Published:Updated:

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்லத் தடை! காரணம் என்ன?

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் வந்து செல்வார்கள். ஆனால், தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையவளாகிய பார்வதி தாயாருக்கு உடலில் சமமான இடத்தை அளித்து அம்மையப்பனாய் சிவபெருமான் காட்சித்தரும் தலமாகவும் திகழும் தலம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் விளங்குகிறது இந்த தலம். எம்பெருமான் ஈசனே மலையாய்க் காட்சி தரும் தலம் என்றும், 'நினைத்தாலே முக்தி தரும் மலை' என்றும் பக்தர்களால் போற்றப்படும் சிறப்புமிக்கது இந்தக் கோயில்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை
இத்தகு சிறப்பு மிக்க ஆலயத்தில், எல்லாம் வல்ல பரம்பொருளாகிய அருணாச்சலேஸ்வரரை மனதில் நிறுத்தி, மனமுருக வேண்டி 14 கி.மீ அளவிலான கிரிவலப்பாதையைச் சுற்றி கிரிவலம் வருவது பக்தர்களிடையே சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் வந்து செல்வார்கள்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை, தற்போதுதான் தமிழகத்தில் சற்றே குறைந்த நிலையில் உள்ளது. வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள், தற்போது தங்களைச் சற்று ஆசுவாசம் செய்து கொள்கின்றனர். இந்த கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காகவும், தொற்றின் பரவலை கட்டுக்குள் வைப்பதற்காகவும் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 31-ம் தேதி காலை 6.00 மணிவரை தமிழகத்தில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் பௌர்ணமி (23 மற்றும் 24 - ம் தேதி) தினத்தன்று கிரிவலம் செல்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதாலும், இதனால் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்பதாலும் தடுப்பு நடவடிக்கையாக, இம்மாதம் யாரும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை தீபம்
திருவண்ணாமலை தீபம்

"கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான 23.7.2021 அன்று காலை 10.38 முதல் 24.7.2021 அன்று காலை 8.51 வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கிரிவலம் செல்வதற்கு வரவேண்டாம். கொரோனா பரவலைத் தடுக்கும் இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு