Published:Updated:

ஜம்மு - காஷ்மீரில் 10 ஏக்கரில் திருப்பதி கோயில் கட்டும் பணி விரைவில் தொடக்கம்... நிர்வாகிகள் தகவல்!

கன்னியாகுமரி திருப்பதி கோயிலில் நடந்த வருஷாபிஷேக விழா
கன்னியாகுமரி திருப்பதி கோயிலில் நடந்த வருஷாபிஷேக விழா

திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் திருமணங்களுக்கு கோயில் மூலமாக இலவசத் தாலி வழங்கப்படும். எனவே திருமணம் நடத்த விரும்பும் ஏழைகள் 15 தினங்களுக்கு முன்னர் தேவஸ்தானத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

கன்னியாகுமரி கடற்கரையில் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட திருப்பதி வேங்கடேஷ்வர பெருமாள் கோயிலில் கடந்த 2019-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வேங்கடேஷ்வர பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி சந்நிதிகள் அமைந்துள்ளன. கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோயிலின் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் சென்னை ஆலோசனை மைய தலைவருமான சேகர் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் சுப்பாரெட்டி மற்றும் சேகர்ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் திருப்பதி கோயிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் வேங்கடாசலபதி கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக 10 ஏக்கர் நிலம் ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு வழங்கியுள்ளது. விரைவில் கோயில் அமைக்கக் கட்டுமானப் பணிகள் தொடங்கும். ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 35 திருப்பதி தேவஸ்தான கோயில்களுக்கு, திருப்பதி தேவஸ்தானம் மூலம் கோ பூஜைக்காக பசுக்கள் மற்றும் கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

யாகசாலை
யாகசாலை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழைகளுக்கு இலவசத் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் திருமணங்களுக்கு கோயில் மூலமாக இலவச தாலி வழங்கப்படும். எனவே திருமணம் நடத்த விரும்பும் ஏழைகள் 15 தினங்களுக்கு முன்னர் தேவஸ்தானத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திர நிர்வாகம் திருப்பதி கோயிலுக்காக ஐந்து ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. இதில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோசாலை மற்றும் திருமண மண்டபம் அமைக்கப்படும். தற்போது தேவஸ்தான கோயிலில் உள்ள கொடிமரம் கடல் காற்றினால் அரிக்கப்பட்டுள்ளது. கொடி மரத்தைச் சீரமைத்து விரைவில் தங்க முலாம் பூச ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு
திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு

குமரியில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் பக்தர்களின் கோரிக்கையின் படி பிரமாண்டமான கருடாழ்வார் சிலை நிறுவப்படும். மேலும் பக்தர்களின் வசதிக்காகவும், பக்தர்கள் கோயில் இருப்பிடம் குறித்து அறிந்து கொள்வதற்கு வசதியாகவும் கன்னியாகுமரி பகுதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மிகப்பெரிய அளவில் அலங்கார நுழைவாயில் அமைக்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு