Published:Updated:

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்: மார்கழி உற்சவத்தில் இராப்பத்து நிகழ்ச்சி தொடக்கம்!

ஶ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்

இராப்பத்து வைபவத்தின் தொடக்க நிகழ்ச்சிகளைக்காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்: மார்கழி உற்சவத்தில் இராப்பத்து நிகழ்ச்சி தொடக்கம்!

இராப்பத்து வைபவத்தின் தொடக்க நிகழ்ச்சிகளைக்காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Published:Updated:
ஶ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. ஆண்டாள் அவதரித்த சிறப்புமிக்க தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாள், ரெங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முக்கிய ஸ்தலம். ஆண்டாள், மார்கழி மாதம் திருப்பாவை பாடி, பாவை நோன்பிருந்து பகவான் கண்ணனைக் கரம் பிடித்தார் என்பது ஐதிகம். இதையொட்டி ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாதத்தில் நடைபெறும் பகல் பத்து, இராப்பத்து உற்சவம், வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம் ஆகியவை மிகவும் பிரசித்திப்பெற்றது.

அதன்படி இந்த ஆண்டு ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் பகல்பத்து உற்சவம் கடந்த 23-ம் தேதி பச்சை பரத்தலுடன் வெகு விமர்சையாகத் தொடங்கியது.

அருள்பாலித்தல்
அருள்பாலித்தல்

பகல் பத்து உற்சவத்தில் வடபத்ர சயனர் சந்நிதியில் உள்ள கோபால விலாசம் பகல்பத்து மண்டபத்தில் தினசரி பலவிதமான அலங்காரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், ஆழ்வார்கள் எழுந்தருளி ஒருசேர பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் வைபவம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்றுடன் பகல்பத்து உற்சவம் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, இராப்பத்து உற்சவம் இன்று தொடங்கியது. இராபத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 6:30 மணிக்குப் பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரமபதவாசல் முன்பாக ஆழ்வார்கள் எதிர்கொள்ள முதலில் பெரிய பெருமாள், பின்னர் ஆண்டாள் ஆகியோர் கோவிந்தா... கோவிந்தா... எனும் கோஷம் முழங்க பரமத வாசல் வழியாக எழுந்தருளி இராப்பத்து மண்டபத்தை வந்தடைந்தனர்.

ஆண்டாள் ரெங்கமன்னார்
ஆண்டாள் ரெங்கமன்னார்

தொடர்ந்து, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல், மண்டபம் எழுந்தருளி திருத்திரை வாங்கி திருவாராதனம், சேவா காலம், தீர்த்தம் விநியோகம் ஆகியவை நடைபெற்றன. மாலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பாடு கண்டருளி ஆஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இராப்பத்து வைபவத்தின் தொடக்க நிகழ்ச்சிகளைக்காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.