Published:Updated:

ராஜராஜ சோழன் 1036வது சதயவிழா: மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சாவூர் பெரிய கோயில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தஞ்சாவூர் பெரிய கோயில்
தஞ்சாவூர் பெரிய கோயில் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் பெரிய கோயில் வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு, தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் 1036 வது சதய விழா இன்று கொண்டாடப்பட்டது. இதற்காகப் பெரிய கோயில் மற்றும் ராஜராஜ சோழன் சிலைக்கு மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டதுடன் பெருவுடையாருக்கு 38 மங்களப் பொருள்களால் பேரபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ராஜராஜ சோழனே போற்றி கோஷங்கள் எழுப்பி பொதுமக்கள் சதய விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழன்

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளித்து உலகப் புகழ் பெற்றுத் திகழ்ந்து வருகிறது. எந்த விதமான தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் பிரமாண்டக் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் திறமையினை உலக வரலாற்று வல்லுநர்கள் இன்றைக்கும் மெய்சிலிர்க்க வியந்து பேசி வருகின்றனர். நீர் மேலாண்மை, கட்டடக்கலை எனப் பலவற்றில் சிறந்த ஆட்சியினை வெளிப்படுத்திய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.

அவர் பிறந்த நட்சத்திரத்தை வைத்து ராஜராஜசோழனுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடமாக கொரோனா பரவல் காரணமாக சதயா விழா பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதைத் தொடர்ந்து ராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை விமர்சையாகக் கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவித்து மரியாதை
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவித்து மரியாதை

இதற்காகத் தஞ்சை நகரில் பல்வேறு இடங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. மேலும் தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கோயிலுக்கு அருகில் உள்ள ராஜராஜ சோழன் சிலை மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட மின்னொளியில் ஜொலித்தன. இதனைத் தொடர்ந்து இன்று சதய விழா கொண்டாடப்பட்டது. காலை 6 மணிக்கு பெரியகோயிலில் மங்கள இசையுடன் சதய விழா துவங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்துக் கோயில் பணியாளர்களுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டன. பின்னர், தேவாரம் நுாலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, கோயிலின் உள் பிராகாரத்தில் ஊர்வலமாக கொண்டு வந்து, நந்தி மண்டபத்தில் பாராயணம் பாடினர். இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு, தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் சதய விழாக்குழு தலைவர் செல்வம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுர ஆதீனம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரிய கோயில்
பெரிய கோயில்

இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் குஜராத்திலிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்ட ராஜராஜ சோழன், உலோகமாதேவி உலோகசிலைகள் முன்பாக யானையின் மீது ஏற்றி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட கடங்களில் இருந்த புனித நீர் கொண்டு சிவாசார்யர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 38 மங்கள பொருள்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டன.

தொடர்ந்து மாலை, கோயிலில் உள் பிராகாரத்தில், ராஜராஜ சோழன் மற்றும் உலோகமாதேவிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு நடைபெற்றது. சதய விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருப்பதால் ஏராளமான பொதுமக்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலில் திரண்டு ராஜராஜ சோழன் சதய விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு