Published:Updated:

திருச்செந்தூர்: 10 நாள்களுக்குப் பிறகு அனுமதி; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

கோயில் முன்பு திரண்ட பக்தர்கள்
கோயில் முன்பு திரண்ட பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 10 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். எப்போதும் கடலென பெருங்கூட்டம் முருகனின் தரிசனத்துக்காகத் திரளும் புண்ணிய பூமி திருச்செந்தூர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் ’ஆவணித் திருவிழா’ மற்றும் ’மாசித்திருவிழா’ என இரண்டு பிரமோற்சவத் திருவிழாக்கள் மிக முக்கிய திருவிழாக்களாகும்.

கடற்கரையில் திரண்ட பக்தர்கள்
கடற்கரையில் திரண்ட பக்தர்கள்

இந்தாண்டு ஆவணித்திருவிழா, கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை செப்டம்பர் 7-ம் தேதி வரை இந்தத் திருவிழா நடைபெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 27-ம் தேதி முதல் 10-ம் நாள் திருவிழாவான நேற்று 5-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7வது நாள் விழாவில் சுவாமி சண்முகர், வெட்டிவேர் சப்பரம் மற்றும் சிவப்புசாத்தி அலங்காரத்தில் எழுந்தருளல், 8வது நாள் விழாவில் பச்சைசாத்தி அலங்காரத்தில் எழுந்தருளல் தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பதால், திருக்கோயில் வளாகம், கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.

முடிக்காணிக்கை செலுத்திய பக்தர்கள்
முடிக்காணிக்கை செலுத்திய பக்தர்கள்

இருப்பினும், வெளியூர்களில் இருந்தது தரிசனத்திற்காக குடும்பத்துடன் வந்த பக்தர்கள், கோயிலுக்குச் செல்லும் நுழைவு வாயிலில் நின்றபடியும், தூரத்தில் நின்றபடியும் கோபுரத்தை நோக்கி வணங்கிவிட்டு ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், இன்று முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், அதிகாலை 5 மணி முதலே கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டத்தால், பொதுதரிசனம், கட்டண தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன வரிசையில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் முடிக்காணிக்கை செலுத்துவதற்குக் கட்டணம் கிடையாது என்பதால், அதிக எண்ணிகையிலான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர். கடலில் நீராடிட அனுமதி அளிக்கப்பட்டதைப் போல நாழிக்கிணற்றிலும் நீராட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு