Published:Updated:

ஆடும் இறைவனுக்கு ஆவணி சதுர்த்தசி அபிஷேகம்... சிவாலயங்களில் கோலாகலம்!

சைலபதி

நடராஜப் பெருமானுக்கு ஓர் ஆண்டில் நடைபெறும் ஆறு அபிஷேக தினங்களுள் ஒன்றான ஆவணி சதுர்த்தசி திதி இன்று.

Lord Nataraja
Lord Nataraja

சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம். கூத்தன், சபேசன், அம்பலத்தான் என்று தன் ஆடல் கோலத்தினால் போற்றப்படுவர் நடராஜப் பெருமான். இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கியலை விளக்கும் தத்துவரூபமாகத் திகழும் நடராஜரின் திருமேனி ஐந்தொழில்களையும் புரிதலை விளக்குகிறது.

Lord Nataraja
Lord Nataraja

உடுக்கை படைக்கும் ஆற்றலையும் நெருப்பு அழிக்கும் ஆற்றலையும் வலக்கையின் உட்புறம் காட்டுவது அருளும் ஆற்றலையும் இடக்கை மறைக்கும் ஆற்றலையும் தூக்கிய பாதம் ஆணவத்தை அழித்தலையும் மற்றொரு பாதம் மனமாயை அழித்தலையும் குறிக்கின்றன.

இத்தகைய சிறப்புகளை உடைய நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். நடராஜர் அபிஷேகம் மாசி சதுர்த்தசி , சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகிய ஆறு தினங்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

Lord Siva
Lord Siva

கோயில்களில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறும். அவை, திருவனந்தல் என்னும் அதிகாலை பூஜை, காலசந்தி எனப்படும் காலை பூஜை,  உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜை, சாயரட்சை எனப்படும் சாயங்கால பூஜை, ராக்காலம் எனப்படும் இரவு பூஜை அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜை ஆகியன. தேவர்களுக்கு ஒருநாள் என்பது, பூவுலகில் ஓர் ஆண்டாகும். தை முதல் ஆனி வரை உத்தராயனம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கிறோம். உத்தராயனம் தேவர்களின் பகல்பொழுதாகவும் தட்சிணாயனம் இரவுப் பொழுதாகவும் கருதப்படுகிறது. எனவே நாம் ஓர் ஆண்டில், தேவர்கள் ஆறுகால பூஜைகள் செய்யும் நாள்களில் நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் இடத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அரூபமாய் எழுந்தருளியிருப்பர் என்பது ஐதிகம். எனவே, அந்த நேரத்தில் நடராஜரின் அபிஷேகத்தை தரிசனம் செய்து நாம் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்று சொல்கிறார்கள் அடியவர்கள். குறிப்பாக, வறுமை நீங்கிச் செல்வச் செழிப்புடனான வாழ்க்கை அமையும். பாவங்களிலிருந்து விடுதலையும் பிறவிப் பெருங்கடலைக் கடக்க நல்லருளும் ஸித்திக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

Lord siva
Lord siva

இன்று ஆவணி சதுர்த்தசி திதி. இன்று (12.9.19) மாலை அனைத்து சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இன்று ஆடல் வல்லானுக்கு நடைபெறும் அற்புத அபிஷேகங்களை தரிசனம் செய்து நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறப் பெறுவோம்.