Published:Updated:

`முன்பு அமராவதி இப்போது காவிரி' 4 ஆவதாக கண்டெடுக்கப்பட்ட தமிழகத்தின் மிகப்பெரிய 11 அடி உயர லிங்கம்

சிவலிங்கத்துக்கு வழிபாடு நடத்தும் சிவனடியார்கள் ( நா.ராஜமுருகன் )

பரமத்தி வேலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் 11 அடி உயர சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது, பக்தர்களை சிலிர்ப்படையச் செய்திருக்கிறது.

`முன்பு அமராவதி இப்போது காவிரி' 4 ஆவதாக கண்டெடுக்கப்பட்ட தமிழகத்தின் மிகப்பெரிய 11 அடி உயர லிங்கம்

பரமத்தி வேலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் 11 அடி உயர சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது, பக்தர்களை சிலிர்ப்படையச் செய்திருக்கிறது.

Published:Updated:
சிவலிங்கத்துக்கு வழிபாடு நடத்தும் சிவனடியார்கள் ( நா.ராஜமுருகன் )

பரமத்தி வேலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் 11 அடி உயர சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது, பக்தர்களை சிலிர்ப்படையச் செய்திருக்கிறது. 'அந்த லிங்கத்தின் அமைப்பு மற்றும் பிற சூத்திரக் குறியீட்டை வைத்து பார்க்கும்போது ஏறக்குறைய 6 - ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கக்கூடும்' என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

11 அடி உயர சிவலிங்கம்
11 அடி உயர சிவலிங்கம்
நா.ராஜமுருகன்

ஏற்கனவே, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள அரசம்பாளையத்தில் உள்ள ஒரு விவசாயியின் முருங்கைத் தோட்டத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் தெரிவதாகத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைத் தொடர்ந்து, வரலாற்று ஆர்வலர்களும், சிவனடியார்களும் அந்தத் தோட்டத்துக்கு விரைந்தனர். அங்கிருந்த மண்மேட்டை அப்புறப்படுத்த, உள்ளுக்குள் 7 அடி உயரத்தில் சிவலிங்கமும், நந்தி சிலை ஒன்றும் இருப்பதைக் கண்டனர். அவற்றை அங்கேயே நிறுவி, பூஜைகள் செய்தனர்.

தொடர்ந்து, அங்கு பக்தர்கள் சென்று, 1,000 வருடங்கள் பழைமையான அந்த சிவலிங்கத்தை வழிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பதினைந்து நாள்களுக்கு முன்பு, கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கும் நஞ்சைக்காலக்குறிச்சியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் பழைய சிற்பங்கள் இருப்பதாகத் தகவல் கிடைக்க, அங்கே விரைந்தனர்.

சிவலிங்கத்துக்கு வழிபாடு நடத்தும் சிவனடியார்கள்
சிவலிங்கத்துக்கு வழிபாடு நடத்தும் சிவனடியார்கள்
நா.ராஜமுருகன்

அங்கே மண்ணுக்குள் புதைந்தபடி இருந்த 4.4 அடி உயர சிவலிங்கத்தையும், சண்டிகேஸ்வரர் சிலையையையும் வெளியில் எடுத்தனர். அவற்றையும் அங்கேயே வைத்து சிவனடியார்கள் பூஜைகள் செய்தனர். இந்நிலையில், மூன்றாவது சம்பவமாக, கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னதாதம்பாளையத்தில் பழைமையான லிங்கமும், சிற்பங்களும் இருப்பதாக வரலாற்று ஆர்வலர்களுக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று ஆய்வு செய்த அவர்கள், ஐந்தரை அடிய உயர லிங்கத்தையும், இரண்டரை அடி உயர தவ்வை சிலையையும் கண்டெடுத்தனர். அவற்றையும் அங்கேயே வைத்து வணங்கி வருகின்றனர். இந்நிலையில், நான்காவது சம்பவமாக, நாமக்கல் மாவட்டத்தில் 11 அடி உயரத்தில் அரிதான சிவலிங்கம் கிடைத்திருப்பது, வரலாற்று ஆர்வலர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகில் உள்ள சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜ். இவரது கரும்பு தோட்டத்தின் மையத்தில் 11 அடி உயரம் உள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தோட்டத்தில் மண்ணிற்கு மேல் 8-அடியும் மண்ணிற்கு கீழ் 3 அடியும் கொண்டதாக சிவலிங்கம் உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அதைத்தொடர்ந்து, குஜிலியம்பாறையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலரும் ஆசிரியரியருமான த.சிவசங்கர், ஜெகதினேஷ், கரூர் சுப்ரமணியன், தரகம்பட்டி சிவநாயனார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கரும்புத் தோட்டத்தின் மையத்தில் நிலத்திற்கு மேல் 8 அடி உயரமும் நிலத்தின் கீழ் 3 அடி ஆழமுமாக ஊன்றிபடி உள்ள அந்த சிவலிங்கத்தைக் கண்டனர். அந்த சிவலிங்கம், பிரம்ம சூத்திரக் குறியீட்டுடன் காவிரி ஆற்றைப் பார்த்தவாறு கிழக்கு நோக்கி இருக்கிறது.

