Published:Updated:

பொன்னேரி: அஸ்திவாரம் அமைக்கத் தோண்டிய பள்ளத்தில் பச்சை நிற சாமி சிலைகள்... மரகதமாக இருக்குமா?!

சாமி சிலைகள் கண்டெடுப்பு
சாமி சிலைகள் கண்டெடுப்பு

பூமிக்கடியில் இருந்து தெய்வ சிலைகள் எடுக்கப்பட்டதையடுத்து ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி, மீட்கப்பட்ட சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, ஆரத்தி எடுத்து 'கோவிந்தா... கோவிந்தா' எனப் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாதன். டிராக்டர் பழுது பார்க்கும் தொழில் செய்துவரும் இவரின் தற்போதைய வீடு சிதிலமடைந்து இடிந்துவிழும் நிலைக்கு வந்துவிட்டதால் அதே இடத்தில் புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்கும் பணிகளை நேற்றைய தினம் மேற்கொண்டார்.

அஸ்திவாரம் தோண்டும் பணி
அஸ்திவாரம் தோண்டும் பணி

அப்போது, திடீரென கடப்பாரையில் கருங்கல் ஒன்று தட்டுப்பட்டது. அதையடுத்து, கோபி மற்றும் கட்டட பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து பொறுமையாக மண்வெட்டிகளைக் கொண்டு பள்ளத்தைச் சுற்றிலும் மண்ணை ஒதுக்கிப் பார்த்ததில், மூன்று சிலைகள் தெரிந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து, அனைவரும் பள்ளத்திலிருந்து பெருமாள், ஆண்டாள், மற்றும் அலமேலு அம்மாள் ஆகிய மூன்று தெய்வங்களின் சிலைகளைப் பத்திரமாக வெளியில் எடுத்தனர்.

பூமிக்கடியில் இருந்து தெய்வ சிலைகள் எடுக்கப்பட்டதையடுத்து ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி, மீட்கப்பட்ட சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, ஆரத்தி எடுத்து 'கோவிந்தா... கோவிந்தா' எனப் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வழிபட்டனர்.

இது குறித்துத் தகவலறிந்து அங்கு விரைந்த பொன்னேரி வருவாய்த்துறையினர் சிலைகளை மீட்டு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்று, நிலத்தின் உரிமையாளர் கோபியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சாமி சிலைகள்
சாமி சிலைகள்

பூமிக்கடியில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட மூன்று கருங்கல் சிலைகளும் லேசான பச்சை நிறத்தில் இருப்பதால், அவை கருங்கல் சிலைகளா அல்லது மரகத சிலைகளா என்பது குறித்து அறிந்து கொள்ளச் சிலைகள் தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாமி சிலைகள்
சாமி சிலைகள்

ஆனால், கொடூர் கிராம மக்கள் சிலைகள் எடுக்கப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் திருவுருவப் படம் மட்டுமே வைக்கப்பட்டு தாங்கள் வழிபட்டு வரும் பெருமாள் கோயில் ஒன்று இருப்பதால், மீட்கப்பட்ட பெருமாள், ஆண்டாள் மற்றும் அலமேலு அம்மாள் சிலைகளை அந்த கோயிலில் வைத்துச் ஊர்மக்கள் சிறப்பாகப் பூஜைகள் செய்து வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறையினரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்கத் தோண்டப்பட்ட பள்ளத்தில் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த கட்டுரைக்கு