Published:Updated:

சுசீந்திரம் மார்கழித் தேரோட்டம்: கொரோனாவுக்கு பின் தமிழகத்தில் நடக்கும் முதல் தேர்த் திருவிழா!

சுசீந்திரம் கோயில் தேரோட்டம்
சுசீந்திரம் கோயில் தேரோட்டம் ( பைல் படம் )

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி பெரும் திருவிழாவில் தேரோட்டம் நடத்தக் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அனுமதி அளித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க சில கட்டுப்பாடுகளுடன் திருவிழாவை முழுமையாக நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 260 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சில தளர்வுகள் இருந்தாலும் பல கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஊரடங்குக் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கோயில்களில் மக்கள் திரளாகக் கூடும் திருவிழாக்கள், அன்னதானம், தேரோட்டம் உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த சுமார் எட்டு மாதத்திற்கும் மேலாக எந்த கோயில்களிலும் தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி பெரும் திருவிழாவில் தேரோட்டம் நடத்தக் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அனுமதி அளித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கச் சில கட்டுப்பாடுகளுடன் திருவிழாவை முழுமையாக நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு தமிழகத்தின் முதல் தேரோட்டம் சுசீந்திரத்தில் நடைபெற உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில்
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் மிகவும் பழைமையானது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்றாகக் காட்சி தருவதால் இந்தக் கோயில் மூலவருக்குத் தாணுமாலைய சுவாமி எனப் பெயர் வந்தது. இந்திரன் சாப விமோசனம் பெற்ற திருத்தலம் என்பதால் இத்தலத்திற்கு சுசீந்திரம் எனப் பெயர் வந்தது. இக்கோயிலில் ஆஞ்சநேயர் விஸ்வரூப தரிசனம் அளிப்பது மிகவும் சிறப்பானதாகும். இங்கு மார்கழி மற்றும் சித்திரை மாதங்களில் பெரும் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்த நிலையில் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழிப் பெருந் திருவிழாவை முழுவதுமாக நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம், சுவாமி வாகனங்கள் வரும்போது நடக்கும் அர்ச்சனை மற்றும் அன்னதானம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 200 பேருக்குமேல் ஒரே நேரத்தில் கூடி நிற்கக்கூடாது, தெருக்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் கலை நிகழ்ச்சிகள், வாகன பவனி, தேர்பவனி ஆகியவை எந்தக் குறையும் இல்லாமல் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி திருக்கோவில் தேரோட்டம்
சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி திருக்கோவில் தேரோட்டம்
பைல் படம்
சுசீந்திரம் கோயிலில் இம்மாதம் 21-ம் தேதி (டிச.21) கொடியேற்றத்துடன் மார்கழிப் பெரும் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 30-ம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடக்கிறது. 9-ம் நாள், அதாவது டிசம்பர் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வேளிமலை குமாரசுவாமி, மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிகள் வெள்ளிக்குதிரையிலும், கோட்டாறு வலம்புரி விநாயகர் மூஷிக வாகனத்திலும் வரும் 22-ம் தேதி புறப்பட்டு, 23-ம் தேதி சுசீந்திரம் கோயிலைச் சென்றடைகிறது. பின்னர் அன்று மக்கள்மார் சந்திப்பு என்ற தெய்விகச் சடங்கும் நடைபெறுகிறது. மார்கழி பெரும்திருவிழா ஏற்பாடுகள் கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் நடந்து வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு