Published:Updated:

``மன அமைதியுடன் வாழ, துறவு மனநிலையே உதவும்...!" - திருப்பூர் கிருஷ்ணன்

திருப்பூர் கிருஷ்ணன்
News
திருப்பூர் கிருஷ்ணன்

மதுரையில் நடந்து வரும் மகா பெரியவர் ஆராதனை விழாவில் பேச்சு.

``மன அமைதியுடன் வாழ, துறவு மனநிலையே உதவும்...!" - திருப்பூர் கிருஷ்ணன்

மதுரையில் நடந்து வரும் மகா பெரியவர் ஆராதனை விழாவில் பேச்சு.

Published:Updated:
திருப்பூர் கிருஷ்ணன்
News
திருப்பூர் கிருஷ்ணன்

``துறவு வாழ்க்கைக்காகக் குகைக்குப் போய் தவம் புரிய வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் அல்லது இருக்கும் இடத்திலிருந்து தவ வாழ்வில் ஈடுபடலாம்" என்று எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசினார்.

மகா பெரியவா
மகா பெரியவா

மதுரை அனுஷத்தின் அனுக்கிரஹம் அமைப்பு சார்பில் நடைபெற்று வரும் `மகா பெரியவா ஆராதனை' சிறப்பு நிகழ்ச்சியில் `உறவும் துறவும்' எனும் தலைப்பில் பேசிய எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், ``துறவு நெறி, துறவிகளுக்கு மட்டுமானது அல்ல. இந்து மதத்தைப் பொறுத்தவரை துறவு நெறி எல்லோருக்குமானது. பிரம்மச்சர்யம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என ஒவ்வொருவர் வாழ்விலும் நான்கு நிலைகள் அமைகின்றன.

பிரம்மசாரியாக இருந்து, பின்னர் மண வாழ்க்கை மேற்கொண்டு குறிப்பிட்ட வயதிற்கு பின் அனைவருமே துறவு மனப்பான்மையோடு வாழ வேண்டும். துறவு வாழ்க்கைக்காகக் குகைக்குப் போய் தவம் புரிய வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் அல்லது இருக்கும் இடத்திலிருந்து தவ வாழ்வில் ஈடுபட வேண்டும். புராணங்களில் அரசர்கள் வாரிசுகளுக்கு முடி சூட்டிய பின் கானகம் சென்று தவம் புரிந்ததாகப் படிக்கிறோம்.

திருப்பூர் கிருஷ்ணன்
திருப்பூர் கிருஷ்ணன்

குந்தி தேவி, காந்தாரி, திருதராஷ்டிரர் எல்லோரும் இறுதிக்காலங்களில் துறவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான். ஆதிசங்கரர், விவேகானந்தர், பரமாசார்யார்போல மணம் புரிந்து கொள்ளாத துறவியரும் உண்டு. அரவிந்தர், வள்ளலார் போல மண வாழ்வில் ஈடுபடாமல் துறவியானவரும் உண்டு.

ராகவேந்திரர், புத்தர் போலக் குழந்தை பெற்றுக் கொண்டபின் துறவியானவர்களும், பெண்களில் சாரதா தேவி, சக்கரையம்மா, ஆனந்தமயி, ஆண்டவன் பிச்சி போன்ற துறவிகளும் உண்டு.

விழாவுக்கு வந்திருந்தவர்கள்
விழாவுக்கு வந்திருந்தவர்கள்

ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் முதிர்ந்த பகுதியில் மனப்பக்குவம் அடைந்து துறவு மனம் பெற வேண்டும். இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாதிருக்க முதியவர்கள் துறவு மனநிலையை மேற்கொள்வதும், ஆன்மிகத்தில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும் உதவும்.

மண வாழ்வில் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் பிரம்மச்சர்யம் அனுசரிக்க வேண்டும்' என மகாத்மா காந்தியின் கோட்பாடும் துறவை வலியுறுத்துகிறது. ஒவ்வொருவரும் துறவு மனநிலை நோக்கிப் பயணப்பட்டு மன அமைதி பெறுவோம்" இவ்வாறு பேசினார்.

காஞ்சி மகா பெரியவர்
காஞ்சி மகா பெரியவர்

அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இன்றும் ஸ்ரீ மகா பெரியவா ஆராதனை விழா நடைபெறுகிறது.