Published:Updated:

ஆக்கிரமிப்பு அகற்றம்; புனரமைக்க ரூ.7 கோடி - புதுப் பொலிவு பெறும் தக்கோலம் அழகுராஜப் பெருமாள் கோயில்!

திருப்பணி தொடக்க விழா

‘‘தமிழகத்தில் இதுவரை ரூ.3,943 கோடி மதிப்பீட்டிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன’’ என்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

ஆக்கிரமிப்பு அகற்றம்; புனரமைக்க ரூ.7 கோடி - புதுப் பொலிவு பெறும் தக்கோலம் அழகுராஜப் பெருமாள் கோயில்!

‘‘தமிழகத்தில் இதுவரை ரூ.3,943 கோடி மதிப்பீட்டிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன’’ என்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

Published:Updated:
திருப்பணி தொடக்க விழா

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலிருக்கும் தக்கோலம் பகுதியில் 2.35 ஏக்கர் பரப்பளவில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட ‘அருள்மிகு மங்கள லட்சுமி சமேத அழகுராஜப் பெருமாள் திருக்கோயில்’ அமைந்திருக்கிறது. சுமார் 1,100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இத்திருக்கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்ததால், கோயில் கோபுரத்தைத் தவிர்த்து சுற்றியிருக்கும் அனைத்து இடத்தையும் பொதுமக்களே ஆக்கிரமித்துக் கொண்டனர். கோயில் இடத்தில் மொத்தமாக 53 வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், அழகுராஜப் பெருமாள் கோயில் இடத்தை மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறை அதிரடி காட்டியது.

அழகுராஜப் பெருமாள் கோயில் கோபுரம்
அழகுராஜப் பெருமாள் கோயில் கோபுரம்

அதன்படி, சமீபத்தில் 53 வீடுகளுக்கும் இடித்து அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று இடமும் வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அழகுராஜப் பெருமாள் கோயிலைப் பழைமை மாறாமல் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க உபயதாரர்கள் இரண்டுப் பேர் முன்வந்தனர். இந்த நிலையில், இன்று காலை திருப்பணிகள் மேற்கொள்வதற்கான தொடக்க விழா நடைபெற்றது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி இருவரும் திருப்பணியைத் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

‘‘இந்தப் பணிகள் ஒன்றரை ஆண்டுகளில் முடிவுறும். கோயில் முழுக்க முழுக்கக் கற்கோயிலாகக் கட்டப்படும். மகா மண்டபம், கருவறை, ராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்படும். தொடர்ந்து மதில் கட்டும் பணி, தரைத்தளம் அமைத்தல், பரிவார சந்நிதி, மடப்பள்ளி, கருடாழ்வார் சந்நிதி மற்றும் கொடி மரம் அமைக்கும் பணி, திருக்குளத் திருப்பணி ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பணி தொடக்க விழா
திருப்பணி தொடக்க விழா

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ‘‘அழகுராஜப் பெருமாள் திருக்கோயிலின் பழைமையை, படிகத்திலுள்ள பராந்தகச் சோழன் காலத்துக் கல்வெட்டு உணர்த்துகிறது. இக்கோயிலில், ரூ.7 கோடி மதிப்பீட்டில் 11 வகையான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழகத்தில் இதுவரை ரூ.3,943 கோடி மதிப்பீட்டிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. அதாவது, ஆயிரம் ஏக்கருக்கு மேலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல, 1 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்களுக்கு ‘ஹெச்.ஆர் அண்ட் சி - இந்து சமய அறநிலையத்துறை’ என்று முத்திரையிட்ட தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளும் முழுமைப் பெற்றிருக்கின்றன. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் கிட்டத்தட்ட 1 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன’’ என்றார்.