Published:Updated:

சீர்காழி: 30 ஆண்டுகளுக்குப்பின் சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்... தொடங்கிய திருப்பணிகள்!

கும்பாபிஷேக தொடக்கவிழா
கும்பாபிஷேக தொடக்கவிழா

சீர்காழி : 30 ஆண்டுகளுக்குப்பின் ஸ்ரீ சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இதில் மூன்று ஆதீனகர்தர்கள் பங்கேற்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சீர்காழி ஸ்ரீ சட்டநாதர் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளின் துவக்க விழா இன்று (27.08.2021) நடைபெற்றது. தருமபுரம் திருப்பனந்தாள் மற்றும் மதுரை ஆதீனகர்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கும்பாபிஷேக தொடக்கவிழா
கும்பாபிஷேக தொடக்கவிழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீன பரிபாலனத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சட்டநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருநிலைநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயமான இங்கு ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டிய திருத்தலமாகும்.

மூன்று தளங்களில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் முதல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரரும், இரண்டாவது தளத்தில் மலைமீது சிவன்-பார்வதி கயிலாயக் காட்சியை உணர்த்தும் தோணியப்பர் உமாமகேஸ்வரி கோலத்திலும், அதற்குமேலுள்ள மூன்றாவது தளத்தில் முத்து சட்டைநாதர் எனவும் மூன்று விதமாக சிவபெருமான் ஒரே ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்.

அஷ்ட பைரவர்களுக்கும் தனித்தனி சந்நிதியாகவுள்ள இந்த ஆலயம் பைரவ க்ஷேத்திரமாகும் என்று கூறப்படுகிறது. சமயக் குரவர்களால் தேவாரம் பாடப் பெற்ற இந்த ஆலயத்தில் 1991-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் ஏற்பாட்டின்படி கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் இன்று தொடங்கின.

கும்பாபிஷேக தொடக்கவிழா
கும்பாபிஷேக தொடக்கவிழா

இதனை முன்னிட்டு நேற்று இரண்டு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து இன்று காலை சிறப்பு வழிபாடு பூர்ணாஹுதி மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.  ஆலயத்தின ஈசானிய மூலையில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு தருமபுர ஆதீனம் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் மதுரை ஆதீனம் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், திருப்பனந்தாள் காறுபாறு சபாபதி தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழி சட்டைநாதர் ஆலய கும்பாபிஷேக பணிகள் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு