Published:Updated:

திருக்கார்த்திகை தீபம்: தற்போது எப்படி இருக்கிறது திருவண்ணாமலை?

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயில் தீபத் திருவிழாவிற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மதியம் முதல் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய சிறப்புகளில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்று. திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் ஆலயத்தில் இந்த தீபத் திருவிழா மிகவும் விசேஷமானது. சிவபெருமான் ஈசனே அக்னி வடிவில் எழுந்தருளிய தலம் என்றும், மலையாகக் காட்சி தரும் மலை என்றும், நினைத்தாலே முக்தி தரும் மலை என்றும் எண்ணற்ற ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்டு போற்றப்படும் திருவண்ணாமலை திருத்தலத்தின் மலை மீது ஏற்றப்படும் தீபம் அல்லவா..!

ஆதலால், கார்த்திகை மகாதீபத் திருவிழா ஆண்டுதோறும் இங்கு வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும். தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் இங்கு ஒன்று திரள்வார்கள். மலைமீது ஏற்றப்படும் திருக்கார்த்திகை மகா தீபத்தைக் கண்டு மெய்சிலிர்த்து போகும் பக்தர்கள், 'அரோகரா' எனும் கோஷமிட்டு பக்தி பரவசத்தில் மூழ்கி போவார்கள்.

கரும்பில் ஊஞ்சல்
கரும்பில் ஊஞ்சல்

அந்நாளில் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுவதும் வழக்கம். தீப ஒளியில் மிளிரும் இல்லங்கள் காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் சிறப்பாக நடைபெறும் இத்திருவிழா, இந்த ஆண்டும் கடந்த 7ம் தேதி அன்று துர்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையான சில கட்டுபாடுகளுடனே இந்த ஆண்டும் இத்திருவிழா நடைபெற்று வருகிறது. நாளை அதிகாலை 4.00 மணி அளவில் பரணி தீபமும், மாலை 6.00 மணி அளவில் மகா தீபமும் ஏற்றபட உள்ளது.

07.11.2021 முதல் 23.11.2021 வரை நடைபெறும் இந்த தீபத் திருவிழாவில்... 17.11.2021 பிற்பகல் 1.00 மணி முதல் 20.11.2021 வரை பொதுமக்கள் கோயில் வளாகத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கோ, கிரிவலம் வருவதற்கோ அனுமதி கிடையாது. மீதமுள்ள நாள்களில், 3,000 உள்ளூர் பக்தர்கள் உட்பட தினமும் 13,000 பக்தர்கள் உரிய முறையில் இலவச அனுமதி சீட்டை பெற்று சுவாமி தரிசனம் செய்யலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, தீபத் திருவிழா நடைபெறும் நாளான 19-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக டிசம்பர் 4ம் தேதி பணி நாளாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பக்தர்கள் - கார்த்திகை தீபம்
பக்தர்கள் - கார்த்திகை தீபம்

இந்நிலையில், நேற்று (17.11.2021) மதியம் 1 மணியோடு பக்தர்களுக்கான அனுமதி நிறுத்தப்பட்டது. ஆகவே, நேற்று காலையிலேயே கோயிலுக்கு நேரில் சென்றோம். இந்தத் திருவிழா காலத்தில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக உள்சுற்று பிராகரத்தில் மட்டுமே உற்சவ மூர்த்திகள் வலம் வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள், ராஜகோபுரம் முன்பாக இறைவனை வணங்கி தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி கொண்டிருந்தனர். ராஜகோபுரம் அருகே உள்ள கிழக்கு மாடவீதி முழுவதும் திருவிழாக்கோலம் கொண்டிருந்தது.

திருக்கார்த்திகை : வீடுகளில் 
எப்போது விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அண்ணாமலையாரை வணங்கி பிள்ளைபேரு பெற்ற பலரும், அண்ணாமலையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, இனிப்பான பன்னீர் கரும்பை வாங்கிவந்து அதில் புடவை கொண்டு ஊஞ்சல் கட்டி, தங்களது குழந்தையை அதில் கிடத்தி தங்களின் தோள் மீது ஏந்தியபடி மாடவீதியை சுற்றி வலம்வந்தனர். இன்னும் சிலர் நெய் விளக்கு, கற்பூரம் ஏற்றி மனமுருகி வேண்டிக்கொண்டு கிரிவலம் வந்தனர். மகா தீபத்தன்று நேரில் வரமுடியாத சூழல் இருப்பதை எண்ணி பக்தர்கள் பலரும் ஆதங்கப் பட்டுக்கொண்டனர். மதிய நேரம் நெருங்க மழையும் கொட்டி தீர்க்க துவங்கியது.

பலத்த போலிஸ் பாதுகாப்பு
பலத்த போலிஸ் பாதுகாப்பு

மதியம் 1.00 மணியில் இருந்து ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கொரோனா பாதுகாப்பு வழிமுறையில் குறிப்பிட்டது போலவே பக்தர்களுக்கான அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. 2668 அடி உயரம் கொண்ட மலை மீது பெரிய அளவிலான தீபம் ஏற்றும் கொப்பரை எடுத்துச் செல்லும் பணிகளைத் துவங்கியுள்ளனர். சுமார் 3,500 கிலோ நெய் மகா தீபத்தில் பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நாளை காலை பரணி தீபமும், மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. ஆகவே, இம்முறை தீபத் திருவிழாவை நாம் வீட்டில் இருந்தபடியே கொண்டாடி மகிழ்வோம். ஈசனை மனதில் நிறுத்தி நம் இல்லங்களில் ஏற்றும் ஜோதியின் மூலம் அண்ணாமலையாரின் அருளை முழுமையாக பெறுவோம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு