Published:Updated:

திருநெல்வேலி: நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்சி - நெல்லையப்பர் கோயிலில் கோலாகலம்!

கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில், திருநெல்வேலி எனப் பெயர் வரக் காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்சி நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்ற சிவாலயங்களுள் ஒன்றாக நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள்
நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள்

கொரோனாப் பெருந்தொற்று காரணமாகக் கோயில்களில் விழாக்கள் நடைபெறாத நிலை இருந்தது. தற்போது சுமுக நிலை திரும்பியதால் தைப்பூசத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி நாள்தோறும் காலையும் மாலையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் வீதிஉலா நடந்து வருகிறது.

நெல்லையப்பர் கோயில் விழாவின் நான்காம் நாளான இன்று சுவாமி சந்நிதியில் திருநெல்வேலி எனப் பெயர் வருவதற்குக் காரணமாக அமைந்த ’நெல்லுக்கு வேலியிட்ட’ திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். நெல்லுக்கு வேலியிட்ட விழா பற்றித் தெரிந்து கொள்வோமா?

வேதபட்டர்
வேதபட்டர்

முன்னொரு காலத்தில், சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் வேணுவனம் என அழைக்கப்பட்ட திருநெல்வேலியில் உள்ள சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான், அவருக்கு வழங்கிய செல்வங்களைச் சிறிது சிறிதாகக் குறைந்து போகும்படி செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜைகளைச் செம்மையாகச் செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜைகளை நடத்தி வந்தார்.

நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு
நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு

ஒரு நாள் அவர் நைவேத்தியம் செய்வதற்குரிய நெல்லை, வெயிலில் காய வைத்து விட்டு, குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்குச் சென்றுவிட்டார். அப்போது திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. அதனால் வேதபட்டர் வேதனையடைந்தார்.

திடீரென பெய்த மழையால் இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்குக் காய வைத்திருந்த நெல் மணிகள் நனைந்து விட்டால் என்ன செய்வது எனப் பதறினார். ஆனாலும் தாமிரபரணி நதியில் இருந்து எவ்வளவு வேகமாக ஓடிச் சென்றாலும் நெல் நனைவதைத் தடுக்க முடியாது.

திருநெல்வேலி பெயர் வரக் காரணமான நிகழ்வு
திருநெல்வேலி பெயர் வரக் காரணமான நிகழ்வு

அதனால் வருத்தம் அடைந்த அவர் சிவபெருமானை நினைத்தபடியே பதற்றத்துடன் கோயிலுக்கு ஓடி வந்தார். அங்கு சென்று பார்த்தபோது இறைவனின் திருவிளையாடலால் அவர் காய வைத்திருந்த நெல் மணிகள் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்தன.

நெல் நனையாமல் இருந்ததைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பாண்டிய மன்னரான நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் அந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவனே வேலியிட்டுக் காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்டுவந்த ஊர், அதன் பின்னர் ’நெல்வேலி’ என்று அழைக்கப்பட்டது.

நெல்லையப்பர் கோயில்
நெல்லையப்பர் கோயில்

இறைவனைப் போற்றும் வகையில் திருநெல்வேலி என அழைக்கப்பட்ட புராண நிகழ்வை நினைவுகூரும் வகையில் நெல்லையப்பர் கோயிலில் இன்று சுவாமி சந்நிதி மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டன.

அதன் பின்னர் மழை பொழிவது போலவும், நெல் நனையாமல் காக்கப்பட்டது போன்றும் திருவிளையாடல் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சிறப்புப் பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் இடம் நெல்லையப்பர் கோவில் வீடியோ எல்.ராஜேந்திரன்

Posted by Vikatan EMagazine on Thursday, January 21, 2021
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு