Published:Updated:

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாமா?! கையேடு சர்ச்சையும், விளக்கமும்!

இருமுடி கட்டிய சபரிமலை, மாளிகப்புறம் புதிய மேல்சாந்திகள்

கார்த்திகை முதல்நாளே சபரிமலை தரிசனம் குறித்த விவாதம் எழுந்ததை அடுத்து சன்னிதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாமா?! கையேடு சர்ச்சையும், விளக்கமும்!

கார்த்திகை முதல்நாளே சபரிமலை தரிசனம் குறித்த விவாதம் எழுந்ததை அடுத்து சன்னிதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்.

Published:Updated:
இருமுடி கட்டிய சபரிமலை, மாளிகப்புறம் புதிய மேல்சாந்திகள்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று அதிகாலை முதல் மண்டலகால பூஜைகள் முறைப்படி நடைபெற்று வருகின்றன. மண்டலகால பூஜைகளுக்காக நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை சன்னிதான நடை திறக்கப்பட்டது. சபரிமலை புதிய மேல்சாந்தி கண்ணூரைச் சேர்ந்த ஜெயராமன் நம்பூதிரி, மாளிகப்புற சன்னிதான மேல்சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் இருமுடிகட்டிப் பதினெட்டாம்படி வழியாக சன்னிதானத்தை அடைந்தனர். தந்திரி கண்டரு ராஜீவரு புதிய மேல்சாந்திகள் மீது புனித நீர் ஊற்றி அவர்களைப் புனிதப்படுத்தினார். பின்னர் சபரிமலை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரியைக் கோயில் கருவறைக்குள் அழைத்துச் சென்ற தந்திரி, அவருக்கு ஐயப்பன் மூல மந்திரமும், பூஜா விதிகளையும் உபதேசித்தார். புதிதாகப் பொறுப்பேற்ற மேல்சாந்தி இன்று அதிகாலை 4 மணி முதல் பூஜைகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

புதிய மேல்சாந்தி மீது புனித நீர் ஊற்றப்படுகிறது
புதிய மேல்சாந்தி மீது புனித நீர் ஊற்றப்படுகிறது

இரண்டு ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை மிகக்குறைவாகவே இருந்தது. அதற்கு முன்பு 2018, 2019 காலகட்டங்களில் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவைத் தவிர வேறு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளதால் சன்னிதானத்தில் நேற்றே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ஆண்டு மண்டல காலத்தில் மட்டும் 40 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீஸார்
சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீஸார்

சபரிமலையில் மண்டலகால பூஜைக்காக ஏ.டி.ஜி.பி அஜித்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடுள்ள போலீஸாருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டிக் கையேட்டின் முதல் பக்கத்திலேயே 28-09-2018 உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சர்ச்சையைக் கிளப்பியது.

இதுகுறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரன், "ஒருமுறை பக்தர்கள் உங்களைத் திருத்திவிட்டார்கள். மீண்டும் அறிவில்லாத நிலை ஏற்படுகிறது என்றால், பழையவற்றை மறக்கவில்லை என பினராயி விஜயனுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கலாம் என்ற சுற்றறிக்கைக் கையேடு அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியது.

சபரிமலை பதினெட்டாம் படி ஏறும் புதிய மேல்சாந்திகள்
சபரிமலை பதினெட்டாம் படி ஏறும் புதிய மேல்சாந்திகள்

கேரள உள்த்துறை சார்பில் இந்தக் கையெடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுபற்றி ஏ.டி.ஜி.பி அஜித்குமார் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். ஏ.டி.ஜி.பி அஜித்குமார் கூறுகையில், "முந்தைய வருடத்தில் அச்சிடப்பட்ட கையேடு இந்த முறை வழங்கப்பட்டுவிட்டது. அதில் நிறையத் தவறுகள் உள்ளன. டி.ஜி.பி அறிவுறுத்தல்படி பழைய கையேடுகள் திரும்பப்பெறப்பட்டு, தவறுகள் நீக்கப்பட்ட புதிய அறிவுறுத்தல் கையேடு வழங்கப்படும்" என்றார்.

கேரள தேவசம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்
கேரள தேவசம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்

கார்த்திகை முதல்நாளே சபரிமலை தரிசனம் குறித்த விவாதம் எழுந்ததை அடுத்து சன்னிதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள தேவசம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், "சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி என்ற அறிவுறுத்தல் திரும்பப்பெறப்படும். அரசுக்கும், தேவசம்போர்டுக்கும் எந்தத் தவறான நோக்கமும் இல்லை. ஏற்கெனவே உள்ள நடைமுறை தொடரும்" என்றார்.