Published:Updated:

"கண்டராதித்த சோழர் பிறப்பு, தி.மலை வரலாற்றின் புதிய பக்கங்கள்!"– அரிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

நடுகல்லின் பின்புறமாக இருந்த கல்வெட்டு 1093 ஆண்டுகள் பழைமையானது. அதாவது, கி.பி.928-ம் ஆண்டில் பொறிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டில்தான், வரலாற்றுக்குப் பல புதிய தகவல்கள் தரும் செய்திகள் கிடைத்துள்ளன.

அண்மைக்காலமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல முக்கியத் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகள் ஆய்வாளர்கள் மூலம் கண்டறியப்பட்டு வருகின்றன. அவை, கல்வெட்டுகளாகவோ, ஓவியங்களாகவோ, சிற்பங்கள், சிலைகளாகவோ, நினைவுச் சின்னங்களாகவோ இருந்து நம் முன்னோர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. அந்த வரிசையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள 3 கல்வெட்டுகளும், சிற்பங்களும் பல அரிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. இதனைத் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக, இந்த ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் பேசினோம்.

“எங்களின் ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவர் அளித்த தகவலின் படி, நண்பர்களுடன் இணைந்து திருவண்ணாமலை நகரம், திண்டிவனம் சாலையருகே அமைந்துள்ள வேடியப்பன் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம். அங்கு, நடுகல் கல்வெட்டு, முதலாம் பராந்தகனின் கல்வெட்டு, அதன் எதிரே உள்ள சிலையில் ஒருவரியில் கல்வெட்டு என மொத்தம் 3 கல்வெட்டுகள் இருப்பதை முதலில் கண்டறிந்தோம்.

நடுகல்
நடுகல்

நடுகல்லின் பின்புறமாக இருந்த கல்வெட்டு 1093 ஆண்டுகள் பழைமையானது. அதாவது, கி.பி.928-ம் ஆண்டில் பொறிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டில்தான், வரலாற்றுக்குப் பல புதிய தகவல்கள் தரும் செய்திகள் கிடைத்துள்ளன.

ஸ்ரீ பராந்தக இருமுடி சோழனுக்கும் செம்பியன் மாதேவிக்கும் பிறந்தவர்தான் ‘கண்டராதித்த சோழர்’ என்றும்; செம்பியன் மாதேவி என்பவர், அக்காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன் வைரமேக வாணகோவரையரின் மகளாவால் என்றும் இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இன்னும் தெளிவாக "செம்பியன் மாதேவியார் திருவயிற்றில் பிறந்த ஸ்ரீ கண்டராதிச்சன்" என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதிலிருந்து பராந்தக சோழருக்கும், வைரமேக வாணகோவரையரின் மகளுக்கும் பிறந்தவர்தான் ‘கண்டராதித்தர்’ என்பது இந்தக் கல்வெட்டு மூலம் தெளிவாகப் புலனாகிறது.

திருவண்ணாமலை: வரலாற்றை ஏந்தியபடி புதர் மண்டிக்கிடக்கும் சமணர் கோயில்! மீட்கப்படுமா?

இருப்பினும், திருக்கோவிலூர் அருகே உள்ள கரடி என்ற ஊரில் கி.பி. 947-ல் எழுதப்பட்டுள்ள கல்வெட்டில், ‘முதலாம் பராந்தகன் – சோழ மாதேவி என்பவரும் மகனாகப் பிறந்தவர் கண்டராதித்தர்’ என்று கூறுகிறது. இதிலிருந்து, செம்பியன் மாதேவி என்ற பெயரும், சோழ மாதேவி என்ற பெயரும் ஒருவரையே சுட்டுகிறது என்று கருதலாம்.

மேலும் இக்கல்வெட்டில், ‘அண்ணாமலையாருக்கு மதிய நேரத்தில் நடைபெறும் பூஜையில் படையலிடும் போது, அதே நேரத்தில் 20 காபாலிகத் துறவிகளுக்கு உணவு கொடுப்பதற்காக ‘வைச்சபூண்டி’ என்ற ஊர் முழுவதையும் துறவிகளுக்கு தானமாகக் கொடுத்துள்ளார் கண்டராதித்தர்’. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், சைவ வழி காபாலிகத் துறவிகளையும் கண்டராதித்தர் ஆதரித்துள்ளார் என்று அறியமுடிகிறது.

