Published:Updated:

சிங்கப்பூருக்குக் கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை - 43 ஆண்டுகளுக்குப்பின் மீட்கும் நடவடிக்கை தொடங்கியது!

ஸ்ரீ தஜபுஜ ஆஞ்சநேயர்
ஸ்ரீ தஜபுஜ ஆஞ்சநேயர்

திருடப்பட்ட சிலைகளுள் 3 பல்வேறு கைகள் மாறி லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தரங்கம்பாடி அருகேயுள்ள அனந்தமங்கலம் பெருமாள் கோயிலில் 43 ஆண்டுகளுக்கு முன்பு களவாடபட்ட 4 சிலைகளுள் மூன்றை ஏற்கெனவே லண்டனிலிருந்து மீட்கப்பட்டன. இந்நிலையில், எஞ்சிய ஆஞ்சநேயர் சிலை சிங்கப்பூர் அருங்காட்சியகம் ஓன்றில் இருப்பதாகத் தகவல் கிடைக்கவே, அதனை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசின் அறநிலையத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியருகே அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபாலசுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு அனந்தமங்கலம் என்ற பெயர் வரக் காரணமும் உண்டு. ராமபிரான் கட்டளையை ஏற்ற அனுமன், கடலில் பதுங்கியிருந்த இரு அரக்கர்களை அழித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கும்போது, இளைப்பாற கீழே இறங்கி, இயற்கை அழகுடன் இருந்த இப்பகுதியில், மன நிறைவோடு, மகிழ்ச்சி பொங்க ஆனந்ததாண்டவம் ஆடினார். எனவே இத்தலம் 'ஆனந்தமங்கலம்' என்றழைக்கப்பட்டு, மருவி தற்போது 'அனந்தமங்கலம்' என்றழைக்கப்படுகிறது.

ஸ்ரீ தஜபுஜ ஆஞ்சநேயர்
ஸ்ரீ தஜபுஜ ஆஞ்சநேயர்

கடந்த 1978-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி, இந்தக் கோயிலிலிருந்த ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகிய வெண்கலச் சிலைகள் திருடப்பட்டன. இந்தச் சிலைகள் அனைத்தும் கி.பி 15 -ம் நூற்றாண்டை சேர்ந்தவை. ராமர், லட்சுமணர் சிலைகள் தலா 30 கிலோ எடையும், சீதை சிலை 25 கிலோ எடையும், அனுமன் சிலை 15 கிலோ கொண்டதாகவும் இருந்தன. 

ஒட்டு மொத்தமாக 4  சிலைகளும் காணாமல் போனது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக, அப்போதைய கோயில் நிர்வாக அதிகாரி செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், பொறையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு 3 பேரை கைது செய்தனர். ஆனால், சிலைகளை மீட்க முடியவில்லை.

திருடப்பட்ட சிலைகளுள் 3 பல்வேறு கைகள் மாறி லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன. சிங்கப்பூரில் 'இந்தியா பிரைடு' என்ற தன்னார்வ நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் அமைப்பாளர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம்  இந்திய கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க உதவி வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு, இந்த நிறுவனத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் லண்டனில் ஒரு ராமர் சிலை விற்பனைக்கு வந்ததை அறிந்தார். அந்தச் சிலையில் விஜயநகரப் பேரரசு காலத்தைச் (கி.பி 15-ம் நூற்றாண்டு) சேர்ந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கொண்டு, எந்தெந்த இந்தியக் கோயில்களில் இது போன்ற சிலைகள் காணாமல் போயிருந்தன என்பது குறித்த ஆராய்ச்சியில் விஜயகுமார் இறங்கினார். 1978-ம் ஆண்டு அனந்தமங்கலத்தில் சிலைகள் காணாமல் போனது தெரிய வந்தது. மேலும் புதுச்சேரியில் உள்ள ஆவணக்காப்பகம் ஒன்றில் இருந்த அனந்தமங்கலம் கோயில் சிலைகள் குறித்த புகைப்படங்கள் மூலம், லண்டனில் விற்பனைக்குள்ள சிலை,  அனந்தமங்கலம் கோயில் சிலைதான் என உறுதி செய்தார்.

ஸ்ரீ தஜபுஜ ஆஞ்சநேயர்
ஸ்ரீ தஜபுஜ ஆஞ்சநேயர்

பின்னர், தமிழக சிலை திருட்டு தடுப்புப் போலீசாருக்கு விஜயகுமார் தகவல் அளித்தார். அப்போதைய சிலை திருட்டுத் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி அபய்குமார் சிங் உத்தரவின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, லண்டன் போலீசுக்குத் தகவல் அளித்தனர். சிலைகளை வைத்திருந்தவர், இந்தியக் கலைப் பொருள்களைச் சேகரிப்பவர் என்பதும், அவர் திருட்டு சிலை என அறியாமல் வாங்கியதும் தெரிய வந்தது. அவர் தன்னிடமிருந்த ராமர், லட்சுமணர், சீதை ஆகிய சிலைகளை லண்டன் போலீசிடம் ஒப்படைத்தார். நான்காவது சிலையான அனுமன் சிலை, லண்டனில் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.

லண்டன் நகரப் போலீசாரால் கடந்த 2020-ம் ஆண்டு செப் 15-ம் தேதி அந்தச் சிலைகள், லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி அச்சிலைகள் அனந்தமங்கலம் வந்தடைந்தன.

இந்நிலையில், காணாமல் போன நான்காவது சிலையான அனுமன் சிலையையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா பிரைடு நிறுவனத்தினர் தொடர்ந்து ஈடுபட்டனர். சிங்கப்பூரிலுள்ள புகழ்பெற்ற ஏ.சி.எம் எனப்படும் ஆசிய நாகரிகங்கள் குறித்த அருங்காட்சியகத்தில் அனுமன் சிலை இருப்பதைக் கண்டறிந்தனர். இந்தச் சிலை 1998 முதல் சிங்கப்பூரில் இருப்பதாக இந்தியா பிரைடு நிறுவனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆவணக்காப்பதிலுள்ள புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்தச் சிலை அனந்தமங்கலம் கோயில் சிலைதான் என உறுதியாக தெரிந்தது.

ஆஞ்சநேயர் சிலை
ஆஞ்சநேயர் சிலை

இந்தத்  தகவல் கிடைத்ததும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் உயரதிகாரிகளிடம், சிலையை உடனடியாக மீட்க, நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கை  அளிக்கும்படியும் கூறியுள்ளதாகத் தகவல். அறிக்கை கிடைத்தபின் முதல்வரிடம் ஆலோசித்து சிங்கப்பூரிலிருந்து சிலையை மீட்கும் பணி துவங்கும் எனத் தெரிகிறது.

களவாடப்பட்ட அனுமன் சிலையும் மீண்டும் கோயிலுக்கு வரப்போகும் செய்தி அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு