Published:Updated:

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா - திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது!

அரங்கநாதர்
News
அரங்கநாதர்

வைகுண்ட ஏகாதசித் திருவிழாவில் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆனது பகல்பத்து மற்றும் இராப்பத்து என 20 நாள்கள் அபிநயத்துடன் படிப்பதாகும்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா - திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது!

வைகுண்ட ஏகாதசித் திருவிழாவில் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆனது பகல்பத்து மற்றும் இராப்பத்து என 20 நாள்கள் அபிநயத்துடன் படிப்பதாகும்.

Published:Updated:
அரங்கநாதர்
News
அரங்கநாதர்
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூகோல வைகுண்டம், பெரியகோயில் என்றும் அழைக்கப்படுகிற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து உற்சவங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் (வைகுண்ட ஏகாதசி திருமொழி, திருவாய்மொழித் திருநாள்கள்) முக்கியத் திருவிழா ஆகும். இது திருநெடுந்தாண்டகம், பகல்பத்து, இராப்பத்து, இயற்பா என்று 22 நாள்கள் நடைபெறும்.
நம்பெருமாள்
நம்பெருமாள்

அந்த வகையில், இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசித் திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்றிரவு (டிசம்பர் 22) தொடங்கியது. வைகுண்ட ஏகாதசித் திருவிழாவில் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆனது பகல்பத்து மற்றும் இராப்பத்து என 20 நாள்கள் அபிநயத்துடன் படிப்பதாகும். அதற்காக அரங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று, இந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் படிக்கத் தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும். மூலஸ்தானம் முன்பாக உள்ள காயத்ரி மண்டபத்தில் இரவு 7 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கிது. அதனைத்தொடர்ந்து 7.45 மணி முதல் 9 மணிவரை சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகம் அபிநயமும் வியாக்யானமும் நடைபெற்றது.

அப்போது அரையர்கள் திருநெடுந்தாண்டகம், முன்னுருவாய் பாசுரங்களை அபிநயத்துடன் பாடினார்கள். இரவு 9 - 9.30 மணி வரை திருப்பணியாரம் அமுது செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 10 - 10.30 வரை திருவாராதனமும், 10.30 -11 மணி வரை திருக்கொட்டாரத்திலிருந்து சிறப்பு அலங்காரமும், இரவு 11.00 - 11.30 மணி வரை தீர்த்த கோஷ்டியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பகல்பத்து உற்சவத்தின் முதல்நாளான திருமொழித்திருநாள் இன்று (டிசம்பர் 23) தொடங்குகிறது.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

அதன் தொடர்ச்சியாக பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான 1.1.2023 அன்று நம்பெருமாள் மோகினி அலங்காரமும், முக்கிய நிகழ்ச்சியாக 2.1.2023 அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அன்று நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து காட்சி அளிப்பார். இதனைத் தொடர்ந்து 2.1.2023 முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழித் திருநாள் தொடங்குகிறது. ராப்பத்து நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்ச்சியாக 8.1.2023 அன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 9.1.2023 அன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11.1.2023-ல் தீர்த்தவாரியும் நடைபெறும்.

தொடர்ந்து 12.1.2023 அன்று நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவில் மூலவர் பெரிய பெருமாள் முத்தங்கி சேவையைப் பகல் பத்து மற்றும் ராப்பத்து ஆகிய 20 நாள்களும் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.