Published:Updated:

‘தங்கக்குதிரையில் ஓடியாடிய நம்பெருமாள்!’ - ஸ்ரீரங்கம் கோயில் வேடுபறி வைபவம்!

வேடுபறி வைபவம்
News
வேடுபறி வைபவம் ( DIXITH )

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடந்தது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 3-ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 4-ம் தேதி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் திருமொழித் திருநாள் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான டிசம்பர்13-ம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ராப்பத்து உற்சவத்தின் முதல்நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அந்தவகையில் டிசம்பர் 14-ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது.

தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள்
தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள்
DIXITH

ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான 21.12.21 அன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி கோயில் நாலாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல் வெளியில் நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மணல்வெளி வந்தடைந்தார். அங்கு மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் மணல்வெளியில் ஓடியாடி வையாளி கண்டருளினார். திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் கைங்கர்யம் தொடர வழிப்பறிக் கொள்ளையன் ஆனார். இவரை தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டு காட்டி பின் அவரது காதில் ‘ஓம்நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் நேற்று வேடுபறி வைபவத்தின் ஒருபகுதியாக பக்தர்கள் முன்னிலையில் நடத்திக் காட்டப்பட்டது. இந்தக் காட்சியினை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்தோடு கண்டு ரசித்து நம்பெருமாளை வணங்கினர்.

வேடுபறி வைபவம்
வேடுபறி வைபவம்
DIXITH

பின்னர் இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்தார். அங்கு இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் புறப்பட்டு இரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

வேடுபறி வைபவத்தையொட்டி அன்று பரமபதவாசல் திறக்கப்படவில்லை. விழாவின் 10-ம் நாளான நேற்று தீர்த்தவாரியும், 24-ம் தேதி நம்மாழ்வாழ் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் இந்த வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறவுள்ளது.