108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம், பெரியகோயில் என்றும் அழைக்கப்படுகிற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 22-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசித் திருவிழாவில், பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான ஜனவரி 1-ம் தேதி நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 2-ம் தேதியும், ஜனவரி 8-ம் தேதி திருக்கைத்தல சேவையும் நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம், கோயில் நாலாம் பிராகாரத்தின் கிழக்கிலுள்ள மணல்வெளியில் நேற்று மாலை நடைபெற்றது.

இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் மாலை 5 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு, ஆரியபட்டாள் வாசல்வழியாக மாலை 5.30 மணிக்கு மணல்வெளிக்கு வந்தடைந்து 6 மணிவரை தங்கக் குதிரையில் ஓடியாடி வையாளி கண்டருளினார். இதனை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் கண்டு மெய்சிலிர்த்து நின்றனர். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார்.
இரவு 8.15 - 9.30 மணிவரை அரையர் சேவையுடன் பொதுஜன சேவையும் நடைபெற்றது. அங்கிருந்து இரவு 11.30 மணியளவில் வீணை வாத்தியத்துடன் புறப்பட்ட நம்பெருமாள், நள்ளிரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். 11-ம் தேதி தீர்த்தவாரியும், 12-ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறுவதுடன் வைகுந்த ஏகாதசி விழா நிறைவடைகிறது.

திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வங்களை எல்லாம் இழந்தவன் திருமங்கை மன்னன். அந்தளவிற்குப் பெருமாளின் மீது அளவு கடந்த பக்தி கொண்ட திருமங்கை மன்னன், தனது பெருமாள் கைங்கர்யம் தொடர, வழிப்பறியில் ஈடுபட்டார். அப்படி ஒருநாள் திருமங்கை மன்னன் வழிப்பறியில் ஈடுபட்டபோது, பெருமாளே நேரில் தோன்றி சிறிதுநேரம் விளையாட்டுக் காட்டிவிட்டு அவரது காதில் 'ஓம்நமோ நாராயணாய' எனும் மந்திரத்தைச் சொல்லிய நிகழ்வு நேற்று வேடுபறி வைபவத்தின் ஒருபகுதியாக பக்தர்கள் முன்னிலையில் நடத்திக் காட்டப்பட்டது.
இந்தக் காட்சியினை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்தோடு கண்டு ரசித்து நம்பெருமாளை வணங்கினர்.