Election bannerElection banner
Published:Updated:

கொரோனா பரவல் தடுப்பு முயற்சி... மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா ரத்து!

கபாலீஸ்வரர் கோயில்
கபாலீஸ்வரர் கோயில்

கொரோனா தாக்கம் காரணமாக, வருகிற 28-ம் தேதியன்று தொடங்கவிருந்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனிப்பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

சைவத் திருக்கோயில்களில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. பாடல்பெற்ற தலமான இங்கே நடைபெறுகிற உற்சவங்களில் சிறப்பு வாய்ந்தது பங்குனிப் பெருவிழா. திருத்தேரோட்டம், சம்பந்தர் பூம்பாவை விழா, அறுபத்துமூவர் திருக்காட்சி, ஐந்திருமேனிகள் விழா, திருக்கூத்தப்பெருமான் காட்சி என ஒவ்வோராண்டும் இவ்விழா களைகட்டும். இந்தாண்டும், பங்குனித் திருவிழாவை வருகிற 28-ம் தேதியன்று தொடங்கி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா தாக்கத்தின் காரணமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் பங்குனிப் பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கபாலீஸ்வரர் கோயில்
கபாலீஸ்வரர் கோயில்

உலகை வாட்டி வதைத்து வருகிற கொரோனா வைரஸின் பாதிப்பைத் தொடர்ந்து இந்தியா முழுவதிலும் எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக எல்லா வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் வந்து வழிபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் மயிலைக்கோயில் பங்குனித்திருவிழா ரத்தாகியுள்ளது. திருவிழா நடக்கும் தேதி குறித்த தகவலைப் பின்னர் அறிவிப்பதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறநிலையத் துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் மருதபிள்ளையிடம் பேசியபோது, ``பங்குனி உத்திரம் உள்ளிட்ட விசேஷங்கள் நடைபெறுகிற காலகட்டம் இது. ஆனால், திருவிழாக்களில் பக்தர்கள் திரளாகக் கூடுவது இந்த இக்கட்டான சூழ்நிலையில் நல்லதல்ல என்பதால், வைரஸ் தொற்றினைத் தவிர்க்கும் நோக்கில் எல்லாத் திருவிழாக்களும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. தற்போது மயிலைக் கோயில் பங்குனித் திருவிழாவும் தேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தங்கள் உடல்நலனிலும் பிறரது உடல்நலனிலும் அக்கறைகொண்டு வீட்டிலிருந்தபடியே இறைவனை நினைத்து பக்தர்கள் வேண்டிக்கொள்ளலாம்” என்றார்.

த. மருதபிள்ளை
த. மருதபிள்ளை

வைரஸ் பரவலைத் தடுத்திட அறநிலையத்துறை உத்தரவின்பேரில் பார்த்தசாரதி, வடபழநி, மதுரை, பழநி, திருச்செந்தூர், திருத்தணி, காஞ்சி, சுசீந்திரம், திருவாரூர், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியத் திருத்தலங்கள் அனைத்தும் பக்தர்களின் வருகையை நிறுத்தி மூடப்பட்டுள்ளன. எனினும், வழக்கமான காலபூஜைகள் அனைத்தும் எல்லாத் தலங்களிலும் வழக்கம்போல நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு மட்டும் அனுமதியில்லை. தற்போது, பல்வேறு திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டு வருவது, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு எடுத்துவரும் நடவடிக்கை என்பதைக் கருத்தில் கொண்டு பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகங்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு