பழநியில் தைப்பூசப் பெருவிழா... தேரில் கோலாகலமாய் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி!

தைப்பூசப் பெருவிழா இன்று பழநியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இன்று அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான பழநியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தைப்பூசம் தமிழர்களின் பாரம்பர்யமான விழாக்களில் ஒன்று. இந்த நாளில் முருகன் அருளும் தலங்களில் எல்லாம் சிறப்பு உற்சவங்கள் நடைபெறும். அதிலும் பழநி பக்தர்கள் வருகையால் அதிரும். சுற்றியிருக்கும் பல ஊர்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து விழாவில் கலந்துகொள்வர்.

இன்று காலை பழநி தண்டாயுதபாணி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. ஊர் கோயிலான பெரியநாயகி அம்மன் கோவில் முன்பாக உள்ள தேரடியிலிருந்து தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இன்று மாலை நாலு மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. வழக்கம்போல் கோயில் யானை கஸ்தூரி தேரைத் தள்ளிவிட்டுத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தது. முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் தேரில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி அருளினார்.

பொதுவாக தைப்பூச நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அந்த நிலை கொஞ்சம் மாறியிருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது. ஆனால் வந்திருந்த பக்தர்கள் நிறைவான தரிசனம் கிடைத்ததாகச் சொல்லிச்சென்றனர்.