Published:Updated:

சதுரகிரி மலையில் பக்தர்களின் பாதுகாப்புக்கு நிரந்தர நடவடிக்கை எப்போது? பக்தர்கள்‌ எதிர்பார்ப்பு!

சதுரகிரி மலை ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சாமி கோயிலில் ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களின் பாதுகாப்புக்காக அரசு எப்போது நிரந்தர நடவடிக்கைகளை எடுக்கப்போகிறதென்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

சதுரகிரி மலையில் பக்தர்களின் பாதுகாப்புக்கு நிரந்தர நடவடிக்கை எப்போது? பக்தர்கள்‌ எதிர்பார்ப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சாமி கோயிலில் ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களின் பாதுகாப்புக்காக அரசு எப்போது நிரந்தர நடவடிக்கைகளை எடுக்கப்போகிறதென்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

Published:Updated:
சதுரகிரி மலை ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவுக்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சாமி கோயில் அமைந்துள்ளது. ஆன்மிகத் தலங்களில் மிக பிரசித்திப் பெற்ற ஸ்தலமான சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை, பௌர்ணமி தினத்தன்று சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில், ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் நடைபெறும் விழாவிற்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் சதுரகிரி மலையில் கூடுவர்.

வனத்துறை - சதுரகிரி மலை
வனத்துறை - சதுரகிரி மலை

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சாமி கோயில் அமைந்திருப்பதால் வனத்துறையின் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் பிரசித்திப் பெற்ற விழாவான ஆடி அமாவாசை விழா வருகிற 28-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் நான்கு நாள்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்குத் தேவையான தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றைச் செய்து தர மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதேவேளையில், சதுரகிரி செல்வதில் பக்தர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வுக்காண செய்யப்பட வேண்டியவை குறித்து வத்திராயிருப்பைச் சேர்ந்த பூமாலை ராஜனிடம் பேசினோம், "இன்னைக்கும் சதுரகிரி மலையில் சாதுக்களும் சித்தர்களும் வாழ்ந்துட்டு வர்றதா நம்பிக்கை இருக்கு. சதுரகிரி மகாலிங்க சுவாமி கோயிலுக்கு மாசந்தோறும் போயி சாமி கும்பிட்டுட்டு வர்றேன். வனப்பகுதிக்குள் கோயில் இருக்கிறதால பக்தர்கள் சென்று வருவதில் ரொம்ப சிரமம் இருக்கு. செங்குத்தான மலைப்பாதை, கரடுமுரடான பகுதி, நீர்வழி ஓடைகள் இப்படிப் பல ஆபத்தான இடங்களைத் தாண்டித்தான் கோயிலுக்குப் போகணும். இதுல பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சாத்தியம் இருக்கிற இடங்கள்ல நிரந்தர தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்கணும். குறிப்பா 2015-ம் ஆண்டு சதுரகிரி மலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குல சதுரகிரிக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிலர் இறந்து போயிட்டாங்க.

சதுரகிரி
சதுரகிரி

வெள்ளத்துல மாட்டிக்கிட்ட பல நூற்றுக்கணக்கான பக்தர்களை மீட்புப் படையினர் மூலம்தான் மீட்டாங்க. இதைத் தொடர்ந்து 2019-ல் சதுரகிரி மலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுச்சு. அதனால சதுரகிரி மலைக்குச் செல்லும் வழியிலுள்ள நீரோடைகளான மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை, கோரக்கர் குகை காட்டாறு, பிலாவடிக் கருப்பசாமி கோயில் ஓடை போன்ற இடங்களில் காட்டாற்று வெள்ளத்தைத் தாங்குற மாதிரி பக்தர்கள் நடந்து போயிட்டு வர்றதுக்கு இரும்பு பாலம் அமைச்சுத் தரணும்.

2015-ம் ஆண்டு நடந்த காட்டாற்று வெள்ள சம்பவத்துக்குப் பிறகு இந்தப் பகுதியில இரும்பு பாலம் அமைக்கணும்னு அதிகாரிகள் திட்டம் தீட்டி ஆய்வு செஞ்சிட்டு போனாங்க. ஆனா அதுக்குப் பிறகு இங்க எந்த விதமான பணிகளும் செய்யப்படவில்லை. இப்ப வரைக்கும் இந்த இடம் பழைய மாதிரியேதான் இருக்குது. காட்டாற்று நீர் ஓடைகளைக் கடந்து போறதுக்கு ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு கயிறு கட்டி வச்சிருக்காங்க. இதுதவிர வழுக்கும் பாறை பகுதியில பக்தர்கள் தைரியமா கால் ஊன்றி நடப்பதற்கு இரும்பு கைப்பிடிகள் அமைக்கணும். இதெல்லாம் விரைவா செஞ்சி குடுத்தா வருங்காலத்துல பக்தர்கள் பாதுகாப்பாகக் கோயிலுக்கு போயிட்டு வரலாம்" என்றார்.

சதுரகிரி
சதுரகிரி

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சுந்தரிடம் பேசினோம், "சதுரகிரி மகாலிங்க சுவாமி கோயிலில் நடக்கிற ஆடி அமாவாசை விழா ரொம்ப விஷேசமானது. இதுக்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருவாங்க‌. கொரோனாவால கடந்த இரண்டு வருஷமா ஆடி அமாவாசை விழா சதுரகிரியில நடக்கல. இந்த நிலையில வர்ற 28-ம் தேதி ஆடி அமாவாசை விழா நடக்குது. இது மூலம் சதுரகிரி பக்தர்களோட ரெண்டு வருஷ ஏக்கம் தீரப்போகுது. கோயிலுக்கு வர்ற பக்தர்களுக்குச் சரியான வசதிகளைச் செஞ்சு கொடுக்குறதுக்கு அரசு தீவிரமா எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துட்டு வருது. விரைவில் சதுரகிரி மலைப்பாதையிலும் தேவையான இடங்கள்ல அரசு பாலம் அமைச்சுத் தரனும். கரடுமுரடான பாதைகளில் நடக்குறதுக்கு ஏற்றவகையில கற்கள்‌ பதிக்கணும்" என்றார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.மான்ராஜிடம் பேசினோம், "சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கு நடைபாதை புதுப்பித்து தரப்படும், இரும்பு பாலம் அமைக்கப்படும் என்று அ.தி.மு.க ஆட்சியின் பொழுது உறுதி கொடுத்திருந்தோம். அதற்காகத் திட்டமிடப்பட்டே அதிகாரிகள் குழு மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முடியவில்லை. ஆனாலும் தற்போதுள்ள தி.மு.க. அரசின் கவனத்திற்கும் இந்தக் கோரிக்கையை எடுத்துச் சென்றுள்ளேன். எனவே சதுரகிரி பக்தர்களின் நலன்கருதி கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.