Published:Updated:

திருவண்ணாமலை: "பௌர்ணமி கிரிவலத்திற்கு அனுமதியில்லை!"- மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

"கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பௌர்ணமி கிரிவலத்திற்கு அனுமதி கிடையாது என்பதால் பக்தர்களும், பொதுமக்களும் கோயிலுக்கு வரவேண்டாம்" என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்.

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாள்களில் இத்தலத்தின் 14 கிலோமீட்டர் மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரிந்து வருகிறார்கள்.

திருவண்ணாமலை கிரிவலம்
திருவண்ணாமலை கிரிவலம்

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது நோய்த்தொற்றை தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கில் 28.06.2021 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது பேரிடர் மேலாண்மைத் துறை.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதால் திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறும் நாள்களான 24.06.2021 வியாக்கிழமை அதிகாலை 3.10 மணி முதல் 25.06.2021 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.55 மணி வரை மலை சுற்றும் பாதையில் கிரிவலத்திற்கு அனுமதி கிடையாது.

கொரோனா அச்சம்... சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை..!

அதனால் பக்தர்களும், பொதுமக்களும் பௌர்ணமி அன்று கோயிலுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார் ஆட்சியர் முருகேஷ்.

அடுத்த கட்டுரைக்கு