Published:Updated:

திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழா - அடிப்படை வசதிகளை மேம்படுத்தப் பொதுமக்கள் கோரிக்கை!

திருநள்ளாறு
திருநள்ளாறு

தற்போது பெய்து வரும் அடைமழையால் திருநள்ளாறைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தேங்கியள்ள மழை நீரில் கழிவு நீரும் கலக்கத் துவங்கியிருக்கிறது.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வரும் 27.12.2020 அன்று நிகழ இன்னும் சில நாள்களே உள்ளன. இந்நிலையில் திருநள்ளாறு நகரமே மழை வெள்ள நீரால் சூழ்ந்திருக்கிறது. வடிகால்கள், கால்வாய்கள், சாக்கடைகளை சுத்தம் செய்வதிலும் தேக்க நிலை நீடிக்கிறது. சனிப்பெயர்ச்சியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தாக வேண்டிய நிலையிருக்கிறது.  அனைவருக்கும் கோயில் நிர்வாகம் தரிசன வசதியை மட்டும்  செய்திருக்கிறது. காரணம், பக்தர்கள் மூலம் கோயிலுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. அர்ச்சனை, தரிசனம், பரிகாரம், அபிஷேக ஆராதனை, ஹோமம் என அனைத்திற்கும் கட்டணமுண்டு.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் 
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் 

முக்கிய விருந்தினர்கள், பிரமுகர்களுக்கு வி.ஐ.பி. வரிசை இருக்கிறது. அந்த வரிசைக்கு முன்கூட்டியே டோக்கனும் தரப்படும். இதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், போலீசார் குடும்பங்கள் ஸ்ரீ சனீஸ்வர பகவான் சந்நிதியில்  நிறைந்திருப்பார்கள். குறிப்பாக மாநில கவர்னர் முக்கிய விருந்தினராக வரவழைக்கப்படுவது நடைமுறையாக உள்ளது. 

சனிப்பெயர்ச்சி நேரத்தில் பக்தர்களின் கவனம் பகவான் தரிசனத்திலிருக்கும். போலீசாரின் கவனம் அவர்களின் குடும்பத்தை சந்நிதிக்குள் திணிப்பதில் இருக்கும். உயரதிகாரிகளின் கவனம் கவர்னருக்கு சிரமமின்றி தரிசன வசதி செய்து அனுப்புவதில் இருக்கும். இதில் மூச்சுவிடக் கூட காற்றோட்டமின்றி விழி பிதுங்க தத்தளிப்பது திருவாளர் பொதுஜனங்கள்தான்.

சாதாரண நாள்களிலேயே சனிபகவான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதியென்பது எட்டாக்கனிதான். திருநள்ளாறில் எல்லா வீதிகளிலும் வீட்டுக்கு வீடு தங்கும் அறை, கழிப்பிடம், குளியலறை பற்றிய போர்டுகள் தொங்கி கொண்டிருக்கும். வரிசையில் செல்லும் பக்தர்கள் அவசர ஆபத்துக்கு இந்த போர்டுகள் இருக்கிற ‘புறாக்கூண்டுகளுக்குள்தான்’ நுழைந்து வெளியேறியாக வேண்டும்.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா - ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

தற்போது பெய்து வரும் அடைமழையால் திருநள்ளாறைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கோயில் நகரத் திட்டத்துக்கென்று புதுச்சேரி அரசு கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கியது. அந்த நிதி கோர்வையாக கிடைக்காமல், தவணை முறையில் ஒதுக்கப்பட்டன. அதனால், இத்திட்டத்தின் வடிவம் முழுமை பெறவில்லை. கட்டுமானம், சாலை, மின்வசதி, குளங்கள் அமைத்த பணிகள் ஆளுங்கட்சியினர் சம்பாதிப்பதற்கு வசதியாக டெண்டர் விடப்பட்டிருக்கின்றன. சனிபகவான் கோயிலுக்குள் திட்டமிடல் இல்லாத கட்டுமானங்கள் ஒரு புறம், கட்டுமானங்களை இடிக்கும் செயல் மறுபுறம் என்று நிதியும்  கரைந்து கொண்டிருப்பதாகக் கோயில் சிப்பந்திகளே கண்ணீர் விடுகின்றனர்.

இதுபற்றி திருநள்ளாறு நகரவாசிகள் சிலரிடம் பேசினோம்.

திருநள்ளாறு
திருநள்ளாறு

"சனிப்பெயர்ச்சி நிகழ இன்னும் சில நாள்களே இருக்கிற நிலையில் பக்தர்களுக்கு தரிசன வசதி தாராளமாக இருக்கிறது. அடிப்படை வசதி என்பது கடந்த சனிப்பெயர்ச்சியின் பரிதவிப்பை நினைவூட்டுகிறது. திருநள்ளாறில் தேங்கியள்ள  மழை நீரில் கழிவு நீரும் கலக்கத் துவங்கியிருக்கிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே தொற்று பரவாதிருக்க புதுச்சேரி அரசும், காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் எடுத்திருக்கிற முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்த விவரங்கள் பூடகமாகவே இருக்கின்றன. நளன் குளத்தில் நீராடுவது பற்றி இன்னும் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.

சனீஸ்வர பகவான் அச்சுறுத்தலில்லாத அனுக்கிரக நாயகர். மனக்காயங்களுக்கு  மருந்திட்டு, பக்தர்களின் மகோன்னத வாழ்வுக்கு அருள்பாலிப்பவர். அப்படிப்பட்ட சர்வசக்தியுள்ள சனீஸ்வரபகவானை தரிசிக்க திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு சகல வசதிகளும் செய்து தரவேண்டும். கஷ்டத்துடன் வருபவர்கள் நிம்மதியோடு ஊர் திரும்பிச் செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு