Published:Updated:

`கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத் திருவிழா!’ - பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை

`அண்ணாமலையாருக்கு அரோகரா... உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா' என்ற முழக்கம் விண்ணைமுட்டும் அளவுக்கு, பக்தர்களின் பக்திப் பரவசத்தில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது.

தீபத்திருவிழா கொடியேற்றம்
தீபத்திருவிழா கொடியேற்றம்

சிவ பெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக இன்று தொடங்கியது.

அருணாசலேஸ்வரர் கோயில்
அருணாசலேஸ்வரர் கோயில்

ஆண்டுதோறும், மிகப் பிரமாண்டமாக இந்தத் திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படும். இந்த நாள்களில் பக்தர்களின் வெள்ளத்தில் திருவண்ணாமலை நகரமே அண்ணாமலையாரின் அருளால் பக்திப் பரவசத்தில் மிதந்து கிடக்கும். தீபத் திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றத்துக்கு முன்னதாக 3 நாள்கள் உற்சவம் நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழாவையொட்டி நவம்பர் 28-ம் தேதி ஸ்ரீதுர்கையம்மன் உற்சவமும், 29-ம் தேதி ஸ்ரீ பிடாரியம்மன் உற்சவமும், 30-ம் தேதி ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடைபெற்றன.

தீபத்திருவிழா கொடியேற்றம்
தீபத்திருவிழா கொடியேற்றம்

விழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6-ம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 7-ம் தேதி காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் பஞ்ச மூர்த்திகளின் மகா தேரோட்டமும் நடக்கிறது.

`2,500 சிறப்புப் பேருந்துகள்; 14 சிறப்பு ரயில்கள்!' - களைகட்டும் திருவண்ணாமலை தீபத்திருவிழா

விழாவின் மிக முக்கிய நிகழ்வான பரணி தீபம் டிசம்பர் 10-ம் தேதி அதிகாலை 4 மணிக்குக் கோயில் மூலவர் சந்நிதியில் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுகிறது.

`கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத் திருவிழா!’ - பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை

இந்த ஆண்டு தொடங்கியுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவில், உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தீவரமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.