Published:Updated:

மகாராஷ்டிரா: கொரோனா 2வது அலைக்குப் பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறப்பு... என்னென்ன கட்டுப்பாடுகள்?

மகராஷ்டிராவில் கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு வழிபாட்டுத்தலங்கள் பொதுமக்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் கொரோனா அச்சம் காரணமாக வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்த பிறகு அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டுத்தலங்கள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. வழிபாட்டுத்தலங்களைத் திறக்கவேண்டும் என்று கோரி பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதையடுத்து கடந்த மாதம் முதல்வர் உத்தவ்தாக்கரே அக்டோபர் 7-ம் தேதி, அதாவது நவராத்திரியின் முதல் நாளில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் படி பல மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் வழிபாட்டுத்தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

இதற்காக வழிபாட்டுத்தலங்களில் தேவையான கிரிமி நாசினி தெளிக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரசாதம் எதுவும் வழிபாட்டுத்தலங்களில் வழங்கப்படாது என்றும் 50 சதவீத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் மும்பாதேவி கோயிலில் வழிபட்ட உத்தவ்
குடும்பத்துடன் மும்பாதேவி கோயிலில் வழிபட்ட உத்தவ்

வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநில அமைச்சர் ஜெயந்த்பாட்டீல் மற்றும் துணை முதல்வர் அஜித்பவார் ஆகியோர் மும்பை சித்திவிநாயக் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தனது மனைவி மற்றும் மகனுடன் மும்பாதேவி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே மகாலட்சுமி கோயிலில் சென்று வழிபட்டார்.

மகாராஷ்டிராவிலுள்ள மிகவும் பிரபலமான ஷீர்டி சாய்பாபா கோயில் நிர்வாகம் பக்தர்களின் வருகைக்காகத் தேவையான வசதிகளைச் செய்துள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களை மட்டும் தற்போது அனுமதிக்கக் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் ஷீர்டி சாய்பாபா கோயிலுக்கு செல்வது வழக்கம். அந்தக் கோயில், தற்போது திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு