Published:Updated:

ராகு தலமான திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்... எப்போது நடைபெறுகிறது?

கண்டராதித்தர், செம்பியன்மாதேவி, ராஜராஜசோழர், ராஜேந்திரசோழர், மூன்றாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களும் வழிபட்ட தலம் இது.

‍தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஸ்ரீ கிரிகுஜாம்பாள், ஸ்ரீ பிறைமணி அம்மன் சமேத ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இதன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஆதீனகர்த்தர்கள், தமிழக அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் 24.10.2021-ம் தேதி காலை 10 முதல் 11.30 மணிக்குள் நடைபெறுகிறது.

திருநாகேஸ்வரம்
திருநாகேஸ்வரம்

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய சமயக்குரவர்கள் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். காவிரித் தென்கரை தலங்களில் 29-வது சிவத்தலமாகும். அம்பிகை வழிபட்டு இடப்பாகம் பெற்றதும், திருத்தொண்டர் புராணம் தந்த தெய்வசேக்கிழார் பெருமானுக்குத் திருவடி ஞானம் கைவரபெற்றதும், விநாயகர், சூரியன், சந்திரன், பிரம்மா, அம்பிகை முதலிய தேவர்களாலும், கௌதமர் அத்ரி முதலிய ரிஷிகளாலும், மார்க்கண்டேயர், பராசரர், பரசுராமர் முதலிய முனிவர்களாலும், நளன், பகீரதன், சந்திரவர்மன் ஜம்புமாலி முதலிய தேவ மன்னர்களாலும், ராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி முதலான நாகங்களாலும் பூஜிக்கப்பெற்ற‌ தலமிது என்ற பெருமைக்குரியது.

கண்டராதித்தர், செம்பியன்மாதேவி, ராஜராஜசோழர், ராஜேந்திரசோழர், மூன்றாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களும் வழிபட்ட தலம்.

பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இத்தலத்து ஈசன் மீது அளவற்ற பக்திக் கொண்டிருந்தார். அவரும் இக்கோயிலுக்குத்  திருப்பணி செய்துள்ளார். அவருக்கு இக்கோயிலில் அமர்ந்த நிலையிலான சிலை உள்ளது. நவகிரகங்களில் ஒன்றான ராகு பகவானுக்கு இக்கோயில் பரிகாரத் தலமாகும். பெரிய பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது. 

ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும், அசுரகுல பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும்போது, அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டுவிட்டான். உண்மையறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க, தலை வேறு, உடல் வேறாகி விழுந்தான் ராகு. ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவற்றுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க, இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து, அவனை ஒரு நிழல் கிரகம் ஆக்கினார். ராகுவுக்கு உகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல... இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகம்கூட தலைமீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து, உடல்மீது வரும்போது பாலின் நிறமும் நீலநிறமாக மாறிவிடும் அதிசயத்தை இன்றும் பார்க்கலாம்.

திருநாகேஸ்வரம்
திருநாகேஸ்வரம்

இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 18-ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி ஐந்து கால பூஜைகள் முடிந்து 24-ம் தேதி ஞாயிறு காலை 7 மணிக்கு பரிவாரத் தெய்வங்களுக்கும், 10.00 மணி முதல் 11 மணி வரை மஹா கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. ஆதீனகர்த்தர்கள், தமிழக அமைச்சர் பெருமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருக்கயிலாய மாமுனி சிவஸ்ரீ தண்டபாணி சிவாச்சார்யர் தலைமையில் நடைபெறவுள்ளது. பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்து கொள்ளலாம். முடியாதவர்கள் காணொலி காட்சி மூலம் கண்டு வணங்கலாம்.

"திருநாகேச்சரத்துள்ளானை சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே" என்பது தேவாரப்பாடல். எனவே எல்லோரும் வணங்கி அருள் பெறலாமே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு