Election bannerElection banner
Published:Updated:

``நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!'' - சியாமளா ரமேஷ்பாபு #WhatSpiritualityMeansToMe

சியாமளா ரமேஷ் பாபு
சியாமளா ரமேஷ் பாபு

சியாமளா ரமேஷ்பாபு... பட்டிமன்றப் பேச்சாளர், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் என்பதையும் தாண்டி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரிடமும் நம்பிக்கைப் பயிர் வளர்ப்பவர்.

அறம் சார்ந்த சமூகம் உருவாக வேண்டும் என்பதற்காகப் பேச்சாலும் எழுத்தாலும் பாடுபடுபவர். பாரம்பர்யத்துக்கும் நவீனத்துக்கும் உறவுப்பாலம் அமைக்கும் சிந்தனையாளர். அவரை `எனது ஆன்மிகம்' பகுதிக்காகச் சந்தித்தோம். ஆன்மிகம் என்பது தனக்குள் பள்ளி நாள்களில் பதியம் போடப்பட்டு இன்று விருட்சமாகக் கிளை பரப்பியிருக்கும் அனுபவங்களைப் பகிந்துகொண்டார்.

Spiritual Life
Spiritual Life

``செவ்வாய், வெள்ளி கட்டாயம் தலைகுளித்தே ஆகவேண்டும். அதுவும் வீட்டில் அரைத்த சீயக்காயும், வடிகஞ்சியும் கலந்து. மாலை மணி ஆறு அடித்ததும் எங்கே விளையாடிக்கொண்டிருந்தாலும், `டாண்னு' வீட்டுக்கு வந்து, கால், கை, முகம் அலம்பி, சுவாமிக்கு விளக்கேற்றி, தெரிந்த ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டுத்தான் வீட்டுப் பாடமே எழுதவேண்டும்.

எங்கள் தெருவில் பசுஞ்சாணம் எங்கிருந்தாலும் தேடி எடுத்து, வாளியில் நிரப்பி, காலை ஆறுமணிக்குக் கரைத்து வாசல் தெளிப்பது வீட்டில் என் இலாகா. `சாணமிட்டு மெழுகின வாசலுக்குத்தான் லஷ்மி வருவா' என்பார் பாட்டி. துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு போட அம்மா வேண்டிக்கொண்டு கோயிலுக்குச் சென்ற போதெல்லாம் கூடவே சென்றதால், கோயில் பிரகாரங்களும், கர்ப்பகிரக வாசமும் மனதுக்குள் ஆழமாய்ப் பதிந்துபோயின.

வெள்ளிக்கிழமைதோறும் வீட்டிலேயே தலைமுறைகளாகச் செய்து வந்த அம்பாள் வழிபாட்டை அப்பாவும் செய்ததால், அம்பாள் மீதான பக்திப் பாடல்கள் அத்துப்படியாயின. பக்கத்துத் தெருவில் ரிட்டையர்டு போஸ்ட்மாஸ்டர் தாத்தா ஆரம்பித்த ஸ்லோக வகுப்புகளில் விளையாட்டாகச் சேர்ந்துகொண்டாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம், ருத்ரம் முதல் மந்திரபுஷ்பம் வரை அனைத்தும் தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும், தெளிவாய்ச் சொல்லுமளவுக்குக் தலைகீழ் மனப்பாடம். அடிக்கடி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் பக்திப்படங்களைப் பார்த்ததன் விளைவாக, `நம் கண் முன்னும் சாமி என்றைக்காவது நிஜமாகவே வந்து நிற்கும்' என்ற எண்ணமும் அவ்வப்போது மனதில் லேசாய் எட்டிப்பார்த்தது.

Syamala Ramesh babu
Syamala Ramesh babu

`எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பும் கடவுளை வேண்டிக்கொண்டு தொடங்கு. நாம் நினைத்தது நடந்தால், கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். நடக்காவிடில் நம் பிரார்த்தனையில் ஏதோ பிழை இருக்கிறது. வருடம் ஒரு முறை குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம். வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால் திருஷ்டி சுத்திப் போடவேண்டும்' - பால்ய பருவத்தில் ஆன்மிக அறிமுகம் இவ்வாறெல்லாம்தான் எனக்குள் விதையாய் விழுந்திருந்தது.

வாழ்க்கை பற்றிய புரிந்துணர்வுகள் மாறும்போதும், சூழல்களைப் பல கோணங்களிலிருந்தும், பலரின் கோணங்களிலுமிருந்தும் பார்க்கும்போதும், `ஆன்மிகம்' அதுவரை இல்லாத வேறொரு புது உருவம் எடுத்ததை உணரமுடிந்தது. `இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத்தங்கமே' - இந்த வரிகளைச் சிலிர்ப்பூட்டும் சில நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் காதுகளுக்குள் ஒலிக்கச் செய்திருக்கின்றன.

Representational Image
Representational Image

உடல் நலக்குறைவால், பதினொன்றாம் வகுப்பில் பல நாள்களை மருத்துவமனைக் கட்டிலிலேயே கழித்தேன். என் வகுப்பு மாணவர்கள் அனைவரும் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்துச் சென்ற அந்நாள், பொக்கிஷமானது. `உனக்கு ஒண்ணும் ஆகாது. சீக்கிரமே திரும்பவும் ஸ்கூலுக்கு வந்துடுவே நீ' என நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி, எனக்காகக் கண்களை மூடிச் சிறப்புப் பிரார்த்தனை செய்து, பைபிள் ஒன்றை என் தலையணை அடியில் வைத்தாள் என் வகுப்புத்தோழி. நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா? ஆன்மிகம் மீதான எனது கண்ணோட்டத்தை, புரிந்துணர்வை விரிவாக்கியவள் அவள்தான்.

இப்போது முதுகலை படிக்கும் என் மகனுக்கு அப்போது ஏழு வயது. ஒரு நள்ளிரவு ரயில் பிரயாணத்தில், அப்பர் பெர்த்திலிருந்து, தூக்கத்தில் பொத்தென அவன் கீழே விழுந்தபோது நான் பயத்தில் உறைந்துபோய்விட்டேன். என்னையும் என் கணவரையும் தேற்றி, என் குழந்தைக்காக அவன் பக்கத்தில் அமர்ந்தபடியே பயணம் முடியும்வரை, விடியற்காலைவரை தொழுகை செய்த மனிதரின் பிரார்த்தனை, பேதங்கள் கடந்தது.

நிதர்சன ஆன்மிகத்துக்கான புது விளக்கம் அன்று எனக்குக் கிடைத்தது. கால்நடை மருத்துவர் வருகைக்காக அவர் க்ளினிக் வாசலில் கண்ணீரோடு கையில் ஒரு நாய்க்குட்டியுடன் நின்ற தம்பியிடம், `என்னாச்சுப்பா?' என்றேன். `என்னான்னே தெரியல... ரெண்டு நாளா வாயே திறக்கமாட்டேங்குது. தண்ணிகூட குடிக்கல. கீழ்த்தாடை வீக்கமா இருக்கு...' என்றவன் அழுகையை அடக்க முடியாமல் விம்மினான். அவனைத் தேற்ற, `மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்குப்பா... செல்லப்பிராணிகளும் வீட்ல ஒருத்தரா ஆகிடுதுங்கதானே...' என்றேன். `இல்லீங்க இது நாங்க வளர்க்கிற நாய்க்குட்டி இல்ல. எங்க தெருவுல இருக்குற குட்டி. தினம் சாப்பாடு வெப்பேன். அப்படியே பழகிடுச்சு' என்றான் கண்ணீர் கசிந்திருந்த விழிகளுடன்.

எல்லா உயிரையும் சமமாகப் பாவிப்பது, தனதல்லாத ஒன்றிற்காகவும் தயவு காண்பிப்பது... என்ன ஓர் அழகான மனது! இந்த சூட்சுமத்தைக் கண்ணிமைக்கும் நொடிக்குள் நயமாய்ப் புரியவைத்த அந்தத் தம்பிதான் என் ஆன்மிக குரு.

ஒரு வாரம் என லீவ் சொல்லிவிட்டு, இரண்டு மாதங்கள் சொல்லாமல் விடுப்பெடுத்த பணிப்பெண், தீபாவளிக்கு இரண்டு நாள்கள் முன்னதாக மீண்டும் வந்தார். கோபம் கண்ணை மறைத்ததால் மனிதம் சற்று பின் வாங்கியது. `இந்த வருஷ போனஸ் கொடுக்காம விட்டாத்தான் தெரியும்' என்றேன் புலம்பலாக. `ஏம்மா... ரெண்டு மாசம்தானே வரல? மீதி பத்து மாசத்துக்கான போனஸ் தர வேண்டாமா? நீ இப்படிப் பேசவே மாட்டியே... என்னாச்சு உனக்கு?' என்றார் என் மாமா. அடடா... தன்னைப்போல பிறரையும் பாவித்தல். அடைத்திருந்த மனிதத்தின் ஊற்றுக்கண்களைத் திறந்துவைத்த என் மாமனாரிடம் மீண்டும் ஓர் ஆன்மிகப் பாடம்.

Street Dog
Street Dog

ரெண்டுக்கும் ஒழுங்கா துடைக்கலைன்னா தோலெல்லாம் அரிக்கும் பாவம்...' - மரணப்படுக்கையில் அப்பா இருந்த நாள்களில், அவருக்கு அந்தப் பணிவிடைகளைச் செய்த கைகளுக்கு எப்படி நன்றி சொல்வது? முகம் சுளிக்காது, நடு இரவு, அதிகாலை எனக் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து, `எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்காங்க. உங்க அப்பா, எங்கப்பாவா இருந்தா செய்யமாட்டேனாக்கா? எப்பன்னாலும் ஒரு போன் பண்ணுங்கக்கா வர்றேன்' என ஒவ்வொரு முறையும் தவறாமல் இதமாக உத்தரவாதம் அளித்த அப்பாவின் அபிமானியின் முகம், நினைவில் நீங்காத சித்திரம். செய்நன்றி மறவாமைகூட ஆன்மிகத்தின் ஓர் அவதாரம்தானோ?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு