Published:Updated:

திருப்பதி கருடசேவை: கொட்டும் மழையில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்! - கருடாழ்வாரின் சிறப்புகள் அறிவோம்!

திருப்பதி
திருப்பதி

நேரம் செல்லச் செல்ல பெரும் திரளாகப் பக்தர்கள் கூட்டமாக நான்கு மாட வீதிகளில் வேங்கடேசப் பெருமாளைத் தரிசிக்க மதியத்திலிருந்தே காத்திருக்கத் தொடங்கினர்.

திருப்பதியில் ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 30-ம் தேதி தொடங்கி, ஆறு நாள்களாக நடைபெற்று வருகின்றது. பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 3 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Garuda seva
Garuda seva

நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் வேங்கடேசப் பெருமாள் திருமலையின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்தார். காலையிலே பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. நேரம் செல்லச் செல்ல பெரும் திரளான பக்தர்கள் கூட்டமாக நான்கு மாட வீதிகளில் வேங்கடேசப் பெருமாளைத் தரிசிக்க மதியத்திலிருந்தே காத்திருக்கத் தொடங்கினர்.

திருமலை முழுவதும் ஒரு அங்குலம்கூட நகர முடியாதபடி மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலையில் பெரும் மழை கொட்டியபோதும் இம்மியளவும் நகராமல் வழிமேல் விழி வைத்து பெருமாளின் கருட சேவையைத் தரிசிக்கக் காத்திருந்த காட்சி மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது.

Garuda seva
Garuda seva

மலை முழுவதும் பல்வேறு இடங்களில், குழுமியிருந்த பக்தர்களுக்கு சாம்பார்சாதம், பொங்கல், உப்புமா, ரவா கேசரி, நீர் மோர், பால், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இதற்கென விரிவான ஏற்பாடுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்திருந்தது. சரியாக இரவு 7 மணிக்கு கருடாழ்வாரின் தோள்களில் மலையப்பசாமி வித்தியாசமான நகை அலங்காரத்துடன் உள்ளம் கொள்ளை கொள்ளும் பேரழகுடன் கம்பீரமாகப் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தி மழையில் நனைந்தனர். கொட்டும் மழையில் லட்சக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என கோஷம் எழுப்பியது விண்ணதிரச் செய்தது.

பெரிய திருவடி கருடாழ்வாரின் சிறப்புகளை அறிவோமா?

* திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய பொறுப்பில் இருக்கும் கருடாழ்வார் எனும் 'பெரிய திருவடி' சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.

* தாயின் விடுதலைக்காக, அமிர்தக் கலசம் கொண்டு வர தேவலோகம் சென்று தேவர்களை எதிர்க்கின்றார். இந்திரன் வஜ்ராயுதத்தால் தாக்க, பலசாலியான கருடனுக்கு வஜ்ராயுதம் பாதிப்பை தரவில்லை.

Andal malai
Andal malai

* இந்திரனுக்குப் பெருமையும் வஜ்ராயுதத்துக்கு மதிப்பும் தந்து, கருடன் தன் சிறகின் ஒரு துளியை உதிர்த்துவிட்டு இந்திரனிடம் வெற்றிபெற்று, அமிர்தக் கலசத்துடன் புறப்படுகிறார். இதைக் கண்ட தேவாதி தேவர்கள் கொடிய பாம்புகளுக்கு அமிர்தம் கிடைக்கக் கூடாதே, என அஞ்சி திருமாலிடம் ஓடினர்.

* திருமாலுக்கும் கருடனுக்கும் தொடர்ந்து 21 நாள்கள் அமிர்தக் கலசத்தை மீட்கப் போர் நடந்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

* தாய் மீது அளவற்ற பற்று வைத்திருந்த கருடனின் மன உறுதியைப் பாராட்டி அமிர்தக் கலசத்தைக் கொண்டுசெல்ல, திருமாலின் அனுமதி கிடைக்கிறது.

* திருமாலுடன் போரிட்டு அமிர்தக் கலசத்தைப் பெற்ற கருடனுக்கு திருமால் என்ன வரம் வேண்டுமெனக் கேட்டார். கருடனோ தான் வெற்றிபெற்ற பெருமையில், இறைவனிடமே, ‘உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் தான் தருவதாக அகந்தையில் கூறிவிடுகிறார்.

tirupaty
tirupaty

* இறைவனும், எனக்கு வாகனமாக இருந்து, சேவை சாதிக்க வேண்டுமெனக் கேட்கவே அன்று முதல் பெருமாளின் வாகனமாகி திருமாலுக்கு சேவை செய்ய வைகுண்டம் வந்துவிட்டார்.

* பெற்றத் தாய்க்கே முதலிடம் கொடுத்துப் போற்றி வணங்கியதால், தாயின் தெய்வீக வரத்தால் திருமாலையே கருடன் எதிர்த்திருந்தாலும், திருமாலுக்கே வரம் தந்த பெருமையையும் திருமாலுக்கே வாகனமான பெருமையுமாக இருபெரும் பேறுகள் கருடாழ்வாருக்குக் கிடைத்தன.

* தாயைப் போற்றி வழிபட்டு வந்தால், வீரம் விவேகம் மட்டுமன்றி, என்றும் நீங்காத இறை இயல்புகளும் கிடைக்கும் என்பதை கருடாழ்வார் நமக்குச் சொல்லித் தருகிறார்.

* திருமாலுக்கு அருகிலேயே இருந்து, அனுதினமும் தொண்டு செய்து வருவதைப் பயன்படுத்தி தன்னை நாடி வரும் பெருமாளின் பக்தர்கள் சகல ஐஸ்வர்யங்களுடனும் வம்ச வளர்ச்சி பெற்று, வாழ்வாங்கு வாழ வேண்டி பிரார்த்தனை செய்து வருவதாக ஐதிகம்.

garudalvar
garudalvar

* தனக்காக கேட்காமல், கருடாழ்வார் பிறருக்கு கேட்கும் பாங்கினால், நமக்கு சகல நன்மைகளும் தருகின்றார். இதை உணர்த்தவே கருடாழ்வார், திருமால் முன் கைகூப்பி வணங்கியபடி இருக்கிறார்.

* திருப்பதி திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் கோயிலின் தங்க துவஜஸ்தம்பத்தில், மேல் கருடக்கொடிக்கு பூஜை செய்து கருடக்கொடியை ஏற்றிய பிறகுதான் தொடங்குவார்கள். இது கருடன் கொடியேற்று விழா எனப்படும் முதல் நிகழ்ச்சி ஆகும். பிரம்மோற்சவத்தில் கருட சேவை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

garudazhvar
garudazhvar

வைகுந்தத்தில் இருந்த எட்டு விமானங்களில் ஒன்றான கிரீடாசலத்தை ஏழுமலையான் உத்தரவுப்படி திருப்பதிக்கு கொண்டு வந்தவர் கருடன். இன்று திருப்பதியில் உள்ள ஸ்ரீ அனந்த சயன விமானமே அது.

விடியற்காலையில் பாடும் சுப்ரபாதத்தில்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த!

உத்திஷ்ட கருடத்வஜ!!

என்னும் வரிகள்

‘கருடக் கொடியோனே கோவிந்தா... பொழுது புலர்ந்தது எழுந்தருள்வாய்... எழுந்தருள்வாய்!’ என்று பொருள்பட பாடப்படுகிறது. இதுவே கருடாழ்வாரின் சிறப்பு.

அடுத்த கட்டுரைக்கு