Published:Updated:

சபரிமலை மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு... ஆன்லைன் தரிசன முன்பதிவு குறித்த முழு விவரங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

ஜனவரி 1, 2, 5 மற்றும் சபரிமலை மகரவிளக்கு ஜோதி தரிசன தினமான ஜனவரி 14 ஆகிய தேதிகளில் 25,000 பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டதால், அந்த நாள்களுக்கான புக்கிங்கள் முடிந்துவிட்டன.

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காகக் கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி அதிகாலை முதல் வரும் 21-ம் தேதி மாலை வரை தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கன மழை பெய்து வருவதாலும், அதன்காரணமாக மண் சரிவு ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாலும் நாளை (அக்டோபர் 19) வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் பம்பா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலை பிரதேசங்களில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மழை குறைந்தால் வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வரும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நடக்கும் மண்டல கால மகரவிளக்கு பூஜைகள் நவம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்குகின்றன. அதில் ஒருநாளுக்கு 25,000 பக்தர்கள் விதம் அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை மேல்சாந்தி தேர்ந்தெடுப்பு
சபரிமலை மேல்சாந்தி தேர்ந்தெடுப்பு

மண்டலகால பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல் டிசம்பர் 26-ம் தேதி வரை சபரிமலை நடை திறந்திருக்கும். அதன்பிறகு நான்கு நாள்கள் நடை சார்த்தப்பட்டிருக்கும். பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 31-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை சபரிமலை நடை திறந்திருக்கும். மண்டலகால மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கான ஆன்லைன் புக்கிங் ஏற்கெனவே தொடங்கியுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள், கொரோனா இரண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்துகுள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் சென்றால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராடுவது எதற்காக?

ஜனவரி 1, 2, 5 மற்றும் சபரிமலை மகரவிளக்கு ஜோதி தரிசன தினமான ஜனவரி 14 ஆகிய தேதிகளில் 25,000 பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டதால், அந்த நாள்களுக்கான புக்கிங்கள் முடிந்துவிட்டன. மண்டல கால பூஜைக்கு முன்பாக நவம்பர் மாதம் 3-ம் தேதி சித்திரை ஆட்ட விசேஷ பூஜைக்காக ஒருநாள் மட்டும் நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக ஆன்லைன் புக்கிங் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க மண்டல கால பூஜை தொடங்கி அடுத்த ஒரு ஆண்டுக்கான சபரிமலை மேல்சாந்தி மற்றும் மாளிகப்புறம் சந்நிதிக்கான மேல்சாந்தி தேர்ந்தெடுப்பு சபரிமலையில் நேற்று நடந்து முடிந்தது.

சபரிமலை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, மாளிகப்புறம் மேல்சாந்தி சம்பு நம்பூதிரி
சபரிமலை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, மாளிகப்புறம் மேல்சாந்தி சம்பு நம்பூதிரி

சபரிமலை மேல்சாந்திக்கான தேர்ந்தெடுப்பில் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த ஒன்பதுபேரின் பெயர்கள் சீட்டில் எழுதப்பட்டு வெள்ளிக்குடத்தில் போடப்பட்டு ஐயப்பன் சந்நிதியில் பூஜை செய்யப்பட்டது. பின்னர் பந்தளம் அரண்மனை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கோவிந்த் வர்மா வெள்ளிக்குடத்தில் இருந்து ஒரு சீட்டை எடுத்தார். அதில் மாவேலிக்கரை கண்டியூர் களியக்கல் மடத்தைச் சேர்ந்த எஸ்.பரமேஸ்வரன் நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குறுவக்காடு இல்லத்து சம்பு நம்பூதிரி மாளிகப்புறம் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விருட்சிக (கார்த்திகை) மாதம் ஒன்றாம் தேதி புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்க உள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு