Published:Updated:

பல்லக்கில் பவனி வருவது ஏன் இத்தனை சர்ச்சையாகிறது! - வரலாறு சொல்லும் தகவல்கள் என்ன?

பட்டணப் பிரவேச விழா

ஆதீனங்கள் மற்றும் மடங்களைப் பொறுத்தவரையிலும் ‘குரு சீர்பாத சேவை’ என்ற பெயரில் பெயரில் 500 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது பட்டணப் பிரவேச விழா. இந்த வைபவம் முன்பு 18 ஆதிசைவ ஆதீனங்களிலும் நடைபெற்றே வந்துள்ளது.

பல்லக்கில் பவனி வருவது ஏன் இத்தனை சர்ச்சையாகிறது! - வரலாறு சொல்லும் தகவல்கள் என்ன?

ஆதீனங்கள் மற்றும் மடங்களைப் பொறுத்தவரையிலும் ‘குரு சீர்பாத சேவை’ என்ற பெயரில் பெயரில் 500 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது பட்டணப் பிரவேச விழா. இந்த வைபவம் முன்பு 18 ஆதிசைவ ஆதீனங்களிலும் நடைபெற்றே வந்துள்ளது.

Published:Updated:
பட்டணப் பிரவேச விழா

பட்டணப் பிரவேச வைபவத்தில் ஆதீனங்கள் பல்லக்கில் பவனி வருவது இப்போது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. தமிழக வரலாற்றின் நீண்ட நெடிய பயணத்தில், `பல்லக்கு பவனி’ குறித்த மரபுகளும் நடைமுறைகளும் எவ்வாறு இருந்தன, அதுசார்ந்த தகவல்கள் எவ்விதம் பதிவாகியுள்ளன என்பதை விவரிக்கும் கட்டுரை இது.

ஒரு காலத்தில் அரச குடும்பத்தாரும், ராஜாங்க அதிகாரிகளும் தனவான்களும் பல்லக்கில் பவனி வருவது வெகு சாதாரணமாக நடைமுறையில் இருந்தது. நாகரிக மாற்றங்களால் காலப்போக்கில் அதில் மாற்றம் வந்தது.

தரும்புர ஆதீனம்.
தரும்புர ஆதீனம்.

ஆதீனங்கள் மற்றும் மடங்களைப் பொறுத்தவரையிலும் ‘குரு சீர்பாத சேவை’ என்ற பெயரில் பெயரில் 500 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது பட்டணப் பிரவேச விழா. இந்த வைபவம் முன்பு 18 ஆதிசைவ ஆதீனங்களிலும் நடைபெற்றே வந்துள்ளது.

ஆதீனகர்த்தாக்கள் தங்கள் ஆதீனத்தின் ஆளுகைக்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களின் குறை நிறைகளை விசாரித்து, அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து ஆசி வழங்கிவருவார்கள். இதையே பட்டணப் பிரவேசம் என்பார்கள். இதன்பொருட்டு ஆதீனகர்த்தாக்களைப் பல்லக்கில் வைத்துச் சுமந்து, அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று திரும்புவது வழக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எல்லாமே மாற்றம் கண்டுவிட்ட தற்காலத்தில் இந்தப் பட்டணப் பிரவேச நிகழ்வுகள் வெறும் சடங்காகவே உள்ளன. ''இருந்தாலும் மரபாகக் கடைப்பிடிக்கப்படும் விஷயம் என்பதால், இதற்குத் தடை வேண்டாம்'' என்பதே ஆன்மிக அன்பர்களின் கருத்தாக உள்ளது.

மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த நால்வரும் எங்கும் எப்போதும் வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பதே நம் நம்பிக்கை. சிரவண குமரன் பார்வை இழந்த தன் தாய் தந்தையரை ஒரு காவடி போன்று தொட்டில் அமைத்து அதில் அவர்களை அமரவைத்துத் தலங்கள் தோறும் யாத்திரை சென்றான் என்பது புராணத் தகவல்.

பெருமை மிக்க குருநாதரைச் சுமப்பதும் பாத பூஜை செய்வதும் எல்லாம் பாரம்பர்யமான சடங்குகளே. பல்லக்குத் தூக்கும் சீடர்களையும் அடியார்களையும் சீர்பாதம் தாங்கிகள், சீர் தூக்கிகள் என்று வரலாறு பதிவு செய்கிறது.

தருமபுர ஆதீனம்
தருமபுர ஆதீனம்

திருவரங்கம் ரங்கநாதப் பெருமாள் கோயிலில் ராப்பத்து, பகல் பத்து வைபவத்தை நடத்தும் அரையர்களை கெளரவிக்கும் விதமாக, அவர்களைப் பல்லக்கில் சுமந்து சென்று வீட்டில் விடும்படியான `பிரம்மரத மரியாதை’ நடந்தது உண்டு. தற்போது அந்த வழக்கம் இல்லை.

ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் பல்லக்கு பவனி வந்தபோது, அந்த நடைமுறைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அவர் பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தார். அதுமுதல் அவர் `மேனா’ எனும் பல்லக்கைப் பயன்படுத்தவே இல்லை. நடைபயணமாகவே தேசம் எங்கும் யாத்திரை சென்றார். இதுவே ஞானிகளின் அடையாளம்.

இது இப்படியிருக்க, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சகராக இருந்த உமாபதி சிவம், பூஜைகளை முடித்த பிறகு மேளதாளத்துடன் வீட்டுக்குப் பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மரபின்படி பகலில்கூட தீவட்டி ஏந்திச் செல்வார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்லக்கு வந்த வழியில், ஒரு வீட்டின் திண்ணையில் மறைஞான சம்பந்தர் இருந்தார். அவர் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, ‘பட்ட மரத்தில் பகல் குருடு போகுது பார்’ என்று உரக்கச் சொன்னாராம். உமாபதி சிவம் அப்போதே கீழிறங்கி, அங்கேயே ஞானம் அடைந்து, சகலமும் துறந்து மறைஞானசம்பந்தருக்கு சீடன் ஆனார் என்பது தகவல்.

சீர்காழிப் பிள்ளை என்று சிறப்புப் பெற்றவர் திருஞானசம்பந்தர். அவர் வெயிலில் பாதம் நோக யாத்திரை செய்வதைக் கண்டு பொறுக்காமல், சிவபெருமான் அவருக்கு முத்துச்சிவிகை அளித்ததாகப் பெரிய புராணம் சொல்கிறது.

திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்திக்குப் பல்லக்கில் வருகிறார். அவருக்குத் திருநாவுக்கரசரைக் காண வேண்டும் என்று ஆவல். ஆகவே, தன் அடியார்களிடம் ‘திருநாவுக்கரசர் இங்குதானே முகாம் இட்டிருப்பார், அவர் எங்கே!’ என்று கேட்டார். அப்போது `இங்குற்றேன்’ என்றொரு குரல் கேட்டது. திருஞானசம்பந்தர் திடுக்கிட்டார்.

ஆம்! பல்லக்குத் தாங்கிகளோடு இணைந்து தாமும் திருஞானசம்பந்தரின் பல்லக்கை சுமந்துவந்தாராம் திருநாவுக்கரசர். இதை அறிந்த திருஞானசம்பந்தர் துள்ளிக் குதித்து இறங்கி, ‘அப்பரே’ என்று அழைத்து நாவுக்கரசரைத் தழுவிக்கொண்டார். பல்லக்கு சுமந்த அந்த அன்புதான் நாவுக்கரசரை ‘அப்பர்’ என்றாக்கியது. இதில் மதிக்கப்பட வேண்டியவரை மதிக்க வேண்டும், துதிக்கப்பட வேண்டியவரைத் துதிக்கவேண்டும் என்ற அப்பரின் எண்ணமும் அன்பும் தெரிய வருகிறது எனலாம்.

`பல்லக்கு பவனி’ சர்ச்சை குறித்து ஆன்மிக அன்பர்கள் சிலரிடம் பேசியபோது, ''மனிதர் சுமக்காமல் எந்த மனிதரும் பிறப்பதும் இல்லை; வளர்வதும் இல்லை; மறைவதும் இல்லை. கல்யாணம் முடிந்ததும் மணமகள் பல்லக்கில் ஏறி கணவன் வீடு புகுவது மரபாக இருந்தது. இன்றும் பல திருமணப் பத்திரிகைகளில் பல்லக்குப் படம் இருக்கும் பாருங்கள். யார் யாரைச் சுமப்பது என்பது அவரவர் தனி விருப்பம். அதில் மற்றவர்களின் கருத்துகளுக்கு இடமில்லை.

சபரிமலை, அகோபிலம், சதுரகிரி போன்ற மலைசார்ந்த தலங்களில் எல்லாம் மலை ஏற இயலாதவர்களை டோலியில் சுமந்து செல்லும் வழக்கம் உண்டு. அதையும் தடை செய்வார்களா!

இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு மரியாதை. பல்லக்கு சுமக்கும் அந்த 26 சீர்பாதம் தாங்கிகள் மனம் விரும்பியே இது நடக்கிறது. ‘ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத...’ என்று குரு சேவையின் பெருமையைக் குறிப்பிடுகிறது திருப்புகழ். 'சிவிகை பொறுத்தான், ஊர்ந்தான் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு, அறத்தின் பயனால் விளைந்தது எனச் சொல்ல வேண்டாம்' என்கிறது திருக்குறள். பல்லக்கு ஒன்றும் சுமை இல்லை.

சேகர்பாபு
சேகர்பாபு

அதிகாரத்தையும் பணத்தின் பகட்டையும் காட்டும் வகையிலான பல்லக்கு பவனிகளை நிறுத்தலாம். அது வேறு விஷயம். இது குருமரியாதை, மரபு சார்ந்த வைபவம். இதில் அரசு தலையிடுவது பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் செயல். சமயம் சார்ந்த நடைமுறைகளில் அரசு தலையிடுவதற்கு ஓர் எல்லை இருக்கிறது'' என்கிறார்கள் அவர்கள்.

பட்டணப் பிரவேச நிகழ்வை எதிர்ப்பவர்களோ, ''ஆன்மிக மரபுகள் காலத்துக்கு ஏற்றபடி மாற வேண்டும். அப்போதுதான் அவை மதிப்பு பெறும். வாகன வசதி இல்லாத காலங்களில் பல்லக்கு பவனி வந்தது சரி. இப்போது ஆதீனங்கள் வாகனங்களில்தான் பயணம் செய்கிறார்கள். ஆதீனங்களிலும் மடங்களிலும் எத்தனையோ நவீன மாற்றங்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் குருமார்கள், மற்ற விஷயங்களிலும் மாற வேண்டும். காஞ்சி மகா பெரியவர் தன் மேனா பல்லக்கைத் துறந்துவிட்டு பாத யாத்திரையாகவே பயணம் செய்து எல்லோருக்கும் முன்னுதாரண புருஷராக இருந்தார். அவர் காட்டிய வழியில் ஆதீனங்களும் 'இனி எங்களை யாரும் பல்லக்கில் சுமக்க வேண்டாம்' என்று அறிவித்துவிட்டால் பிரச்னை சுமுகமாகத் தீர்ந்துவிடும்'' என்கிறார்கள்.

தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக விரைவில் சுமுக முடிவு எடுக்கப்படும். நாத்திகர்கள், ஆத்திகர்கள் என அனைவரின் மனமும் குளிரும் வகையில் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார். தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சி மகிழ்ச்சியாக நடக்க பேச்சுவார்த்தை நடக்கிறது'' என்று அறிவித்திருக்கிறார்.

இந்த சர்ச்சை விரைவில் தீரும் என்று நம்புவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism