Published:Updated:

கொரோனா அச்சம்... சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை..!

திருவண்ணாமலை கிரிவலம்
திருவண்ணாமலை கிரிவலம்

வேகமாகப் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த வருடம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையவளாகிய பார்வதிதேவிக்கு உடலில் சமபங்கு இடமளித்து அம்மையாரப்பனாய் காட்சித்தரும் தலமாகவும் திகழும் தலம் இது. எம்பெருமான் ஈசனே மலையாய்க் காட்சி தரும் தலம் என்றும், 'நினைத்தாலே முக்தி தரும் மலை' என்றும் பக்தர்களால் போற்றப்படும் சிறப்புமிக்கது இந்தத் தலம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

14 கி. மீ அளவில் சுற்றுப்பாதையை கொண்ட இத்திருக்கோயிலில், அருணாச்சலேஸ்வரரை மனதில் நினைத்து மனமுருக வேண்டி இந்த மலையில் கிரிவலம் வருவது பக்தர்களிடையே சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் செய்வார்கள். ஆனால், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியின் போது தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் வந்து செல்வர். இந்த வருடம் வரும் 26 - ம் தேதி சித்ரா பௌர்ணமி வருகிறது.

வேகமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த வருடம் சித்ரா பௌர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் வர வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதினால், தமிழகத்தில் அத்தியாவசியத்தை தவிர்த்து ஞாயிறு கிழமைகளில் முழுநாள் ஊரடங்கும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது.

ஆட்சியர் சந்தீப் நந்தூரி
ஆட்சியர் சந்தீப் நந்தூரி

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் சித்ரா பவுர்ணமி அன்று, அதாவது 26-ம் தேதி (திங்கள்கிழமை) பிற்பகல் 12.16 முதல் 27-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.59 மணி வரை சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் எனவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய ஒத்துழைப்பை பொதுமக்கள் நல்கிட வேண்டும் எனவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வருடம், வரும் சித்ரா பௌர்ணமி அன்று நாம் அனைவரும் வீட்டில் இருந்தபடியே அண்ணாமலையாரை மனமுருக வேண்டிப் பயன்பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு