Published:Updated:

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் தெப்பத்திருவிழா; இன்று தொடக்கம்!

திருவாரூர் குளம்

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி எனப் போற்றப்படும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து காணப்படும் கமலாலய குளம், காண்போரை வியப்பில் ஆழ்த்தக்கூடியது

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் தெப்பத்திருவிழா; இன்று தொடக்கம்!

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி எனப் போற்றப்படும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து காணப்படும் கமலாலய குளம், காண்போரை வியப்பில் ஆழ்த்தக்கூடியது

Published:Updated:
திருவாரூர் குளம்

திருவாரூரில் உள்ள தியாகராஜர் சுவாமி திருக்கோயிலின் கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா மே 20, 21, 22 ஆகிய மூன்று நாள்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்மூரமாக நடைபெற்று வருகிறது. கமலாலயக் குளத்தில் உலா வரவுள்ள எழில்மிகு தெப்பத்தை தரிசிக்க ஏராளமான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலாலய குளம்
கமலாலய குளம்

சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகாரத் தலமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலில் உள்ள பிரமாண்ட ஆழித்தேர், ஆசிய அளவில் புகழ்மிக்கது. இந்தாண்டு இதன் தேரோட்டம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி மிக சிறப்பாக நடைபெற்றது. ஆழித்தேரோட்டத்தைத் தொடர்ந்து இக்கோயிலின் கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வழக்கத்தின்படி, மே 20-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்களுக்குத் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுகிறது.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி எனப் போற்றப்படும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து காணப்படும் கமலாலயக் குளம், காண்போரை வியப்பில் ஆழ்த்தக்கூடியது. காசியைவிடவும் மேலான புண்ணிய தீர்த்தம் இது எனப் பல புராணச் சான்றுகள் போற்றுகின்றன. காசியில் 63 தீர்த்த கட்டங்கள்தான் உள்ளன. ஆனால் அதைவிட ஒன்று கூடுதலாக இங்கு 64 தீர்த்த கட்டங்கள் உள்ளன. சமஸ்கிருத புராண நூல்களான மகாத்மியங்களில், ‘கமலாலய மகாத்தியம்’ என்பது இதன் பெருமையைப் பறைசாற்றுகிறது. தமிழில் படைக்கப்பட்ட தியாகராஜ சுவாமி திருக்கோயில் தல புராணத்தில் தேவதீர்த்த சருக்கத்தில் கமலாலயத் திருக்குளத்தைப் பற்றி 40 பாடல்களில் புகழ்ந்து போற்றுகின்றன. இத்திருக்குளத்தில் உள்ள தீர்த்த கட்டங்களில் அதற்கென உரிய நன்னாளில் அவ்விடத்தில் மூழ்கித் தக்க தானம் வழங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது நம்பிக்கை

மிகப்பெரிய பரப்பில் இக்குளம் அமைந்திருப்பதும், இக்கோயில் நடுவில் வீற்றிருக்கும் நடுவாண் கோயிலும், இதன் தனிச்சிறப்ப்பாகும். இத்திருகுளமானது, ஸ்ரீமாகலட்சுமி தவம் புரியும் குளம் எனவும், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் புனித நீராடிய குளம் எனவும் போற்றப்படுகிறது. இக்குளத்தில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. இத்தனை ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்ட கமலாலயக் குளத்தில் மே 20-ம் தேதி தெப்ப உற்சவத் திருவிழா தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கி 3 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. மூன்று நாள்களுக்கு, தினமும் 3 முறை இக்குளத்தில் தெப்பம் சுற்றி வருவது வழக்கம். ஒரு முறை சுற்றி வர சுமார் 3 மணி நேரமாகும். இதனால் விடிய, விடிய தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த தெப்பமானது, 50 அடி நீளம், 50 அடி அகலம், 40 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. 14 தூண்களுடன் மூன்று அடுக்குகள் கொண்டதாக இந்தத் தெப்பம் அமைந்திருக்கும். இதில் தியாகராஜர், கமலாம்பாள், நீலோத்பாலாம்பாள், விநாகர், முருகன் ஆகி கடவுள்களின் திருவுருவப் பதுமைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும்.

432 காலி பேரல்களில் காற்று நிரப்பி அதன் மீது தெப்பம் கட்டமைக்கப்படும். தெப்பத்தினைச் சுற்றி வண்ண ஒவியங்கள் தீட்டப்படுவதோடு, அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்படும். தெப்ப உற்சவத் திருவிழாவை பக்திப் பரவசத்துடன் கண்டுகளிக்க, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு வழிப்பாடுகள் மற்றும் இசைக்கச்சேரிகளும் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அதிகாரி கவிதா, தக்கார் ராணி, பரம்பரை அறங்காவலர் தியாகராஜன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism