பொதுவாக சிவபெருமான் 'நீலகண்டேஸ்வரர்' என்ற பெயரில் எழுந்தருளியுள்ள தலங்களை தரிசிப்பது மிகவும் விசேஷமானது என்று சொல்வர். பாற்கடலில் பிறந்த ஆலகால விஷத்தினை ஏற்று 'காரியுண்டிக்கடவுள்' ஆகக் காட்சியளித்த பெருமான் 'நீலகண்டேசுவரர்' என்ற திருநாமத்துடனேயே நிலைத்தருளிய தலங்களில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருநீலக்குடி திருத்தலம் முதன்மையானது. திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஆலயம் இது.

பொதுவாக விஷத்தால் தாக்குண்டவர்களுக்கு நல்லெண்ணெய் பண்டம் அளிக்கமாட்டார்கள். எண்ணெயானது விஷத்தின் வேகத்தினை அதிகப்படுத்திவிடும் தன்மை உடையது. ஆனால், வெகு விசித்திரப் பிரியரானப் பெருமானோ தாம் திருநீலகண்டராக இருக்கும் நிலையிலேயே எண்ணெயையும் ஏற்றுக்கொண்டு அருள்புரிகின்ற தலம் 'திருநீலக்குடி'.
இதனால் இவருக்கு 'தைலாப்யங்கேசர்' என்ற காரணப்பெயரும் உண்டு. இங்குள்ள மூலவருக்கு நல்லெண்ணெய் சாற்றி அபிஷேகிக்கும்போது அவ்வளவு எண்ணெயும் லிங்கபாணத்திற்குள்ளாகவே சென்றுவிடுகிறது. சிறிதளவும் வெளியில் கசிவதில்லை என்பது இன்றளவும் கண்கூடான அதிசயம். அம்பிகையே சுவாமிக்கு தமது திருக்கரங்களால் தைலாபிஷேகம் செய்வதாக ஐதிகம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆதலால் இன்றும் அம்பிகை சந்நிதியில் தைலப்பாத்திரத்தில் வைக்கப்பட்ட பிறகே சுவாமிக்கு எண்ணெய் அபிஷேகிக்கப் பெறுவது வழக்கமாக உள்ளது. சித்திரை, மாசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் இத்தலத்துப் பெருமானுக்கு இத்தகு தைலாபிஷேகம் செய்யப்பெறுவது விசேஷமாகச் சொல்லப்பெறுகின்றது.

மார்க்கண்டேயருக்கு ஏழு வடிவங்களில் காட்சியளித்து யமபயம் போக்கியருளிய தலமிது.
மிருத்யு பயம் உள்ளவர்கள், சனி மற்றும் ராகு கிரகங்களால் பாதிப்பு உள்ளவர்கள் இத்தலத்தில் தைலாபிஷேகம் செய்து நீலவர்ண வஸ்திரம் சாற்றி அர்ச்சித்து வழிபட்டு பலன் பெறுகின்றனர்.