவி ஆணையர் இளையராஜா, "இதன்மூலம் பக்தர்கள் எளிதாக தங்கள் காணிக்கையைச் செலுத்த முடியும். வருங்காலங்களில் நாமக்கல் நரசிம்ம சாமி கோயிலிலும் QR மூலம் ஸ்கேன் செய்து காணிக்கையைச் செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நவீன முறை கண்டிப்பாகப் பக்தர்களிடம் வரவேற்பைப் பெறும்" என்றார்.