சிவலிங்கத்துக்கு வழிபாடு நடத்தும் சிவனடியார்கள்
சிவலிங்கத்துக்கு வழிபாடு நடத்தும் சிவனடியார்கள்
நா.ராஜமுருகன்

முற்காலத்தில் இவ்விடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்க வேண்டும் லிங்கத்தின் அமைப்பு மற்றும் பிரம்ம சூத்திரக் குறியீடை வைத்துப் பார்க்கும் போது ஏறக்குறைய ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இது இருக்கக் கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள குடிமல்லம் சிவலிங்கம் மிகவும் பழைமையானது என்று கருதி வந்த நிலையில், அதே போன்று லிங்க பாணத்தின் பிரம்ம சூத்திர குறியீடு முதன் முதலில் அமைக்கப்பட்ட புரொஜெக்ஷன் அமைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பழைமையான லிங்கத்தை கரூர், நாமக்கல் மாவட்ட சிவனடியார்கள் வழிபாடு செய்தனர்.

இதுகுறித்துப் பேசிய வரலாற்று ஆர்வலர்கள்,

"இந்த லிங்கம் சூத்திரக் குறியீட்டுடன் காவிரி ஆற்றைப் பார்த்தவாறு கிழக்கு நோக்கி இருக்கிறது. லிங்கத்தின் மேல் பகுதி தட்டையாக உள்ளது. ஒரு காலத்தில் இவ்விடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்க வேண்டும். லிங்கத்தின் அமைப்பு மற்றும் பிற சூத்திர குறியீட்டை வைத்து பார்க்கும்போது, ஏறக்குறைய 6 - ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கக்கூடும். ஆந்திர மாநிலத்தில் உள்ள குடிமல்லம் சிவலிங்கம்தான் பழைமையானது என்று கருதி வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள இந்த சிவலிங்கம் உயரமான மற்றும் பழைமையான சிவலிங்கமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதன்மூலம், தமிழர்களின் பழைமையான நாகரிகம் விளங்குகிறது. இப்படித் தொடர்ச்சியாகக் கரூர் அமராவதி ஆற்றங்கரையிலும், நாமக்கல் காவிரி ஆற்றங்கரையிலும் தொடர்ச்சியாகப் பழைமையான சிவலிங்கங்கள் கிடைத்து வருவது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது" என்றனர்

லிங்கத்துக்கு பாலாபிஷேகம்
லிங்கத்துக்கு பாலாபிஷேகம்
நா.ராஜமுருகன்

இதுகுறித்து, அந்த நிலத்தின் உரிமையாளர் நடராஜ்,

"கடந்த 72 ஆண்டுகளுக்கு முன் தரிசாக இந்த நிலம் இருந்தது. 1950-ம் ஆண்டு எனது தந்தை விவசாயம் செய்ய நிலத்தை சீரமைத்தார். கடந்த 22 வருடமாக நான் விவசாயம் செய்து வருகிறேன். அப்போது, இது சிவலிங்கம் என்று எனக்குத் தெரியாது. 'பாண்டியன் நட்ட கல்' என்று கூறியிருந்தனர். எட்டு வருடத்திற்கு முன் சிவனடியார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த பகுதிக்கு வந்து, 'இது சிவலிங்கம்' என கூறினார். இதையடுத்து, அவ்வப்போது சிலர் வந்து லிங்கத்தை வழிபாடு செய்து சென்றனர். பின்னர், ஆய்வு செய்த சிலர் இது பழைமையான சிவலிங்கம் என்று உறுதிப்படுத்தினர்" என்றார்.

இந்தப் பழைமையான சிவலிங்கத்திற்கு நாமக்கல், கரூர் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள் வந்திருந்து, பாலாபிஷேகம் செய்து, சிவ வழிபாடு நடத்தி வருகின்றனர். ஏராளமான பக்தர்களும் அங்கு வந்து, இந்த அற்புத சிவலிங்கத்தை வழி்பட்டுச் செல்கின்றனர்.