கல்வெட்டு
கல்வெட்டு

‘காபாலிகர்கள் குருவாக ‘வல்லக்கொன்றை சோமீசுவரர் கங்காளபடாரர்’ என்பவர் இருந்துள்ளார். வைச்சபூண்டி கிராமத்தில் இருந்து கிடைக்கும் வரி, பொன் மற்றும் நிலங்களை வல்லக்கொன்றை சோமீசுவரர் கங்காளபடாரர், இவருடைய சீடர் வாஜஸ்பதி வக்கானி படார முதலிகள், இவருடைய சிஷ்யர்கள் மற்றும் இந்த சிஷ்யர்களின் சிஷ்யர்கள் ஆகியோரும் அனுபவிக்க வேண்டும்’ என்றும் இக்கல்வெட்டு கூறுகிறது.

இதிலிருந்து சைவத்தின் ஒரு பிரிவாக விளங்கிய காபாலிகம், காளாமுகம் ஆகியவை திருவண்ணாமலையில் பராந்தகன் காலத்தில் அரச ஆதரவு பெற்று சிறப்புடன் இருந்தது என்பதை அறியலாம். அவரைத் தொடர்ந்து, அப்பிரிவைக் கண்டராதித்தர் ஆதரித்துள்ளார் என்பதையும் அறியலாம்.

ஜவ்வாது மலை: புலியுடன் போரிடும் வீரன்... 1000 ஆண்டுகள் பழைமையான நடுகல்! சொல்லும் வரலாறு என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காபாலிகர்களின் கையில் இருக்கும் கபால ஓட்டில் நீர் வார்த்து வைச்சபூண்டி கிராமத்தைக் கண்டராதித்தர் தர்மமாகக் கொடுத்துள்ளார். காளாமுகம், காபாலிகம் ஆகிய சைவ பிரிவுகள் திருவண்ணாமலை பகுதியில் பரவி விளங்கியதையும் இக்கல்வெட்டு உணர்த்துகிறது‌. கண்டராதித்த சோழர், வைரமேக வாணகோவரையர் குடும்பத்து இளவரசிக்குப் பிறந்தவர் என்ற புதிய தகவலை இக்கல்வெட்டு கூறுகிறது. பராந்தக சோழருக்கு இருமுடி சோழன் என்ற பட்டம் இருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிகிறோம்.

இந்தக் கோயிலின் எதிரில் உள்ள சிறிய அளவு சிற்பத்தில் ஆண், பெண் என இரண்டு உருவாங்கள் உள்ளன. இந்த உருவங்களின் மேல்புறத்தில் ஒரு வரிக் கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டில், ‘ஸ்ரீ மாஹேஸ்வர நம்பி’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மாகேஸ்வர நம்பி என்பவர் சிவ பக்தராக இருக்கலாம்.

கல்வெட்டுடன் சிற்பம்
கல்வெட்டுடன் சிற்பம்

இந்தக் கல்வெட்டுகளைப் படித்து விளக்கம் அளித்த கல்வெட்டறிஞர்கள், இரா. கோபால், தியாகராஜன், ராஜவேல் ஆகியோர், 'இந்தக் கல்வெட்டு அரிய புதிய செய்திகளைக் கொண்டுள்ளது. திருவண்ணாமலை நகரிலே கிடைத்த இந்த நடுகல் கல்வெட்டும், பின்புறம் உள்ள கல்வெட்டும், எதிரே உள்ள கல்வெட்டும் வெவ்வேறு காலத்தியது ஆகும். இந்தக் கல்வெட்டுகள் மூலம் திருவண்ணாமலை கோயில் வரலாறு பற்றியும்; சைவ சமயத்தின் பிரிவுகளான கபாலிகம், காளமுகம் பற்றியும்; கண்டராதித்தன் பிறப்பு பற்றியும் குறிப்பிடும் சிறப்பான கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டுகளை அரசு ஆவணப்படுத்திப் பாதுகாக்க வேண்டும்' என்று கூறினார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு