Published:Updated:

`உள்ளம் உருகுதைய்யா..!' தமிழ் பக்தி இசைக்குப் பெருமை சேர்த்த டி.எம்.எஸ் நினைவுதினம் இன்று

டி.எம்.சௌந்தரராஜன்
டி.எம்.சௌந்தரராஜன் ( Photo: Vikatan )

சுப்ரபாதங்களும் சகஸ்ரநாமங்களும் ஓங்கி ஒலித்த இடங்களிலெல்லாம் எளிய தமிழிலான பக்தி இசை பரவித் தன் செல்வாக்கை நிறுவியிருந்த காலகட்டம். இந்த மாற்றத்தைக் கொண்டுவந்து தமிழிசை வரலாற்றில் தன் பேரை நீங்காத ஒன்றாக எழுதியவர் டி.எம்.எஸ் எனப்படும் டி.எம்.சௌந்தரராஜன்.

இப்போது 40-களில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பால்யத்தில் கண்விழிக்கும்போது பக்திப் பாடல்களைக் கேட்டபடியே துயில் எழுந்தவர்களாக இருப்பார்கள். கிராமங்களில் சிறு நகரங்களில் அந்தப் பாடல்கள் அதிகாலையில் சத்தமாக ஒலிக்கவிடப்படும். கோயில்களில், தெருமுனைக் கடைகளில், வானொலிப் பெட்டிகளிலிருந்து அந்தப் பாடல்களின் ஒலி, ஓர் அலைபோலப் புறப்பட்டு வரும். அவற்றைக் கேட்பதற்காக அது ஒலிக்கும் இடங்களுக்கு அருகில்போய் அமர்ந்துகொள்பவர்களும் உண்டு. அந்தக் குரல் அவர்களுக்குள் பெரும் நிம்மதியையும் உணர்வுப் பெருக்கையும் நிகழ்த்த அந்தக் காலைகள் அவர்களுக்கு மிகவும் அழகானதாக விடியும்.

பாடகர் டி.எம்.எஸ்
பாடகர் டி.எம்.எஸ்

சுப்ரபாதங்களும் சகஸ்ரநாமங்களும் ஓங்கி ஒலித்த இடங்களிலெல்லாம் எளிய தமிழிலான பக்தி இசை பரவித் தன் செல்வாக்கை நிறுவியிருந்த காலகட்டம். இந்த மாற்றத்தைக் கொண்டுவந்து தமிழிசை வரலாற்றில் தன் பேரை நீங்காத ஒன்றாக எழுதியவர் டி.எம்.எஸ் எனப்படும் டி.எம்.சௌந்தரராஜன்.

50-களில் திரைத்துறையில் கால்பதித்த டி.எம்.எஸுக்கு முன்பாகத் தமிழ் பக்தி இசையில் முன்னோடிகளாக, தியாகராஜ பாகவதர், மதுரை சோமு, கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தனர். டி.எம்.எஸ் காலகட்டத்தில் சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூரு ரமணியம்மாள் முதலானோர் தமிழிசையில் பாடிவந்தனர். அவர்கள் அனைவரையும்விட டி.எம்.எஸ்ஸின் குரல் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து ஆலயங்கள், வழிபாடுகளில் இடம்பெற்றது. காரணம் டி.எம்.எஸ்ஸின் குரல் நிகழ்த்திக்காட்டிய ஒரு நாடக பாவமான பாடும்முறை. அதுவே, மக்களின் மனங்களைத் தொட்டது. எப்படி அவரின் திரைப்பாடல்கள் மக்களிடம் புகழ்பெற்றனவோ அதேபோல் பக்திப்பாடல்களும் புகழ்பெற்றன. உண்மையில் அதை அவர் மிகவும் மதித்தார். பக்திப்பாடல்கள் தன் அடையாளமாவது குறித்த பெருமை அவர் வாழ்வில் மிகுந்திருந்தது.

உள்ளம் உருகுதைய்யா, கந்தன் திருநீறணிந்தால், கற்பனை என்றாலும் முதலிய முருகன் பக்திப் பாடல்கள் ஏறக்குறைய தமிழ் வேதங்களைப்போல மிகவும் பக்தியோடு பக்தர்களால் பாடவும் கேட்கவும் பட்டன. குறிப்பாக, நோயுற்றவர்களுக்குத் திருநீறு இட்டுக் கந்தன் திருநீறணிந்தால் பாடலைப் பாடுவதை அந்தக் காலத்தில் அநேகம் பேர் கண்டிருக்கலாம். ஏறக்குறைய அது, ‘மந்திரமாவது நீறு...’ என்னும் தேவாரத்துக்கு இணையான ஓர் இடத்தைப் பெற்றது. அந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடியிருக்கும் முறையே அதற்குக் காரணம் எனலாம். துள்ளலான இசையோடு அமைந்த அந்தப் பாடல் மொத்தமே 3 நிமிடங்களுக்கும் குறைவாக இசைக்கப்படுவது. ஆனால், அதன் வரிகள் மிகவும் பொருள்மிகுந்தவை.

`மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா

மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சி பெருக்குமடா

தினந்தினம் நெற்றியிலே திருநீறு

அணிந்திடடா- தீர்ந்திடும் அச்சமெல்லாம்

தெய்வம் துணை காக்குமடா’ என்ற சரணம் கேட்பவர்களின் உள்ளம் கவர்ந்து கைநிறையத் திருநீறு அள்ளி இட்டுக்கொள்ளத் தூண்டுவது.

அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடியதோடு அருணகிரிநாதராகவே தோன்றி நடித்தவர் டி.எம்.எஸ். அருணகிரிநாதரின் குரலில் திருப்புகழைக் கேட்கவில்லை என்னும் குறை அதன்மூலம் நமக்கு நீங்கியது. இன்றும், `முத்தைதரு பத்தித்திருநகை...’ என்று யார் பாடும்போதும் அவர்களையே அறியாமல் டி.எம்.எஸ்ஸைப்போலப் பாட முயல்வர். இதுவே தமிழ் நெஞ்சங்கள் அனைத்துக்குள்ளும் அவர் நிறைந்திருப்பதன் சாட்சி.

திரைப்பாடல்களில் அவர் செய்த சாதனைகள் அநேகம். குறிப்பாகத் தமிழகத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த அரசியல் மாற்றங்களுக்குக் காரணமான சூழலில் வெளியான திரைப்பாடல்கள் பல்வேறு கருத்துகளோடு உருவாக்கப்பட்டன. அவற்றை எல்லாம் தாண்டி டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் தனிமனித மனத்தோடு உரையாடுபவை. `உலகம் பிறந்தது எனக்காக...’, `யாரை நம்பி நான் பொறந்தேன்...’, `காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்’ என்பன போன்ற ஒரு சில பாடல் வரிகளைப் பிடித்துக்கொண்டே லட்சக்கணக்கானவர்கள் வாழ்க்கையை நகர்த்தி வெற்றிகரமாகக் கொண்டு செலுத்தினர். இந்த வரிகள் எல்லாம் சாகாவரம் பெற்ற வரிகளானதற்கு டி.எம்.எஸ்ஸின் தெய்வீகக் குரலே முதற் காரணம்.

டி.எம்.எஸ்
டி.எம்.எஸ்

வைணவக் குடும்பத்தில் பிறந்தபோதும் காலம் முழுவதும் தன்னை முருகபக்தனாகவே அடையாளப்படுத்திக்கொண்டு அப்படியே வாழ்ந்து மறைந்தவர் டி.எம்.எஸ். அவர் காலத்தில் வாழ்ந்த சமயப் பெரியவர்களான மகாபெரியவா, புட்டப்பர்த்தி சாயிபாபா ஆகியோர் இவரைக் காணவிரும்பி அழைத்து அவருக்கு ஆசி வழங்கி கௌரவித்தனர்.

டி.எம்.எஸ்ஸின் பல பக்திப் பாடல்களுக்கு அவரே இசையும் அமைத்திருக்கிறார். அப்படி அவர் இசையமைத்துப் பாடிய பாடல்களில் ஒன்று `கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...’ என்னும் பாடல். தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த இந்தப் பாடலில் சரணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராகத்தில் அமைந்த ராகமாலிகா வகையைச் சேர்ந்தது. அந்த ராகத்தின் பெயரும் அந்தச் சரணத்தில் வரும்.

தன் தனித்துவமான குரலால் தமிழ் பக்தி இசை மரபுக்கு அவர் செய்த கொடை மிகவும் அதிகம். தமிழ் இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டி.எம்.எஸ்ஸின் நினைவு தினம் இன்று. 2013-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி அவர் காலமானார். ஆனால் தமிழ் உள்ள அளவும் அவர் புகழ் நம்மிடையே நிலைத்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு