Published:Updated:

`பாசிப்போர்வை; துர்நாற்றம்!' திருப்பரங்குன்றம் `தெய்வானை தீர்த்தம்' நிலையால் கலங்கும் பக்தர்கள்

இந்த ஆண்டு மழையினால் நீர் நிரம்பி உள்ளபோதும் பாசி படர்ந்து பச்சைப் போர்வை போர்த்தியதுபோல் குளம் காணப்படுகிறது.

தீர்த்தக்குளம்
தீர்த்தக்குளம்

முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடு என்று போற்றப்படுவது திருப்பரங்குன்றம். இங்கு முருகக்கடவுள் சுப்பிரமணிய சுவாமியாகக் காட்சி தருகிறார். இங்குதான் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது என்கின்றன புராண நூல்கள். இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தத்துக்கு லட்சுமி தீர்த்தம் என்று பெயர்.

தீர்த்தக்குளம்
தீர்த்தக்குளம்

தெய்வானைக்காக முருகன் உருவாக்கிய தீர்த்தம் இது என்பது நம்பிக்கை. புனிதமாகக் கருதப்படும் இந்தத் தீர்த்தத்தின் நீரைத் தலையில் தெளித்துக்கொண்டு பக்தர்கள் முருகக் கடவுளை வழிபடச் செல்வதுண்டு. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்தத் தீர்த்தத்தின் நிலை தற்போது சீர்கெட்டுள்ளது என்கின்றனர் பக்தர்கள்.

கடும் வறட்சியின் காரணமாக கடந்த சில வருடங்களாக வறண்டு காணப்பட்ட தீர்த்தக்குளம் தற்போது தொடர்ந்து பெய்த பருவ மழையால் நிரம்பிக் காணப்படுகிறது. ஆனால், பக்தர்கள் தீர்த்தத்தைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை தொடர்கிறது. காரணம் குளமும் படிக்கட்டுகளும் பாசிபடர்ந்து காணப்படுகின்றன.

தீர்த்தக்குளம்
தீர்த்தக்குளம்

பக்தர்கள் கால் வைத்தவுடன் வழுக்கும் அபாயமும் உள்ளது. எனவே, அவர்கள் பயத்தினால் குளத்துக்குச் செல்லாமல் உள்ளனர். இதேபோன்று இந்தக் கோயிலுக்குரிய ஜி.எஸ்.டி சாலையிலுள்ள தெப்பக்குளமும் பாசி படர்ந்து காணப்படுகிறது. இந்தக் குளத்தில்தான் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு மழையினால் நீர் நிரம்பி உள்ளபோதும் பாசி படர்ந்து பச்சைப் போர்வை போர்த்தியதுபோல் குளம் காணப்படுகிறது. மேலும், குளம் முழுவதும் புற்கள் வளர்ந்து துர்நாற்றமும் வீசுகிறது.

`8.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்; தங்கும் அறைகளுக்கு ஆன்லைன் புக்கிங்!' - களைகட்டும் சபரிமலை சீசன்

இதுதொடர்பாக கோயிலின் நிர்வாகத்தைச் சேர்ந்த கோகுல கண்ணனிடம் பேசினோம். ``சில காலங்களாக மழை பெய்யாமல் இப்போது பருவமழை பெய்துள்ளதால் குளம் முழுவதும் அதிக அளவில் பாசி காணப்படுகிறது. நாங்கள் தொடர்ந்து பாசியை அகற்றும் முயற்சியில்தான் உள்ளோம். லட்சுமி குளத்தில் உள்ள பாசியை ஓரளவு அகற்றியுள்ளோம்

தீர்த்தக்குளம்
தீர்த்தக்குளம்

தொடர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோம். கூடிய விரைவில் சுத்தம் செய்து முடிப்போம்" என்றார். தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் திருத்தலமான திருப்பரங்குன்றத்தில் சுகாதாரத்தன்மை குறைந்து வருவதால், அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தி போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.